Published : 02 Aug 2015 01:48 PM
Last Updated : 02 Aug 2015 01:48 PM
தமிழ்மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும் இழையறாமல் இருந்துவருகிறது. அதன் பண்டைய இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் தொகுப்புகளில் 2381 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் ஐந்திணைகளிலும் வாழ்ந்த மக்கள் தமிழ் பேசினார்கள். குறிஞ்சி என்னும் முதல் நிலம் மலையும் மலை சார்ந்ததுமாகும். குறிஞ்சி நிலத் தலைவன் மானை வேட்டையாடிக் கொல்கிறவன். தேன் எடுக்கிறவன். குறிஞ்சியில் குறிஞ்சியென நீலமலர் பூத்து அழகு பொழிகிறது. புலி உறுமுகிறது. யானை காட்டுப் பகுதியில் பிளிறுகிறது. வேங்கை மரம் ஓங்கி வளர்ந்திருக்கிறது. அதன் தாழ்ந்த கிளை பற்றித் தலைவி புலி, புலி என்று கூச்சலிட்டுத் தோழிகளோடு விளையாடுகிறாள். புலியை விரட்ட வரும் தலைவன், தலைவியைக் கண்டு பேசி, காதல் கொள்கிறான். அவளும் அன்பு கொள்கிறாள். குறிஞ்சி நிலம் தனித்து அடையாளம் காணும் விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் குறிஞ்சிப் பேச்சு என்று சொல்லும்படியாக நிலம் சார்ந்த சொல்லெதுவும் இல்லை.
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’ என்று மருத நிலத்திற்கு வந்து கூவும் நெய்தல் மகள், எல்லா நிலத்திற்கும் உரிய, தெரியும் சொல்லில்தான் கூறுகிறாள். பண்டைய காலத்தில் தமிழகம், தமிழ் எனும் ஒரு மொழி பேசும் நாடாக இருந்தது. அதில் இன்னொரு மொழி பேசும் மக்கள் இல்லை. தமிழ் மக்கள் எல்லா நிலத்திலும் ஒரே முறையில் - ஒரே தொனியில் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. படிப்பு சார்ந்தும், வாழ்விடம் சார்ந்தும் பேச்சு என்பது மாறுபட்டு இருந்திருக்கும். அது இயல்புதான்.
சங்கப் பாடல்களில் பேச்சு மொழி என்பது அறிவுபூர்வமாக அறிந்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. அது பாடல்கள் வழியாகத் தெரிகிறது. சங்கப் பாடல்கள் தொகுப்பில் உழவர்கள், மகளிர், பொற்கொல்லர், கூலவணிகர், தச்சர்கள், அரசிகள், பாணர்கள், மன்னர்கள் என்று பலரின் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர்கள் வேறுபட்ட நிலங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆயினும் தொல்காப்பியம் கூறிய முதல், கரு, உரி என்னும் பொருளை ஏற்றுக்கொண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தலைவன், தலைவி, தோழி ஆகியோரின் பெயர்களைத் தவிர்த்திருக்கிறார்கள். மரம், செடி, கொடிகள், விலங்குகள், பறவைகள் பெயர் சுட்டியிருக்கிறார்கள். புலமையும்
கவித்துவமும் கொண்டிருக்கிறார்கள். உளவியலுக்கு முதன்மை கொடுத்து அலங்காரம் என்பதைத் தவிர்த்திருக்கிறார்கள். அதோடு இலக்கியத்திற்கான மொழி பற்றி தீர்மானமான முடிவுகள் பொதுவில் இருந்திருக்கின்றன. அதாவது பேச்சு மொழிக்கு இலக்கியத்தில் இடமில்லையென ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். ஆனால் பொதுவில் பேசப்படும் மொழியிலிருந்து தரப்படுத்தப்பட்ட வாழ்வியலை, இயற்கை வனப்பை, வாழ்க்கை முறையைத் துல்லியமாகச் சொல்வதற்குச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சங்க இலக்கியம் என்பது வாழ்வில் இருந்து உருவான லட்சிய வாழ்க்கையைச் சொல்வதாகும். சொல்லப்படும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற முறையில தரமான, நயமான சொற்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது பாடல்களின் வழியாகவே தெரிகிறது. அது சொல்லப்படாத மொழிக் கொள்கையாகவே இருந்திருக்கிறது. சொல்லப்படாத அது சொல்லப்பட்டிருப்பதின் வழியாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT