Published : 29 Mar 2020 08:04 AM
Last Updated : 29 Mar 2020 08:04 AM
இந்தியப் பண்பாட்டில் திருமணத்துக்குப் பிறகான காதலும் அது தொடர்பான உறவுச் சிக்கல்களும் என்றும் தீராத பிரச்சினைகளே. புகழ்பெற்ற இந்தித் திரைப்பட இயக்குநர் குரு தத், சிலப்பதிகாரத்தைப் படமாக்க விரும்பினார். அதற்கான திரைக்கதையை உருவாக்கும் பணியில்கூட ஈடுபட்டார். ஆனால், அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. இளவயதிலே குரு தத் இறந்துபோய்விட்டதால் அவரது கனவு கலைந்துபோனது. சிலப்பதிகாரம் ஏன் குரு தத்தை ஈர்த்தது? இன்று வரை இந்தித் திரைப்படங்களின் முக்கியக் கதையாக உள்ள, திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண்ணிடம் காதலில் விழுந்து மீண்டு வரும் கதாநாயகனின் கதையானது இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடியது என்பது குரு தத்தை வசீகரித்திருக்கக்கூடும்.
குரு தத்தின் வெற்றிப் படங்களெல்லாம் ஒரு ஆண், இரண்டு பெண்களின் காதலில் அலைபடுவதை மையக் கதையாகக் கொண்டவை. குரு தத்தின் சொந்த வாழ்க்கையும் அப்படியானதுதானே! புகழ்பெற்ற பின்னணிப் பாடகி கீதாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், சில ஆண்டுகளில் அவர்களுக்குள் மனவேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்துவந்தார்கள்.
குரு தத் இந்தி சினிமா நடிகை வஹிதா ரஹ்மானைக் காதலித்தார். அந்தக் காதலானது கீதாவை மேலும் வேதனையடைய வைத்தது. அவர்கள் ஜோடியாக நடித்த படத்தில் வஹிதா ரஹ்மானுக்கு கீதாவே குரல் கொடுத்துப் பாடியிருக்கிறார். அதில் வெளிப்படுவது சொந்த வாழ்வின் சோகமே.
சிலப்பதிகாரத்தை ‘கண்ணகி’ என்ற பெயரில் தமிழில் 1942-ல் திரைப்படமாக்கினார்கள். அதில் பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா நடித்திருந்தார்கள். ‘ஜூபிடர் பிக்சர்ஸ்’ தயாரித்த அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் பிரபல வசனகர்த்தா இளங்கோவன். இப்படத்தில் யு.ஆர்.ஜீவரத்தினம் கெளந்தி அடிகளாக நடித்திருக்கிறார். அவரது தோற்றம் இளமையானது. ‘பூம்புகார்’ படத்தில் கே.பி.சுந்தராம்பாள் கௌந்தி அடிகளாக நடித்திருக்கிறார்.
‘கண்ணகி’ திரைப்படத்தின் கதை சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபட்டது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அங்குள்ள துர்க்கைக் கோயில் ஒன்றைப் பூட்டி வழிபாட்டைத் தடுத்துவிடுகிறான். அதேநேரம், வானுலகில் சிவனின் சாபத்தால் மதுரையில் துர்க்கையாக உருவெடுக்கிறாள் பார்வதி. ஒருநாள் அந்தக் கோயிலுக்கு ஒரு வணிகன் வந்து விளக்கு போடுகிறான். மன்னரின் கட்டளையை மீறியதாக அந்த வணிகனின் தலையை வெட்டிவிடுகிறான் அரசன். அதற்குப் பழிதீர்ப்பதற்காக, பாண்டிய மன்னனின் மகளாகப் பிறக்கிறாள் துர்க்கை. இறந்துபோன வணிகன் பூம்பூகாரில் கோவலனாகப் பிறக்கிறான்.
பாண்டிய மன்னனின் மகளாகப் பிறந்த துர்க்கைக்குத் தோஷம் உள்ளது. அது பாண்டிய நாட்டை அழித்துவிடும் என ஆருடம் சொல்கிறார்கள். ஆகவே, அவளைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விடவே அவள் வணிகனால் கண்டெடுக்கப்பட்டு, பூம்புகாரில் கண்ணகியாக வளர்க்கப்படுகிறாள். அதே ஊரில் இருந்த கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. இது முன்ஜென்ம உறவு என்பதுபோல கதை செல்கிறது. மாதவியின் அறிமுகமும், பொருள் இழந்து மதுரைக்குப் போய்ப் படுகொலை செய்யப்படுவதும், அதற்கு நீதி கேட்டு மதுரையை கண்ணகி எரிப்பதும் அப்படியே சிலப்பதிகாரக் காட்சிகளே. ‘பூம்புகார்’ திரைப்படத்துடன் ஒப்பிடும்போது இந்தப் படம் சிறப்பானதில்லை.
தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக கண்ணகியைத் திராவிட இயக்கமே முன்னிலைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக வெளியானதே ‘பூம்புகார்’ திரைப்படம். கோவலனாக எஸ்.எஸ்.இராஜேந்திரன், கண்ணகியாக விஜயகுமாரி, மாதவியாக ராஜஸ்ரீ, கௌந்தி அடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நடித்திருக்கிறார்கள். படத்தின் இயக்கம் ப.நீலகண்டன். இசை ஆர்.சுதர்சனம். ‘என்னை முதன்முதலாகப் பார்த்தபோது’ பாடலும், ‘வாழ்க்கை எனும் ஓடம்’ பாடலும் மறக்க முடியாதவை.
தமிழ்நாட்டில் ஏன் கண்ணகிக்கு ஒரு கோயில்கூட இல்லை? மதுரை செல்லத்தம்மன் கோயில் பிரகாரத்தில் இடம்பெற்றிருக்கிறார் கண்ணகி. சிறிய சன்னதி. அதைத் தவிர, கேரள எல்லையிலுள்ள கண்ணகிக் கோட்டம் என்று அழைக்கப்படும் மங்கள தேவி கோயிலில் கண்ணகி சிலை இடுப்புக்குக் கீழே மட்டும் இருக்கிறது. மேலே உள்ள சிலை என்ன ஆனது என இன்றும் தெரியவில்லை. கேரளத்திலும் இலங்கையிலும் கண்ணகிக்குத் தனிக் கோயில்கள் இருக்கின்றன. ஒருவேளை தமிழகத்தில் இருந்த கண்ணகிக் கோயில்கள் காலமாற்றத்தில் உருமாறிவிட்டனவா என்றும் தெரியவில்லை.
சிலப்பதிகாரக் கதைக்கு ‘பூம்புகார்’ எனத் தலைப்பிட்டது மு.கருணாநிதியின் தனித்துவம். பூம்புகாரை வாழ்த்திப் பாடுகிறது சிலப்பதிகாரம். உண்மையில் பூம்புகார், மதுரை என்ற இரண்டு நகரங்களின் கதைதான் சிலப்பதிகாரம். காப்பியத்தின் மைய நிகழ்வுகளை அப்படியே வைத்துக்கொண்டு சுவாரஸ்யமான திரைக்கதையை மு.கருணாநிதி எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலமாகவே எளிய மக்கள் சிலப்பதிகாரத்தை அறிந்துகொண்டார்கள். கண்ணகி பத்தினி தெய்வமாக அடையாளப்படுத்தப்பட்டாள்.
படத்தின் தொடக்கக் காட்சியில் சிலப்பதிகாரம் பற்றிய வரலாற்றைத் திரையில் தோன்றி அறிமுகம் செய்து வைக்கிறார் மு.கருணாநிதி. இந்தப் படத்தின் மூலம் கண்ணகியின் வடிவமாக மக்கள் விஜயகுமாரியைக் கருதினார்கள். கொண்டாடினார்கள். நீதி கேட்டு பாண்டிய மன்னன் சபைக்கு வரும் கண்ணகியின் ஆவேசக் கோலமும், பூம்புகாரின் சிறப்புகளை அவள் சொல்லும் விதமும், மன்னன் நீதி தவறிவிட்டான் எனக் குற்றஞ்சாட்டும் கோபமுமாக விஜயகுமாரி மிகக் சிறப்பாக நடித்திருப்பார். அவர் பேசும் உயிர்த்துடிப்புள்ள வசனங்கள் படத்துக்குத் தனிச்சிறப்பாக அமைந்தன.
ஷியாம் பெனகல் தனது ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற தொலைக்காட்சித் தொடரில் சிலப்பதிகாரம் பற்றி ஒரு பகுதி இயக்கியிருக்கிறார். நடனக் கலைஞர்கள் பலரும் அதை நாட்டிய நாடகமாகவும் நடத்தியிருக்கிறார்கள். ‘கரும்பு’ என்ற படத்தில் சலீல் சௌத்ரி இசையில் ‘திங்கள் மாலை வெண்குடையான்’ என்ற சிலப்பதிகாரப் பாடல் வெளியாகியுள்ளது. சிலப்பதிகாரம் முழுமையாக இசைக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்பதற்கு அது ஒரு சிறந்த உதாரணம். ஷேக்ஸ்பியர் நாடகங்களைச் சமகாலச் சூழலுக்குப் பொருத்தமாக மாற்றித் திரைப்படம் எடுப்பதுபோல சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையும் மீண்டும் திரைப்படமாக எடுக்கலாம். இந்த இரு காப்பியங்களும் பேசும் அறம் என்றைக்குமானதுதானே!
- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT