Published : 15 Aug 2015 11:53 AM
Last Updated : 15 Aug 2015 11:53 AM
சபரிமலைக்கான சரண கோஷம் ஒன்றுண்டு. ‘கட்டும் கட்டும் சாமிக்கே! கதலிப் பழமும் சாமிக்கே!’ என்று. அதுபோல ‘மெட்ரோ ரயிலும் சென்னைக்கே, மோனோ ரயிலும் சென்னைக்கே, புறவழிச் சாலையும் சென்னைக்கே, வளையச் சாலையும் சென்னைக்கே!’ இரண்டு வழித்தடங்களில் சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அரசுகள் 14,600 கோடிகள் செலவு செய்துள்ளன என்கிறார்கள்.
ஏன் கோவைக்கு, சேலத்துக்கு, திருச்சிராப்பள்ளிக்கு, மதுரைக்கு இந்த வாய்ப்புகள் இல்லை? புதிய குளிர்பதன, தாழ்தளப் பேருந்துகள் சென்னை சாலைகளில் ஓடும். ஓட்டை உடைசல் ஈயம் பித்தளை வாகனங்கள் நாகர்கோவிலில் சாலைகள் என்று சொல்லப்படும் பாதைகளில் ஓடும்.
சாலைகளுக்கும் பேருந்துகளுக்குமே இதுதான் கதி என்றால், நம்மூரில் புத்தகங்கள், புத்தகக் காட்சிகள் கதியைச் சொல்லவும் வேண்டுமா?
கோவையின் புத்தக வாசிப்புக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. 1989 ஆகஸ்டில் மும்பையிலிருந்து புலம்பெயர்ந்து கோவைக்கு நான் வரும்போது எனக்கு இங்கு அறிமுகமானவர்கள் இருவரே. கவிஞர் சிற்பி, கவிஞர் புவியரசு. மற்ற எல்லோரும் முகமறியாத வாசகர்கள். மூன்றாவது நான் தேடிப்போய் அறிமுகம் செய்துகொண்டது விஜயா பதிப்பகத்து அண்ணாச்சி வேலாயுதம்.
பின்னர் நான் அறிந்துகொண்டேன், கோவையில் 1979-ல் முதன்முதலாக ‘வாசகர் திருவிழா’ நடத்தியது அவர்தான் என்று. விக்டோரியா ஹாலில் கண்காட்சியில் அன்றே ‘நேருக்கு நேர்’ , ‘வாசகர் சந்திப்பு’, ‘தபால் பெட்டி’ போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வாசகர்களை ஈர்த்திருக்கிறார்கள். இத்தனைக்கும் 1977-ல் தொடங்கப்பெற்ற விஜயா பதிப்பகத்துக்கு அன்று புத்தக விற்பனை நிலையம் இல்லை. பல்பொருள் அங்காடி ஒன்றில், தலைக்காவிரிபோல் புத்தக விற்பனை இருந்தது.
பொதுவுடைமை இயக்கத்தின் பங்கு
அத்தியாவசியப் பண்டங்களின் பட்டியலில், கொங்கு மண்டலத்தில் புத்தகங்கள் இடம்பெற்ற காரணங்கள் வலுவானவை. முதன்மையான காரணம் பொதுவுடைமை இயக்கம்; அடுத்து திராவிட இயக்கம் எனலாம். பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் தோழர் ஜீவா முதல் தோழர் நல்லகண்ணு ஈறாக ஆற்றிய உரைகள் புத்தக வாசிப்பை வலுப்படுத்தின. இன்றும் கருத்தியல் முரண்கள் எத்தனை இருந்தாலும் புத்தக வாசிப்பில் இடதுசாரித் தோழர்களை மிஞ்ச இயலாது.
இன்னொரு காரணம், இங்கிருந்த பதிப்பகங்களும் புத்தக விற்பனை நிலையங்களும். அறிஞர் அ. சீனிவாசராகவன் நூல்களை வெளிட்ட மெர்குரி பப்ளிகேஷன்ஸ். திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரையும் என்.வி.நாயுடுவின் ‘காப்பிய இமயம்’ நூலும், ‘தமிழக வரலாறு மக்கள் மக்களும் பண்பாடு’ என்ற டாக்டர் கே.கே. பிள்ளை நூலும் வெளியிட்ட பழனியப்பா பிரதர்ஸ். நாமக்கல் கவிஞரின் கவிஞர் பதிப்பகம் போன்றவை. சோஷலிஸ்ட் கட்சிப் போராளியான கோவிந்தனின் சமுதாயம் பிரசுரம் தீவிரமான நூல்களை வெளியிட்டது. அவரது வீட்டில்தான் கவிஞர் பிரமிள் தங்கியிருந்தார். பரிதிமாற் கலைஞர் என்ற நாமம் பூண்ட சூரிய நாராயண சாஸ்திரியின் வாரிசுகள் வெரைட்டி ஹால் சாலையில் புத்தகக் கடை வைத்திருந்தார்கள்.
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கும் சக்தி வை.கோவிந்தனின் சக்தி காரியாலயத்துக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துக்கும் கோவையில் கிளைகள் அமைந்தன. கவிஞர் புவியரசுவின் நண்பர் சி.கெ. ஆறுமுகம் புத்தகம் கடை, மதுரை சங்கு கணேசன் வகையறாவினர் நடத்திய மகள் நிலையம் என்பவை குறிப்பிடத் தகுந்தவை. காலம் சென்ற தோழர் விடியல் சிவா அற்புதமான பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய ஆய்வு நூல்களை வெளியிட்டார். இன்றும் விடியல் ஊக்கத்துடன் செயல்படுகிறது.
தமிழ்ப் புத்தகம், ஆங்கில அட்டை
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழில் புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், அட்டையும் முகப்புப் பக்கமும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அன்று சென்னைப் பல்கலைக்கழக வெளியீடான ‘பாணர்’ என்றொரு புத்தகம், ஈ. புருஷோத்தம நாயுடு எழுதியது, அட்டை ஆங்கிலத்தில். அது இன்றும் என் கைவசம் உண்டு. கோவையின் ஆர்.கே. சண்முகம் செட்டியார் இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்தபோது, சென்னை மாகாணத்தின் கல்வி அமைச்சராக இருந்தவர் அவினாசிலிங்கம் செட்டியார். அவரது முயற்சியால் தமிழ்ப் புத்தகங்களின் அட்டை தமிழிலேயே இருக்கலாம் என்ற சட்ட அனுமதி கிடைத்தது. கொங்கு மண்டலப் படைப்பாளிகள் என நீண்ட பட்டியல் உண்டு அதை எழுதிட இந்த பக்கம் காணாது.
கோவையில் தமிழ் வளர்ந்த காரணத்துக்கு பேரூர் தமிழக கல்லூரியும் சரவணம்பட்டி கவுமாரமடமும் ஆற்றிய பங்கு பெரும் பங்கு. பெரும் புலவர்கள் உருவாக்கிய கல்லூரி பேரூர் தமிழக கல்லூரி.
கொங்கு மண்டலத்தின் வாசிப்புப் பழக்கத்துக்குப் பேருதவிப் புரிந்தவர் அருட்செல்வர் நா.மகாலிங்கம். வர்த்தமானன் பதிப்பகம் மூலம் மானிய விலையில் தமிழ் கூறு நல்லுலகுக்கு அவர் வழங்கிய நூற்தொகுதிகள், பன்னிரு திருமுறைகள், திருவருட்பா, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், அஷ்டப் பிரபந்தம், திருமந்திரம், சித்தர் பாடல்கள், பதினெண் கீழ்க்கணக்கு முதலானவை. புத்தகங்களையும் அவற்றை எழுதியவர்களையும் நேசித்தவர் அவர்.
கோவையின், கொங்கு மண்டலத்தின் வாசிப்பு என்பது பரவலானதும் ஆழமானதும் ஆகும். சென்னைப் புத்தகத் திருவிழாவில் நூல் வாங்குபவர்கள் சென்னைக்காரர்கள் மட்டுமல்ல. கொங்கு நாட்டிலிருந்து பெரும்படை ஒன்றும் போய் வருகிறது. மாதாமாதம் கோவை விஜயா பதிப்பகத்தில் வாங்குவது போக, நானே சென்னை, ஈரோடு, மதுரை என்று அலைகிறேன், புத்தகக் காட்சிகளில் கனத்த பைகளுடன்.
எழுத்தாளர்களைக் கொண்டாடுபவர்கள்
கொங்கு மக்கள் புத்தகங்களை நேசிப்பவர்கள். எழுத்தாளர் களைக் கொண்டாடுபவர்கள். அனைத்துத் தரப்பு மக்களும் புத்தகம் வாங்குகிறார்கள். கொங்கு மக்கள் பொதுவாக மரபும் பண்பும் பேணுபவர்கள். மார்க்சியமோ பெரியாரியமோ அந்தப் பண்புகளை அவர்களிடமிருந்து விலக்குவதில்லை.
இங்கு ஆசிரியர்கள் புத்தகம் வாசிக்கிறார்கள். மாணவர்கள் புத்தகம் வாசிக்கிறார்கள். தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று சகல தரப்பினரும் புத்தகம் வாசிக்கிறார்கள். அண்மையில் நான் வீடுகட்டியபோது மின்சாரப் பணிபுரிந்த, தண்ணீர்க் குழாய்கள் அமைத்த, வண்ணம் பூசிய, தச்சு வேலை செய்த தோழர்கள் எல்லோருமே என்னை அறிந்திருந்தார்கள்.
அண்மையில் இருமலுக்கு மருந்தாக, கோவை கடைவீதியில் பனம் கற்கண்டு வாங்க நின்றேன். கால் கிலோ ரூ. 90-தான். இரண்டு நல்ல மிளகைப் பல்லால் உடைத்து, ஒரு துண்டு பனங்கற்கண்டுடன் வாயில் ஒதுக்கிக் கொள்வேன். தெருவில், கடைவாசலில் நின்று பொருள் வாங்கும்போது பொற்கொல்லர் வேலை பார்க்கும் இளைஞர் துண்டுத் தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கிப் போனார். உக்கடம் பழக்கடையில் பணிபுரியும் கோழிக்கோட்டு மலையாள இளைஞர் ஒருவர் என்னிடம், “ஐயா, நீங்கள் நாஞ்சில் நாடனா?” என்றார். எல்லாவற்றுக்கும் மேலாக, பேருந்தில் பக்கத்து இருக்கையில் இருந்தவர் தனது கவிதைத் தொகுப்புக்கு என்னிடம் முன்னுரை கேட்டார்.
கோவைக் கல்லூரிகளின் தமிழ் மன்றக் கூட்டங்களில் பெருமளவு மாணவர்கள் பங்கேற்கின்றனர்; வினாக்கள் தொடுக்கின்றனர் என்பது என் அனுபவம். ஒரு நாள் இரவில் மதுரையிலிருந்து கோவைக்குப் பயணம் செய்தேன். நடத்துநர் எனக்குப் பயணச்சீட்டு தந்தார், பணம் வாங்கிக்கொள்ள மறுத்தார். இவை கோவையின் வாசிப்புத் திறனுக்குச் சான்றுகள்.
இத்தனை இருந்தும் கோவையின் புத்தகக் காட்சிகள் இதுவரை பெரிய வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. இங்கு புத்தகங்கள் வாங்கப்படாமல் இல்லை. ஆனால், புத்தகக் காட்சிகளில் ஏன் கூட்டம் இல்லை என்பதைப் புத்தகத் திருவிழா நடத்துபவர்கள் யோசிக்க வேண்டும். ஒரு நல்ல திருவிழா எவரையும் வசீகரிக்கும். மக்கள் மீது குறைசொல்வதில் அர்த்தமில்லை என்பது என் எண்ணம்.
- நாஞ்சில் நாடன்,
‘சூடிய பூ சூடற்க’ முதலான நூல்களின் ஆசிரியர்,
சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT