Published : 15 Mar 2020 09:31 AM
Last Updated : 15 Mar 2020 09:31 AM
ஒரு சடங்குபோல நானும் முதலிலேயே கூறிவிடுகிறேன். ‘இந்து தமிழ்’ நாளிதழில் பிப்ரவரி 16 அன்று வெளிவந்த சாரு நிவேதிதாவைப் பற்றிய த.ராஜனின் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. ஒரு சுரணையுள்ள சமூகம் ‘காமரூப கதைகள்’ நாவலைத் தடைசெய்திருக்கும் என்று சாரு நிவேதிதா சொல்வதில் நுணுக்கமான ஒரு விஷயம் இருக்கிறது. தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர் எழுதவில்லை. தடைசெய்யுங்கள் என்றும் மன்றாடவில்லை. ‘காமரூப கதை’களைத் திறந்த மனதோடு படிப்பதற்கு முந்தைய நிலைதான் தடைசெய்வது. அதற்கு அடுத்த நிலை என்பது அதைப் பற்றி அறிவுத்தளத்தில் ஒரு உரையாடல் நிகழ்ந்து, பிறகு அந்தத் தடையை நீக்கி, அந்தப் புத்தகத்தை ஒரு சமூகம் படிக்கும் நிலைக்குக் கொண்டுசெல்வது.
இந்த இடைப்பட்ட ‘தடை’க்காலத்தில் உலகம் முழுக்க இருக்கும் அறிவுஜீவிகளால் கவனிக்கப்பட்டு, கொஞ்சம் புகழடைந்து, பெரும் வாசகப் பரப்பை எட்டுவது. இப்படிப் புகழடைவதே ஒரு குறுக்குவழிதான். இச்சமூகம் எப்படி இருக்கிறது பார் என்ற கிண்டல்தான், தடைசெய்தாலாவது பெரிய ஆளாகி இருப்பேன் என்ற சாருவின் நக்கல் ஸ்டேட்மென்ட். “நான் அரசியல் வாதிகளைப் பற்றி எழுதியிருப்பதைப் போல வெளிநாட்டில் யாரேனும் எழுதியிருந்தால் கைதுசெய்யப்பட்டிருப்பார்கள். இங்கே அப்படி எல்லாம் இல்லை. ஏனென்றால், இங்கே எந்த அரசியல்வாதியும் இலக்கியத்தைப் படிப்பதே இல்லை” என்ற சாருவின் இதே கிண்டலுடன் இதைப் பொருத்திப் படிக்க வேண்டும். இச்சமூகத்துக்குச் சுரணை இல்லை என்பதெல்லாம் அடுத்த படி. இச்சமூகம் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கவில்லை என்பதே சாருவின் முதல் குற்றச்சாட்டு. படித்தால்தானே சுரணை இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியும்!
இலக்கியத்திலும் கலாச்சாரத்திலும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் கோலோச்சிக்கொண்டிருந்த நாம் இன்று எந்த நிலையில் இருக்கிறோம் என்று மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் அவலம் புரியும். சாரு அடிக்கடி குறிப்பிடும் பிரான்ஸ், சீலே போன்ற நாடுகளின் அதிபர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அங்கிருக்கும் எழுத்தாளர்களைத் தெரியும். அந்த எழுத்தாளர்களின் கருத்துகள் அந்தச் சமூகத்தில் சின்ன தாக்கத்தையாவது ஏற்படுத்தும். இங்கே சூழல் அதுவல்ல. கேரளம், வங்கம், கர்நாடகம் இந்த விஷயத்தில் தமிழகத்தைவிட சில அடிகளாவது முன்னே இருக்கின்றன. ஒரு எழுத்தாளனுக்குத் தமிழகத்தில் பொதுமக்களிடையே என்ன அடையாளம்? அவன் ஒரு அனாமதேயன். இந்த அடிப்படையில்தான் தடைசெய்தாலா வது புகழ் பெற முடியும் என்று சாரு ‘விரக்தி கிண்டல்’ அடிக்கிறார்.
தமிழ்ப் பெண்களின் கற்பைப் பற்றி குஷ்பு சொன்ன ஒரு கருத்துக்காக தமிழகம் முழுக்கப் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுக்க அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு ஊர் ஊராக இழுத்தடிக்கப்பட்டார். இதில் எந்தச் சாதியையும் எந்த வட்டாரத்தையும் குஷ்பு குறிப்பிடவில்லை. குஷ்பு சொன்னதைத் தாண்டி, பல பகீர் ரகக் கருத்துகளை சாரு தன் நாவல்களில், டிவி பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அவையெல்லாம் எந்த ஒரு அலையையும் கிளப்பவில்லை. பேச்சு மூச்சே கிடையாது. ஏன்?
இந்த அடிப்படையில்தான் சாரு தன்னுடைய ‘காமரூப கதைகள்’ தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார். தமிழக மக்களுக்குச் சுரணை உணர்வு இல்லாததால் சாரு நடமாடிக்கொண்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT