Published : 01 Mar 2020 10:49 AM
Last Updated : 01 Mar 2020 10:49 AM
மலையாள இலக்கியப் படைப்புகளைக் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் மொழிபெயர்த்துவருபவர் கே.வி.ஜெயஸ்ரீ.
மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் என்று சொல்லத் தகுந்த மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சங்கக் காலகட்டப் பின்னணியில் எழுதப்பட்ட திரில்லர் கதை இது. மூவேந்தர்களின் சதியால் வேள்பாரி கொல்லப்படும் சம்பவம்தான் கதையின் மையம். பரணரும் கபிலரும் ஔவையும் கதாபாத்திரங்களாகவே இடம்பெறுகிறார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒரு பாணர் குலத்தவர் செய்யும் பயணம் வழியாக அந்தக் காலகட்டத்திய தமிழ் மனநிலப்பரப்புகளைக் கையகப்படுத்தியிருக்கும் படைப்பு இது. பல நூறு ஆண்டுகளாகத் தமிழ் வாழ்க்கையின் மாறாத அடிப்படை உணர்வுகளையும், மாறியவற்றின் தடயங்களையும் இந்தப் படைப்பில் பார்க்க முடியும். இன்மையிலிருந்து வந்து இன்மைக்குப் போவதாக இருக்கும் உயிர் வாழ்க்கைதான் இந்த நாவலின் மையம். அந்த இயல்பை வெளிப்படுத்தும் களமாக இந்த நாவல் உள்ளது. ஐந்திணைகளின் மலர்கள், விலங்குகள், பறவைகள், அகப்பாடல்கள், புறப்பாடல்கள், திருக்குறள் வழியாகவும் பிளினி, தாலமி போன்ற பயண எழுத்தாளர்கள் வழியாகவும் தனது நாவலுக்கு வரலாற்றுரீதியான வலுவான பின்னணியைத் தந்திருக்கிறார் மனோஜ். ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலைப் படித்து முடிக்கும்போது நாம் இன்று வாழும் தமிழ் நிலத்துக்குள் ஒரு சங்க கால நிலம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர முடியும்.
பொதுவான மலையாள வாசகர்களிடம் தமிழ் இலக்கியம் சார்ந்த ஈடுபாடு எப்படி உள்ளது?
மலையாள லிபியில் தமிழின் சிலப்பதிகாரத்தை அப்படியே பதிப்பித்துள்ளனர். அவர்கள் அதை மலையாள இலக்கியம்போல படிக்கின்றனர். ப்ராசீன இலக்கியம் என்று சொல்லப்படும் பிரிவில் பழந்தமிழ் இலக்கிய நூல்கள் மொழிபெயர்ப்பாகிவருகின்றன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்றவை இளங்கலை படிக்கும் மாணவர்களுக்குப் பாடமாக இருக்கின்றன. கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள அடிமாலியில் ஒரு டுட்டோரியலில் தமிழாசிரியையாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியபோது மாணவர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுக்கொடுத்த அனுபவத்திலிருந்து இதைச் சொல்கிறேன்.
உங்கள் பின்னணி, மொழிபெயர்ப்புப் பணிக்கு அறிமுகமானது பற்றிச் சொல்லுங்கள்?
என் பெற்றோர் பாலக்காட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு வேலைக்காக வந்தவர்கள். நான் திருவண்ணாமலையில் பிறந்து அரசு கலைக் கல்லூரியில் படித்தவள். நானும் எனது தங்கையும் சேர்ந்துதான் வாசிப்பு, மொழிபெயர்ப்பைச் செய்யத் தொடங்கினோம். எல்லோரையும் போல ஜனரஞ்சகப் பத்திரிகை எழுத்துகளில்தான் ஈடுபாட்டோடு தொடங்கினோம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எங்களது வாசிப்புத் தளத்தை மாற்றியது. மலையாளக் கதைகளும் தமிழ்ச் சிறுகதைகளும் சேர்ந்து ஒரு தொகுப்பை ‘பச்சை இருளனின் சகாவான பொந்தன் மாடன்’ என்ற பெயரில் கொண்டுவந்தோம். பின்னர், பால் சக்கரியாவின் ‘இரண்டாம் குடியேற்றம்’ கதையை மொழிபெயர்த்தேன். “இதை மொழிபெயர்த்த கைகளில் ஒரு விஷயம் உள்ளது. இவரைப் பாதுகாக்க வேண்டும்” என்று சுந்தர ராமசாமி பாராட்டினார். பெண்களை மையமாக வைத்து பால் சக்கரியா எழுதிய கதைகளை மொழிபெயர்த்து ‘இதுதான் என் பெயர்’ தொகுப்பாக வெளிவந்தது. இந்தக் கதைகள் கையெழுத்துப் பிரதியாக இருந்தபோது, பிரபஞ்சன்தான் அதைக் கையோடு எடுத்துச்சென்று ‘கவிதா’ பதிப்பகத்தில் சேர்ப்பித்துப் புத்தகமாகக் கொண்டுவந்தார். பிரமிப்போடு பார்த்த எழுத்தாளரான அவர் அதன் பின்னர் எனக்கு நண்பனாக, தந்தையாக இப்படித்தான் ஆனார்.
மலையாள நவீன இலக்கியம் தமிழில் வாசிக்கப்பட்டும், மொழிபெயர்க்கப்பட்டும் வரும் வேகத்தில் தமிழ் நவீன இலக்கியம் மலையாளத்தில் வாசிக்கப்படுகிறதா? அதற்கு அங்கீகாரம் இருக்கிறதா?
தகழி, பஷீர் தொடங்கி சந்தோஷ் எச்சிகானம் வரை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எல்லாம் இங்கே தெரிந்த அளவு நம் படைப்புகளும் படைப்பாளிகளும் அங்கே போகவில்லை. மலையாள இலக்கியங்கள் எழுதப்படும் வேகத்தில் இங்கே மொழிபெயர்க்கப்படுகின்றன. சிவசங்கரி, பாமா, வாஸந்தி, சல்மா, லீனா மணிமேகலை, சாரு நிவேதிதா போன்ற சில எழுத்தாளர்கள்தான் அங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றனர். சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகிய எழுத்தாளர்கள் அவர்களது இருமொழிச் செயல்பாடுகள் காரணமாக அறியப்பட்டிருக்கிறார்கள். போதுமான அளவுக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகள் அங்கே மொழிபெயர்ப்பில் கிடைப்பதில்லை. தி.ஜானகிராமனை அவர்களுக்குத் தெரியாது.
சங்க காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு மலையாளத்தில் எழுதப்பட்ட நாவல் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’. ஒரு மொழிபெயர்ப்பாளராகத் தமிழில் மொழிபெயர்க்கும்போது எப்படியான சவால்களை எதிர்கொண்டீர்கள்? உங்களுக்கு யாராவது இதுதொடர்பில் உதவினார்களா?
நாவலாசிரியர் மனோஜ் குரூர், மலையாள லிபியில் எழுதிய தமிழ் நாவல் என்றே இதைச் சொல்வேன். அதை அப்படியே மொழிபெயர்ப்பதே போதுமானதாக இருந்தது. சம்ஸ்கிருதம் அதிகம் கலந்த மலையாளத்தில், ஒரு சம்ஸ்கிருத வார்த்தையைக்கூட இந்த நாவலில் மனோஜ் பயன்படுத்தவில்லை. மலையாளத்தில் இருக்கும் சம்ஸ்கிருத ஆதிக்கத்தை விலக்கிவிட்டுப் பார்த்தாலே தமிழுக்கு நெருக்கமாகிவிடும் என்ற உண்மையை இந்த நாவல் வழியாகப் புலப்படுத்தியுள்ளார். மலையாள மொழி தன் திராவிட வேர்களைத் தமிழில் தேடும் முயற்சி என்றும் இந்த நாவலைச் சொல்லலாம்.
மலையாளக் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ஆற்றூர் ரவிவர்மா மொழிபெயர்த்த தமிழ்ப் புதுக் கவிதைகளின் தொகுப்பான ‘புதுநானூறு’ புத்தகம், மலையாள எழுத்தாளர்கள் இடையே செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. ஜெயமோகன் நடத்திய தமிழ்-மலையாளக் கவிஞர்களின் சந்திப்புகளும் இந்த நாவலுக்கு உந்துதலாக இருந்துள்ளதாக மனோஜ் கூறியுள்ளார்...
ஆற்றூர் ரவிவர்மா, ஜெயமோகனின் தாக்கம் பெற்றவர்தான் மலையாளப் பேராசிரியரும் கவிஞருமான மனோஜ் குரூர். தமிழை முறையாகப் படித்தவர். சென்னை பழைய புத்தகக் கடைகளில் அரிய தமிழ் நூல்களைத் தேடுவதற்காகவே பயணித்துவருபவர். மலையாளத்தில் சம்ஸ்கிருதத்தைத் தவிர்த்து எழுதும்போது மொழிரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் சங்க காலத்தின் தொடர்ச்சியை அவர் பார்த்ததன் விளைவே இந்த நாவல். இன்றைய மலையாளிக்கு மலையாளத்துக்கும் ஆதித்தமிழுக்கும் இடையிலான ஒற்றுமையை அறிமுகப்படுத்துவதற்காகவே மனோஜ் இந்த நாவலை எழுதியுள்ளார்.
புதிய தலைமுறை தமிழ் எழுத்தாளர்களில் மலையாளச் சூழலுக்கு உடனடியாக மொழிபெயர்க்க வேண்டுமென்று சொன்னால் யார் யாரைப் பரிந்துரைப்பீர்கள்?
உண்மையிலேயே சொன்னால், எனக்கு சமீப காலமாகப் படிக்க நேரம் கிடைப்பதில்லை. ஒரு மொழிபெயர்ப்பைச் செய்வதற்கே ஏழெட்டு மாதங்கள் செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதனால், என்னால் சொல்ல முடியவில்லை.
உங்கள் தங்கை ஷைலஜா, கணவர் உத்திரகுமாரன், தங்கையின் கணவர் பவா செல்லதுரை எல்லோருமே எழுத்து, இலக்கியப் பின்னணியைக் கொண்டவர்கள். இந்தச் சூழல் எப்படி உள்ளது?
நாங்கள் இரண்டு குடும்பங்களாகத் தனித் தனி வீடுகளில் வசிக்கிறோமே தவிர சேர்ந்தே செயல்படுபவர்கள்தான். எனது கணவர் மட்டுமல்ல; எனது மகள் சுகனாவும்கூட மொழிபெயர்ப்பாளர்தான். அவள் மூன்று புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறாள். நான் மொழிபெயர்ப்பதைப் பார்த்து என்னைக் காப்பியடிக்காரி என்று கிண்டல் செய்தபடியே அவளும் மொழிபெயர்ப்பாளர் ஆகிவிட்டாள். இப்படியாக என்னுடைய வீடு என் ஈடுபாடுகளை, பணிகளை அரவணைக்கும் இடமாகவே உள்ளது.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
**********************************************
நிலம் பூத்து மலர்ந்த நாள்
மனோஜ் குரூர்
தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீ
வம்சி புக்ஸ்
டி.எம்.சாரோன், திருவண்ணாமலை - 606601.
தொடர்புக்கு: 94458 70995
விலை: ரூ.300
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT