Published : 23 Feb 2020 09:24 AM
Last Updated : 23 Feb 2020 09:24 AM
ஆகஸ்ட் 12, 1844. பிரிட்டிஷ் ராணுவத் தரைப்படையின் 80-வது பிரிவைச் சேர்ந்த வீரர்கள், ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி ராணுவக் குடியிருப்பிலிருந்து அணிவகுத்து கல்கத்தாவுக்கு நான்கு கப்பல்களில் புறப்பட்டுச் சென்றனர். அந்தக் கப்பல்களில் ஒன்றான ‘பிரிடன்’, 431 பேரோடு தனது பயணத்தைத் தொடங்கியது. அதில் 35 பெண்கள், 43 குழந்தைகளும் இருந்தனர். ஒன்றரை மாதத்துக்குப் பின்னர், மலாகா நீரிணைக்குள் நுழைந்தபோது, வலுவான காற்றையும் சூறாவளியையும் சந்திக்க வேண்டியிருந்தது.
அடுத்த மாதமும் ‘பிரிடன்’ அசௌகரியமான பருவ நிலையையே சந்தித்தது. நவம்பர் 10-ம் தேதி, காற்று கொடூரமான சூறாவளியாக மாறி நிலைகுலையச் செய்துவிட்டது. சில நாட்கள் அமைதிக்குப் பிறகு மீண்டும் புயல் வீரியத்துடன் வந்து கப்பலைப் புரட்டிப்போட்டது. ஒருவழியாக புயல் கொஞ்சம் அடங்கத் தொடங்கியபோது அரை மைல் தொலைவில் தம்மைத் தொடர்ந்து ஒரு கப்பல் வருவதைப் பார்த்தனர்.
50 மணி நேரப் போராட்டம்
மீண்டும் காற்று வலுப்படத் தொடங்கியதும் ‘பிரிடன்’ நிலைகுலைந்து திக்குமுக்காடியது. எந்த நேரத்திலும் கப்பல் நொறுங்கலாம் என்ற நிலை உருவானது. சுற்றி எதையும் பார்க்கவே முடியாத கும்மிருட்டிரவு. மின்னல் வெளிச்சத்தின்போது கப்பல் ஊழியர்கள் மரங்களைப் பார்த்தனர் - தரை தட்டி கப்பல் ஒதுங்கியிருந்தது. கப்பலில் திகிலடைந்துபோயிருந்தவர்களுக்கு நிம்மதி வந்தது. 50 மணி நேர நீண்ட புயல் பயணத்துக்குப் பிறகு அவர்கள் அனைவராலும் நிம்மதியாக உறங்க முடிந்தது.
அடுத்த நாள் காலையில் பார்த்தபோது சதுப்பு நிலப் பகுதியில் அலையாத்திக் காடுகள் இருக்கும் இடத்தில் 776 டன் எடை கொண்ட ‘பிரிடன்’ கப்பல் சிக்கி நின்றது. முந்தைய தினம் கப்பல் பணியாளர்கள் பார்த்த கலம் கால் மைல் தூரத்தில் நின்றது. இங்கிலாந்திலிருந்து கல்கத்தாவுக்கு பிரிட்டிஷ் ராணுவம் சார்பில் வந்த 10 மற்றும் 50-வது தரைப்படைப் பிரிவைச் சேர்ந்தவர்களை அழைத்துவந்த துருப்புக் கப்பலான ‘ரன்னிமீடு’தான் அது. 1844 ஜூன் 20 அன்று 12 பெண்கள், 14 குழந்தைகள் உட்பட 200 பேரைக் கொண்டு இங்கிலாந்தின் க்ரேவ்சேண்டிலிருந்து கிளம்பிய கப்பல் அது.
‘பிரிடன்’, ‘ரன்னிமீடு’ இரண்டும் ஜான் லாரன்ஸ் தீவில் தரைதட்டி நின்றுகொண்டிருந்தன. அதோடு சோதனை முடியவில்லை. கரையில் ஒதுக்கப்பட்டவர்கள் வந்திருக்கும் இடமோ அந்தமான் தீவுக் கூட்டம். அந்தப் பெயரே எந்த மாலுமியின் முதுகெலும்பையும் சில்லிடச்செய்வதாகும். ஆளே அற்ற இந்தத் தீவுக் கூட்டங்களில் இதற்கு முன் கப்பல் மோதியோ தரையிரங்கவோ செய்த மாலுமிகள் யாரும் திரும்பியதே இல்லை.
நவம்பர் 12 அன்று மழை பெய்தது. கப்பல் பணியாளர்கள் மீதமிருக்கும் உணவுச் சேகரத்தை ஆராய்ந்தனர். மாவு, ரொட்டி, சர்க்கரையில் பெரும் பகுதி வீணாகியிருந்தன. இறைச்சிக்காகக் கப்பலில் இருந்த பிராணிகள், கோழிகளில் பெரும் பகுதி மழையில் அடித்துப்போகப்பட்டோ அழிந்தோ இருந்தன. ஒரேயொரு பன்றி மட்டுமே கப்பலில் மிச்சமிருந்தது. சில பிஸ்கட்டுகள், கொஞ்சம் ரம் மட்டுமே அருந்தி 72 மணி நேரமாக வேறு எதுவும் சாப்பிடாமல் நலிந்திருந்த பயணிகளுக்குக் கப்பல் ஊழியர்கள் உணவு சமைத்து அளித்தனர்.
பழங்குடிகளுடன் மோதல்
அடுத்தடுத்த நாட்களில் வீரர்களும் கப்பல் ஊழியர்களும் சேர்ந்து அங்கு இருந்த உணவை இறக்கி எடுத்துவந்து புதர்களைக் களைந்து கிணறுகளை வெட்டி கரையில் கொட்டகைகளையும் ஊன்றினார்கள். கரையேறியவர்களுக்குத் தீவு எந்த நம்பிக்கையையும் உபசாரத்தையும் அளிக்கவில்லை. மீன்களைச் சேகரிக்கப்போனபோது இரண்டு வீரர்களைச் சூழ்ந்த அந்தமான் தீவின் குடிகளான ஆகா-பேல் பழங்குடி மக்களை விரட்டியடிக்க வேண்டியிருந்தது. அந்தமான் தீவுவாசிகள் காட்டிய தேவையற்ற கடுமையும் உணவு, குடிநீர்ப் பற்றாக்குறையும் கரை ஒதுங்கியவர்களைப் பாதித்தது. வீரர்கள் அந்தமானின் பூர்வகுடிகளுடன் நட்பாக இருந்து உணவாதாரத்தைப் பெற முயன்றனர். அது பலிக்கவில்லை.
முகாமில் நோய்களுக்கும் பஞ்சமில்லை. ‘ரன்னிமீடு’ கப்பல் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. நவம்பர் இறுதிக்குள் மிச்சமிருந்த ஒரேயொரு படகைச் சரியானபடி பழுதுபார்த்து வைக்க தச்சர்கள் அறிவுறுத்தப்பட்டனர். படகுக்கு ‘தி ஹோப்’ என்று பெயர் வைக்கப்பட்டது. குழுவொன்று அருகிலுள்ள துறைமுகத்துக்குப் போய்ப் பார்த்துவருவதற்காகத் தீவை விட்டுக் கிளம்பியது. தீவை விட்டு ‘தி ஹோப்’ சென்று 20 நாட்களாகின. ஆனால், நம்பிக்கைக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
டிசம்பர் மத்தியில், ஒரு நில அதிர்வு தீவைத் தாக்கியது. அதன் தீவிரத்தை உணர்வதற்கு முன்னரே கண்காணிப்பு மரத்திலிருந்து ஒரு குரல் ‘கப்பல், கப்பல்’ என்று சத்தமிட்டது. ‘ரன்னிமீ’டின் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு வரும் கப்பலின் கவனத்தை ஈர்ப்பதற்குத் துப்பாக்கியும் முழங்கப்பட்டது. மொத்த முகாமும் உற்சாகக் கூச்சலிட்டது. தெற்கு மியான்மரில் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மெர்குரியை ‘தி ஹோப்’ 12 நாட்களில் சென்று சேர்ந்தது. அதற்குப் பிறகு அங்கிருந்து பாய்மரக் கப்பல் உணவுப் பொருட்களோடு வந்துசேர்ந்தது. 55 நாட்கள் நிம்மதியற்ற தீவுத் தங்கலை அடுத்து கரையொதுங்கியவர்கள் ஆக்னஸ் லீயில் ஏறி, அடுத்த இரண்டு நாட்களில் தீவிலிருந்து கிளம்பினார்கள். பயணம் புறப்படுவதற்கு முன்னர் ராணுவ வீரர்கள் ஒரு கல்வெட்டில் அங்கே இறந்துபோன தங்கள் சகாக்களின் பெயர்களைப் பொறித்துச் சென்றனர்.
தனித்து விடப்பட்ட தீவு
ஒரு தசாப்தத்தில் மட்டும் சிக்கிய பல்வேறு கப்பல்களின் ஊழியர்கள் இதே விதமான பயங்கரமான அனுபவங்களைச் சந்தித்துள்ளனர். கிழக்கிந்திய கம்பெனி இந்தப் பிரச்சினையில் தலையிட ஏற்கெனவே முடிவுசெய்திருந்தது. பிரதான அந்தமானின் தென்கிழக்கு குடாவில் உள்ள சதம் தீவில் ஒரு குடியேற்றத்தை 1789-ல் உருவாக்க முயன்றனர். அந்தக் குடியேற்றம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெயர்க்கப்பட்டது. ஆனால், அங்கே நிலவிய உபச்சாரமற்ற சூழலால் அந்தக் குடியேற்ற முயற்சி 1796-ல் முடிவுக்குவந்தது. அடுத்த 62 ஆண்டுகளுக்கு அந்தமான் தீவு தனியாக விடப்பட்டிருந்தது.
கப்பல் பயணிகளின் தொடர்ந்த படுகொலைகள் அந்தமானைத் திரும்ப ஆக்கிரமிப்பதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. 1857-ல் சிப்பாய் கலகத்துக்குப் பின் மீண்டும் குடியேற்றம் செய்ய முயற்சிகள் தொடங்கப்பட்டன. போர்ட் ப்ளேரில் 1858-ல் தண்டனைக் கைதிகள் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் இந்தத் தீவுகளைக் காலனியாக்கும் வரை தண்டனைக் கைதி குடியேற்றங்கள் தொடர்ந்தன.
அந்தமான் தீவுகளில் செய்யப்பட்ட மறுஆக்கிரமிப்பு, கரையொதுங்கிய கப்பல் பயணிகளுக்கான அடைக்கல இடமானது. ஆனால், அதுவே அந்தமான் பூர்வகுடிகளை அழிக்கவும் செய்தது. அந்தமான் பூர்வகுடிகள் இந்தக் குடியேற்றத்தை எதிர்த்தபோது ஆயுத பலம், நட்பு பாவம் காட்டிப் பழக்கப்படுத்தப்பட்டனர். பூர்வகுடிகள் சேர்ந்து திரண்ட எதிர்ப்பு அபர்தீன் யுத்தமாக 1859 மே
17-ம் தேதி கிளர்ந்தது. இதில் எண்ணற்ற பூர்வகுடிகள் அழித்தொழிக்கப்பட்டனர். சீக்கிரத்திலேயே அந்தமான் பூர்வகுடிகள் ‘அந்தமான் ஹோம்ஸ்’ என்ற பகுதிக்குள் தடுக்கப்பட்டு அந்நிய உணவு, உடைகள், புகையிலை, மது ஆகியவை அவர்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரந்திப் புண், நிமோனியா, தட்டம்மை, புனிற்றுக் கண்நோய், இன்ப்ளூயன்சா, மேக வெட்டை ஆகிய கொள்ளை நோய்கள் வந்து 1858-ல் 3,500 பேராக இருந்தவர்களை 1931-ல் 90 எண்ணிக்கைக்கு ஆக்கிவிட்டது. அந்தமானைச் சேர்ந்த பத்து வகையான பூர்வகுடிகளில் தற்போது ஆறு பூர்வகுடியினர் அழிந்தே போய்விட்டனர்.
2017 டிசம்பரில் எடுத்த கணக்கெடுப்பின்படி அந்தமானிய பூர்வகுடிகளின் எண்ணிக்கை 56. ஒரு காலகட்டத்தில் பிரதான அந்தமான் தீவுப் பகுதியில் வலுகொண்ட வேட்டையாடி சமூகமாக இருந்த இவர்கள் ஸ்ட்ரெய்ட் ஐலேண்ட் தீவுக்குள் நிரந்தரக் குடியிருப்புகளுக்குள் முடக்கப்பட்டு, அரசின் இலவசங்களால் ஜீவித்துவருகின்றனர்.
இன அழிப்பு
அந்தமான் தீவுக் கூட்டங்களில் குடியேற்றம் நடக்கும் வரைக்கும் அந்த நிலம் யாரும் நுழைய முடியாததாகவே இருந்தது. அங்கிருந்த பூர்வகுடிகள் கொடூரமான நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்றே தவறாகக் கருதப்பட்டிருந்தனர். ஆங்கிலேயர்களுக்கு முன்னால் மலாய், பர்மா, சீனாவிலிருந்து அந்தமான் தீவுகளில் வசிப்போரை அடிமைகளாக்கும் முயற்சிகள் நடந்துள்ளன. அந்தமான் பூர்வகுடிகளைப் பிடித்துச் சென்று இலங்கை, இந்தோசீனா, மலாய் குடாவில் அடிமைகளாக விற்றுள்ளனர். இதுபோன்ற நிலைமைகளால் அந்தமான் பூர்வகுடிகளின் மனத்தில் வெறுப்பும் அந்நியர்கள் மீதான நம்பிக்கையின்மையும் உருவாகியிருந்தன.
‘பிரிடன்’, ‘ரன்னிமீடு’ கப்பல்களிலிருந்து கரையொதுங்கியவர்கள் மீது அந்தமானியப் பழங்குடிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்த அச்சத்திலிருந்து எழுந்ததே. ஆனால், அந்த அச்சம் தவறானதல்ல. அந்தமான் தீவுகளில் குடியேற்றங்கள் நடந்த பிறகு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜான் லாரன்ஸ் தீவில் வாழ்ந்துவந்த அந்த அகா-பேல் பழங்குடிகள்தான் 1931-க்குப் பிறகு ஒரு நபர்கூட இல்லாமல் அழிக்கப்பட்ட பழங்குடியினராக மாறிவிட்டனர்!
© ‘தி இந்து’, தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT