Published : 20 Jan 2020 02:43 PM
Last Updated : 20 Jan 2020 02:43 PM
காஞ்சிபுரத்தின் பாரம்பரியமிக்க நெசவாளர்கள் இப்போது உணவகங்களில் 'சர்வர்'களாகி விட்டனர். ஆயிரக்கணக்கான புடவைகளை நெய்தவர்கள், இன்று புடவைக் கடைகளுக்கு ஆட்டோ ஓட்டுபவர்களாகவும், காவலாளியாகவும் விற்பனையாளராகவும் மாற ஏக்கம் கொள்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் புடவைகளை நெய்த நெசவாளர்கள், அந்தத் தொழிலை தங்களின் அடுத்த தலைமுறைக்குக் கடத்த இயலாமல் வேதனையில் உழல்கின்றனர்.
இப்படி நெசவுத்தொழில் மட்டுமல்லாமல், விவசாயம், பனையேறுதல், நாதஸ்வரம் செய்தல், அரிவாள் செய்தல், பொய்க்கால் குதிரை ஆட்டம், கூத்து என தமிழகத்தில் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தொழில்களையும், கலைகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறது 'நைன் ருபீஸ் அன் ஹவர்' (NINE RUPEES AN HOUR) புத்தகம்.
மரணத்தின் விளிம்பில் நிற்கும் வாழ்வாதாரங்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தையும், அம்மக்களின் வாழ்வியலையும் தன் எழுத்துகளின் வழி கண் முன்னே நிறுத்துகிறார், பத்திரிகையாளர் அபர்ணா கார்த்திகேயன்.
'ஒரு வாழ்வாதாரம் இறக்கும்போது வாழ்க்கை முறையும் அழிந்துவிடும், மொழியும் சுருங்கிவிடும்' என்ற சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனின் வார்த்தைகளில் இருந்து தொடங்கி, பல்வேறு தொழில்கள், கலைகளையும் அதன் தற்போதைய நிலையையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் அபர்ணா.
ஆண்களுக்கு மட்டும் தான் காளை வளர்ப்பு சாத்தியம் என நம்பும் நம் பொதுப்புத்தியை உடைத்துப் போடும் விதத்தில், தன் பேச்சுக்குக் கட்டுப்படும் காங்கேயம் காளைகளை வளர்க்கும் சௌந்தரம் என்ற பெண் குறித்து படிக்கும் போது ஆச்சர்யம் ஏற்படாமல் இல்லை. 'காளைகளைப் பெண்கள் வளர்ப்பதா?" என்ற கேள்வியை சௌந்தரம் இன்றும் கடந்துகொண்டுதான் இருக்கிறார்.
வறட்சி, பெரும் கடன், அரசின் அலட்சியம் என பல காரணிகளால் தங்கள் வீட்டு ஆண்களை இழந்ததால், விவசாயத்தைக் கையிலெடுத்து, குடும்பத்திற்கு வாழ்வாதாரம் ஈட்டும் பெண்களான சந்திரா, பூவாயி ஆகியோர், விவசாயத்தின் நுணுக்கங்களை நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர். வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு மலைக்க வைக்கும் வகையில் உடல் உழைப்பைச் செலுத்தி விவசாயம் பார்க்கும் அப்பெண்களை, 'விவசாயிகள்' என பொதுச் சமூகம் ஏற்றுக்கொள்ளாதது குறித்து இப்புத்தகம் கேள்வி எழுப்புகிறது.
ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கும் தெருக்கூத்தை பெண்களுக்கானதாகவும் மாற்றிய 'கட்டைக்கூத்து' குருகுலத்தின் நிறுவனர் ராஜகோபால், கூத்துக் கலையை நகரங்களும், அரசு நிர்வாகமும் புறக்கணிப்பது குறித்து மிகவும் கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகிறார். தன் குடும்பங்களின் புறக்கணிப்புகளைத் தாண்டி, கூத்துக்கலையை கற்று மேடையேறும் திலகவதி, தமிழரசி போன்றோரை, "கூத்துல நடிக்கிற உன்ன யார் கல்யாணம் கட்டிப்பா?" என்ற கேள்விகள் ஒருபோதும் அக்கலையில் இருந்து வெளியேறத் தூண்டுவதில்லை.
இப்படி வாழ்வாதாரங்களின் அழிவு குறித்தும் கலைகள் குறித்தும் பல இடங்களில் பெண்களின் பார்வையில் இருந்து பதிவு செய்திருக்கிறார் அபர்ணா. கிராமப்புற பொருளாதாரம், குடும்பத்தின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப பெண்கள் குடும்பங்களை நடத்தும் விதம், ஒரு தொழிலின் மீது அவர்கள் செலுத்தும் அளவு கடந்த தாக்கம் ஆகியவற்றை இப்புத்தகம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது கலைக்கும் குறிப்பிட்ட சமூகத்திற்கும் உண்டான நெருங்கிய தொடர்பு குறித்து மிக ஆழமான புரிதல்களை நமக்கு இப்புத்தகம் ஏற்படுத்துகிறது. உதாரணமாக, நாட்டுப்புறக் கலைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த காளி என்ற இளைஞர், பரத நாட்டியத்தில் சிறந்து விளங்குவது குறித்த கட்டுரை இதில் முக்கியமானது.
குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதாக கருதப்படும் பரதநாட்டியத்தை காளி கற்பதற்கு எடுத்த முயற்சிகளும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அசாத்தியமானது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற பரதநாட்டியப் பயிற்சி நிறுவனத்தில் காளி நடனம் கற்பதற்கு தன் உணவுப்பழக்கம், மொழி ஆகியவற்றை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. இவையெல்லாவற்றையும் தாண்டி பரதம் கற்று அதில் நிபுணத்துவம் பெற்ற காளியால், அந்தக் கலையை தன் வாழ்வாதாரத்திற்கானதாக மாற்றிக்கொள்ள முடிவதில்லை. ஆனால், தான் கற்ற கலையில் சிறந்து விளங்க கற்றுக்கொண்டே இருக்கிறார் காளி. சபா கலாச்சாரம், அதன் பின்னால் இயங்கும் அரசியல் ஆகியவை பின் தங்கியிருக்கும் காளிகளுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தாதது குறித்துப் பேசுகிறது அக்கட்டுரை.
மிக அதிகமான ஆற்றலையும் நுட்பமான திறன்களையும் பயன்படுத்தி ஆடும், பொய்க்கால் குதிரை ஆட்டத்தை வயது முதிர்ந்தும், சொல்லும்படியான வருமானம் இல்லாதபோது, அவமரியாதைகளைக் கடந்தும் இன்றும் ஆடுகிறார் காமாட்சி. இப்படிப்பட்ட கலைகளுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்ன? நிகழ்த்துக் கலைகள், நாட்டுப்புறக் கலைகளை சென்னையில் நடைபெறும்போது மட்டுமே கவனம் பெறுகின்றன. கலைகள் பொழுதுபோக்குக்கானவை என்ற கண்ணோட்டம் மாறும் வரை இந்நிலைமை மாறாது என்பதே இக்கலைகளை இன்றும் தாங்கிப் பிடித்திருக்கும் கலைஞர்களின் எண்ணம்.
ஒரு குறிப்பிட்ட தொழில்களுக்கு இடையேயான உறவையும் இப்புத்தகம் பேசுகிறது. உதாரணத்திற்கு, விவசாயத்தின் அழிவு என்பது விவசாயிகளின் பிரச்சினை என்ற குறுகிய கண்ணோட்டைத்தை இப்புத்தகம் கேள்விக்கு உட்படுத்துகிறது. ஒரு வருடத்தில் விவசாயம் செழிக்கும்போது நாதஸ்வரம் உருவாக்கும் கலைஞர்களும் வாழ்வாதாரத்தைப் பெருக்குகின்றனர். எப்படி? விவசாயம் செழித்தால் அந்த ஆண்டில் விவசாயக் குடும்பங்களில் திருமணங்கள் அதிகம் நடக்கும். அதற்கு நாதஸ்வரக் கலைஞர்களை அழைக்க வேண்டும். அப்போது, நாதஸ்வரத்தை அதிகமாக உருவாக்குவதற்கான தேவை அதிகரிக்கும்.
நகரங்களும், பொதுச் சமூகமும் 'உழைப்பு' என அங்கீகரிக்காத பல அழியும் தொழில்களை இப்புத்தகம் பதிவு செய்திருக்கிறது. வாழ்வாதாரத்திற்காக கடும் உடல் உழைப்பைச் செலுத்தி வாரம் 100 பனை மரங்களேறும் ராயப்பன், மரக்கட்டைகளை நாதஸ்வரங்களாக்கும் செல்வராஜ், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புடவை டிசைன்களை தன் கைகளாலேயே உருவாக்கிய கைத்தறி நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி, அழகிய பத்தமடை பாய்களை உருவாக்கி நாளொன்றுக்கு ரூ.100 மட்டுமே வருமானம் ஈட்டும் ஜீனத், அரிவாள்களை உருவாக்கும் சந்திரசேகரன் போன்றோரின் மலைக்க வைக்கும் வேலைகளை ஒரு தொழிலாக நாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதே இல்லை.
இவர்களுக்கு இதுவரை நாம் அளித்த மரியாதை என்ன? அவர்கள் ஈட்டும் வருமானம் போதுமானதா? பத்தமடை பாய்களை உருவாக்கும் பெண்கள் ஒரு மணிநேரத்திற்கு 9 ரூபாய் தான் வருமானம் ஈட்டுகின்றனர். இந்த மனிதர்கள், தங்களின் வேதனைகள், சின்னச் சின்ன மகிழ்ச்சிகள், வெற்றி, தோல்விகளை இப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளனர். 'எங்களுடன் இது முடியட்டும்' என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. பெரும்பாலானோர் தங்களின் பாரம்பரியமிக்க தொழில்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதை மனதார விரும்பினாலும், அவற்றின் எதிர்காலம் குறித்த கேள்வி அவர்களை அச்சமடைய வைக்கிறது.
இவை தவிர கிராமப்புற வாழ்வியலைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வரும் பத்திரிகையாளர் சாய்நாத், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் அய்யாக்கண்ணு, நீர் மேலாண்மை வல்லுநர் ஜனகராஜன், எழுத்தாளர் பாமா, இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோர், இந்த வாழ்வாதாரங்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதற்கு சில நுணுக்கமான தங்கள் பார்வைகளை பேட்டிகளின் வாயிலாக முன்வைத்துள்ளனர்.
பாரம்பரியமிக்க தொழில்களையும் கலைகளையும் காப்பாற்றி வருபவர்களை, வேறு தொழில்களை கற்றுக்கொடுத்து அதனைச் செய்ய வைப்பது அவர்களின் வீழ்ச்சி அல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் வீழ்ச்சி. இந்த வாழ்வாதரங்கள் அழியும்போது ஒட்டுமொத்த கிராமப் பொருளாதாரமும் சிதைகிறது என்பதுதான் இந்தப் புத்தகம் நமக்கு சொல்லும் ஒட்டுமொத்த செய்தி.
இவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது தனிப்பட்ட அம்மக்களின் கடமை மட்டுமல்லை. அரசும் திட்டங்களை வகுப்பவர்களும் அவர்களின் நிலைமையை உற்றுநோக்கி, திட்டங்களை வகுக்க வேண்டும். அழியும் வாழ்வாதாரம் குறித்து ஊடகங்களும் சமூகமும் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்கான உடனடித் தேவை எழுந்துள்ளது என்பதை இப்புத்தகம் அம்மக்களின் வார்த்தைகளால் உணர்த்துகிறது. அவர்கள் எதிர்பார்ப்பது பரிதாபத்தை அல்ல, வாழ்வாதாரங்கள் காக்கப்படும் வேண்டும் என்பதைத்தான்.
நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகத்தை வாங்க:
ஹிகின்பாதம்ஸ் (Higginbothams), அரங்கு எண்: எஃப் 54
டிரீம் புக்ஸ் (Dream books), அரங்கு எண் - 329
வெஸ்ட்லாண்ட் பதிப்பகம், விலை: ரூ.399
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT