Published : 23 Aug 2015 11:33 AM
Last Updated : 23 Aug 2015 11:33 AM
ஐம்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், கவிதைகள், கடித இலக்கியம் எனத் தீவிரமாக எழுதிவரும் எழுத்துக் கலைஞர்களில் ஒருவர் வண்ணதாசன். இவரது இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம். கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன் மரபில் வரும் கலைஞர் வண்ணதாசன். எழுத்தின் வழியாக அறுந்த புல்லின் வாசனையையும் வாசகனுக்குத் தொற்றச் செய்யும் நுட்பமான சித்தரிப்புக்குச் சொந்தக்காரர். இவர் ஒரு ஓவியரும்கூட. இவரது சித்திரங்கள் தமிழின் முக்கியமான நூல்களுக்கு அட்டைப் படமாகியுள்ளன. அவரது பிறந்த நாள் ஆகஸ்ட் 22.
தலைஞாயிறு இலக்கிய அமைப்பு பதிப்பித்த 32 கவிஞர்களின் 42 கவிதைகளை உள்ளடக்கிய 'நாற்றங்கால்' (மே,1974) கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த கல்யாண்ஜியின் இரண்டு கவிதைகளில், 'குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக' என்கிற தலைப்பில் வெளியான கவிதை இது.
பயத்துடன் விடியும் காலை / குரங்குகள் வருமோ என்று / மதில் சுவர் ஓரம் ஒன்று/ தொழுவத்து ஓட்டில் ஒன்று/ முருங்கையில் ஊஞ்சலாடி / ஒடிந்ததும் ஓடும் ஒன்று/ வயிற்றினில் பிள்ளையேந்தி/ சூலுற்ற குரங்கின் பின்னால்/ கவனமாய்க் காவல் போகும் / கிழடான ஆண் குரங்கு / பப்பாளிப் பழம் கடிக்கும் / காக்கைகள் சத்தம் போட / கண்ணாடி கண்மை டப்பி / சிணுக்கோரி ஜன்னலோரச் / சாந்தெல்லாம் ஒளிந்து கொள்ள / தங்கரளிப் பூக்கள் மட்டும் / எதிர்பார்க்கும் தேன் குடிக்க.
1985-ன் இறுதியில் வாசிக்கத் தொடங்கிய தருணத்தில், என்னுடைய முதல் வாசிப்பாக இருந்த இக்கவிதையே பின்னாட்களில் அவரது படைப்புகளின் தொடர் வாசகனாக ஆக்கியது. முற்காலத்தில் அவரது கவிதைகளின் வாசகனாக நானிருந்தாலும், பின் தொடர்ந்த காலங்களில் அவரது சிறுகதைகளின் மீதான லயிப்பிலேயே உறையத் தொடங்கியிருந்தேன். அவரது பெரும்பாலான கதைகளில் வருகின்ற உரைநடைத் தொனி, என் உள்ளத்தில் மெல்லிய உரையாடல்களாக ஒலிக்கத் தொடங்கிவிடுவதுண்டு. காட்சிகள் புனையப்படாமல், அவற்றை போக்கிற்கேற்ப, யதார்த்தமான, கவித்துவமான சொல்லாடல்களாக சற்றே நீண்டிருக்கின்ற அவரது கதைகள், பெருவாழ்வின் பிணக்குகளில் என்னை வேறோர் தளத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. ஆறேழு பக்க அளவுள்ள சிறுகதையை, அதன் ஆரம்பத்திலோ, இடையிலோ அல்லது இறுதியிலோ வருகின்ற நான்கைந்து சொற்களைக் கொண்ட அந்த ஒற்றை வரி மொத்தக் கதையையும் சுமந்துகொண்டு என் மனத்தில் ஒர் அழியாச் சித்திரத்தை வரைந்து விட்டிருக்கின்றன.
மார்ச் 1972, `தீப'த்தில் வெளியான அவரது `பாம்பின் கால்கள்' சிறுகதையின் ஆரம்ப வரியான `பொழுது சரசரவென்று போய்விட்டது' என்பதனை வாசிக்கின்ற போது என்னுள் ஒரு சர்ப்பம் ஊரத் தொடங்கியிருந்தது. இப்படியாக நிறைய வரிகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். `சிநேகிதத்துக்கு எப்போதும் ஒரே பல்வரிசை தானே' (சிநேகிதியும், சிநேகிதர்களும் - உதயம் 29-08-1990), `குடத்தை இறக்கியதும் கையைக் கழுவிவிட்டு இரண்டு வாய்த் தண்ணீர் குடிக்க வேண்டும் போல அவளுக்குத் தொண்டையெல்லாம் எரிந்தது' (சில நிமிர்வுகள், சில குனிவுகள் - அஃக், ஜுலை 1972), உங்க வீட்டு மச்சுல ஒரு நிலைக்கண்ணாடி இருந்துச்சே, அது இன்னமும் இருக்காக்கா' (ஒரு நிலைக்கண்ணாடி, சில இடவல மாற்றங்கள் - ஆனந்த விகடன் 1999) ஆகிய வரிகள் வாசிப்பதற்கு எளியனவாக இருந்தாலும், அவைகள் தந்த பாதிப்பு தனித்துவமானவை.
முதல் கதை
வண்ணதாசனின் முதல் கதையான `ஏழையின் கண்ணீர்', கே.டி.கோசல்ராமின் `புதுமை'யில் ஏப்ரல் 1962இல் வெளிவந்தது. அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான `கலைக்க முடியாத ஒப்பனைகள்' 1976 பிப்ரவரியில் வெளிவந்தது. இத்தொகுதியினை வடிவமைத்து, `பிருந்தாவனம் பிரிண்டர்ஸ்' மூலமாக அச்சிட்டு வெளியிட்டவர் சேலம் `அஃக்' பரந்தாமன். சிறந்த அச்சுக்காகவும், வெளியீட்டுக்காகவும் இந்நூலுக்கு இரண்டு விருதுகள் `அஃக்'க்கு கிடைத்தன. இந்நூலினை `பெற்ற வல்லிக்கண்ணனுக்கும், வளர்க்கிற நா.பார்த்தசாரதிக்கும்' என்கிற அடைமொழியோடு அவர் சமர்ப்பித்திருந்தார். இந்நூலின் இறுதியில் வெளியாகியுள்ள பரந்தாமனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதமும், வண்ணதாசனுக்கு பரந்தாமன் எழுதிய கடிதமும், இத்தொகுப்பு பெற்றிருக்கும் முக்கியத்துவத்திற்கு இணையானது. தொகுப்பிலுள்ள 15 கதைகளில், 7 கதைகள் நா.பா. நடத்திவந்த 'தீபம்' இத்ழில் வெளியானவை. தன்னுடைய 53 வருடத்திய எழுத்துலகப் பயணத்தில் வண்ணதாசன், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆரம்ப காலமான 1962-ல் `கல்கண்டு' இதழில் ஒவியம் வரைந்திருக்கிறார். 1963களில் `தினத்தந்தி'யில் ஜோக்குகள் எழுதிப் பரிசு பெற்றி ருக்கிறார். 1969-ல் ஜானகி சீனிவாசகம், செல்வகுமார், உ.நா.ராமச்சந்திரன் (வண்ணநிலவன் ஆகிய நண்பர்களோடு இணைந்து `பொருநை' என்கிற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியிருக்கிறார் இக்கையெழுத்துப் பத்திரிகையிலேயே `எண்ணச் சிதறல்' என்கிற கட்டுரைத் தொடரை வல்லிக்கண்ணன் எழுதினார். சில படைப்பாளிகளின் நூல்களுக்கான அட்டைப் படங்களையும் வடிவமைத்துத் தந்திருக்கிறார் வண்னதாசன்.
1971இல் `கணையாழி'யில் வெளியான `கண்ணாடிக் குருவிகள்' கவிதையை இப்படி எழுதியிருக்கிறார் கல்யாண்ஜி:
நார்சிஸ்ட் குருவியும்
நானும் கூடப் பிறந்தவர்கள்
நிலைக்கண்ணாடி
நிழற் பிம்பத்துக்
கோணத்தில் எங்கள்
கோணலை ரசிப்பதால்
ஒப்புக்கொண்ட
உரிமையில் கேட்கிறோம்
`கோணல் என்பது
கொத்தலா, கொஞ்சலா ..?'
இப்பாவம் செய்தவர்கள்
பதில்கள் எறிக !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT