Published : 22 Dec 2019 08:53 AM
Last Updated : 22 Dec 2019 08:53 AM
தமிழுக்கும் தமிழ் ஆய்வுலகுக்கும் முக்கியமான ஒரு விவாத நூலை அளித்திருக்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ். குடிமைப் பணித் தேர்வுகளைத் தமிழிலேயே எழுதி வென்ற முதல் தேர்வர் என்ற பெருமை அவருக்கு உண்டு. தன்னுடைய 35 ஆண்டு கால அரசுப் பணி வாழ்வில் ஒடிஸாவின் தலைமைச் செயலாளர் வரை பல்வேறு பணியிடங்களிலும் முத்திரை பதித்தவர், ஊடாகவே ஆய்வுப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய வாழ்வின் மிக முக்கியமான பங்களிப்பு என்று அவர் கருதும் ஆய்வு நூலான ‘ஜர்னி ஆஃப் அ சிவிலைசேஷன்: இண்டஸ் டு வைகை’ (ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்துவெளி முதல் வைகை வரை) வெளியான சில நாட்களிலேயே பெரும் பேச்சை உருவாக்கியிருக்கிறது.
500-க்கும் மேற்பட்ட பக்கங்களில் ரூ.3,000 விலையில் வந்திருக்கும் இந்தப் புத்தகத்தைக் கையில் ஏந்தும்போது, பட்டுநூலைத் தாங்குவதுபோல இருக்கிறது; பிரமாதமான தயாரிப்பு! சிந்துவெளிக்கும் தமிழ் அல்லது திராவிடப் பண்பாட்டுக்கும் இடையிலான உறவைப் பேசும் இந்நூல், சங்க இலக்கியத் தரவுகளின் வெளிச்சத்தில் சிந்து நாகரிகம் தமிழர் நாகரிகம்தான் என்ற கருதுகோளை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகளைத் தீவிரப்படுத்த வலியுறுத்துகிறது. ஆர்.பாலகிருஷ்ணனோடு உரையாடியதிலிருந்து சில பகுதிகள்:
தலைப்பிலிருந்து பேச்சைத் தொடங்குவோமே. ஏன் ‘நாகரிகத்தின் பயணம்’ என்று தலைப்பு கொடுத்தீர்கள்?
நூலின் தலைப்பு ஒரு உருவகம். நாகரிகம் என்று இங்கு பண்பாட்டைத்தான் உருவகப்படுத்துகிறோம். பண்பாடு பயணிக்குமா என்றால் பயணிக்கும். பண்பாடு என்பது பண்பாட்டைச் சுமந்து செல்லும் மக்கள்தான். பண்பாட்டை வாழ்கிற, அதைச் சுமந்து செல்கிற மக்களுடைய வரலாறுதான் பண்பாட்டினுடைய வரலாறு. மக்கள் பயணிக்காவிட்டால் பண்பாடு உறைந்திருக்கும். குத்தவைத்து உட்கார்ந்து குளிர்காய்ந்தவர்கள் இன்னும் குகையில்தான் இருக்கிறார்கள். நகர்ந்து வந்தவர்களே நாகரிகம் படைத்தார்கள். தமிழர்கள் பயணித்ததால்தான் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இன்று தமிழ் செழித்திருக்கிறது. மனித குல வரலாறு என்பதே ஒருவகையில் பயணங்களின் கூட்டுத்தொகைதான். சிந்துவெளிப் பண்பாட்டுக்கும், சங்க இலக்கியம் மற்றும் அகழாய்வுத் தடயங்கள் மூலம் புலனாகும் பழந்தமிழர் வாழ்க்கைக்கும் இடையிலான வேர்நிலைத் தொடர்பை விளக்குவதே இந்த நூலின் மைய நோக்கம்.
சிந்துவெளியின் காலத்துக்கும் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மைக்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கும் காலத்துக்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியைத் தாண்டி, சங்க இலக்கியம் சிந்துவெளிக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்பை நிறுவ எப்படிப் பயன்படுகிறது?
சிந்துவெளியையும் தமிழ்ப் பண்பாட்டையும் இணைக்கும் முக்கியமான பாலமே சங்க இலக்கியம்தான். அது தொகுக்கப்பட்ட காலம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சங்க இலக்கியம் அது தொகுக்கப்பட்ட காலகட்டத்துக்கு மிக முந்தைய காலகட்டத்தின் மீள்நினைவுகளைப் பதிவுசெய்கிறது. அதேபோல், இன்றைய தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி வெகுதூரத்தில் இருந்த பல விஷயங்கள் சங்க இலக்கியத்தில் பேசப்படுகின்றன. ஒட்டகம் எலும்பைத் தின்பது போன்ற காட்சி சங்க இலக்கியத்தில் வருகிறது. கவரிமா (Yak) பற்றிய விரிவான குறிப்புகள் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன. பாலை நிலம் இன்றைய தமிழகத்தில் எங்கே இருக்கிறது? ஆனால், சங்க இலக்கியத்தில் 530 பாடல்கள் பாலை நிலத்துக்கானவை. ஆக, சங்க இலக்கியம் நம்மைக் காலத்தாலும் இடத்தாலும் சிந்துவெளியை நோக்கி அழைத்துச் செல்கிறது. சிந்துவெளி நாகரிகத்துக்கும் கீழடி அகழாய்வு முடிவுகளின் மூலம் நிறுவப்பட்டுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மைக்கும் இடையிலான கால இடைவெளி சுமார் 1,300 ஆண்டுகள். சிந்துவெளியின் தென்கோடி எல்லையான மகாராஷ்டிரத்தின் தைமாபாத்துக்கும் கீழடிக்குமான தொலைவு சுமார் 1,400 கிமீ. ஆனால், சிந்துவெளிக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்குமான தொடர்பை நிறுவுவதற்கான அகழாராய்ச்சியைத் தடுக்கும் அளவுக்கு இந்த கால-நில இடைவெளி அச்சுறுத்தல் இல்லை என்பதற்கு சங்க இலக்கியமே ஆதாரம். அதனால்தான், சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று தொடர்ந்து பேசிவருகிறேன். சங்க இலக்கியத்தின் மீள்வாசிப்பு இந்திய வரலாறு குறித்த புரிதலையே மாற்றியமைக்கக்கூடியது.
இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள சங்க இலக்கியத் தரவுகளில் முக்கியமானவற்றை விளக்க முடியுமா?
தமிழுக்கு மட்டுமே சொந்தமான கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய பெயர்கள் உட்படப் பல இடப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் வருகின்றன. அந்த இடப் பெயர்கள் சிந்துவெளியிலும் வடஇந்தியாவிலும்கூட இருக்கின்றன. ஊர்ப் பெயர்கள் சார்ந்த தொடர்பை நிறுவுவது இந்த நூலின் நங்கூரம் என்று சொல்லலாம். அடுத்ததாக, செங்கல் இல்லாமல் சிந்துவெளி நாகரிகம் இல்லை. செங்கல்லுக்கும் சிவப்பு நிறத்துக்கும் சங்க இலக்கியத்தில் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிந்துவெளியில் பல விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் தோண்டியெடுக்கப்பட்டன. சங்க இலக்கியமும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. விளையாட வேண்டிய வயதில் விளையாடாமல் இருப்பது அறமன்று என்று நற்றிணைப் பாடல் கூறுகிறது. காளையும் மனிதனும் மோதிக்கொள்ளும் சின்னங்கள் சிந்துவெளியில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியம் ஜல்லிக்கட்டை விரிவாகப் பதிவுசெய்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சங்க இலக்கியத்தில் பேசப்படும் வாழ்க்கை சிந்துவெளியில்தான் இருந்திருக்கிறது. சிந்துவெளியின் வாழ்க்கையைப் பேசும் ஒரே இலக்கியமாக சங்க இலக்கியம்தான் இருக்கிறது.
சிந்துவெளி, தமிழ்ப் பண்பாடு, சங்க இலக்கியம் இந்த மூன்றையும் ஒட்டியதாகவே உங்கள் ஆய்வுப் பயணம் இருந்துள்ளது. இதன் தொடக்கப் புள்ளி எது?
என்னுடைய 31 ஆண்டு தொடர் பயணத்தின் விளைவு இந்நூல். இதன் தொடக்கம் 1988-ல் ஒரிஸாவில் ஒரு மைல்கல்லில் தமிளி என்றொரு கிராமத்தின் பெயரைப் பார்த்ததுதான். அந்த கிராமத்துக்குச் சென்றபோது, அங்கு குவி என்ற திராவிட மொழி பேசும் மக்கள் வசிப்பதைக் கண்டேன். தொடர்ந்து வடமாநிலங்களில் திராவிட மொழி பேசும் குழுக்களுடன் பயணித்து, அவர்கள் வாழ்முறையை உள்வாங்கினேன். அது சங்க இலக்கியத்தோடு நெருக்கமாக இருந்தது. இந்தப் பயணத்தை நான் தொடங்கும்போது சிந்துவெளி பற்றித் தெரியாது. ஐராவதம் மகாதேவன்தான் என் ஆய்வு முடிவுகளைப் பார்த்துவிட்டு, சிந்துவெளி சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடச் செய்தார்.
தொழில் வாழ்க்கையின் அழுத்தங்களுக்கு இடையில், இந்தப் பணியில் எப்படி உங்களை ஈடுபடுத்திக்கொள்கிறீர்கள்?
நான் இந்திய ஆட்சிப் பணியில் இருந்தது ஒருவகையில் இந்த ஆய்வுக்குப் பெரும் உதவியாக இருந்தது. ஏனென்றால், தரவு சேகரம் மிகக் கடினமான பணி. நிறைய பயணிக்க வேண்டும். இந்தியா முழுவதுமான தொடர்பு வலைப்பின்னல் இந்த ஆய்வுக்குத் தேவைப்பட்டது. இந்தியாவில் உள்ள சுமார் 20 மாவட்டங்களைத் தவிர, மீதி எல்லா மாவட்டங்களுக்கும் செல்லும் வாய்ப்பை என் பணியே எனக்குக் கொடுத்திருந்தது. ஆய்வு சார்ந்த பயணங்களை விடுமுறை நாட்களில் மேற்கொள்வேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்ட பானைகளின் படங்களைச் சேகரிக்க மட்டுமே இந்தியாவின் எல்லா அருங்காட்சியகங்களையும் தொடர்புகொண்டிருப்பேன். நாம் கேட்பதைத் தர அவர்கள் நம்மை நம்ப வேண்டும் அல்லவா? அதற்கு எனது பணி உதவியிருக்கிறது.
இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியது ஏன்?
இந்த விஷயம் ஒட்டுமொத்த உலகுக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான்! நூல் விரைவில் தமிழிலும் வெளியாகும்.
சிந்துவெளிக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் இடையிலான இணைப்பை நிறுவும் பலர் தமிழின் தொன்மையை நிறுவ அறிவியல்பூர்வமான அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நூலில் பதில் இருக்கிறதா?
சர்வதேசத் தர அளவுகோல்களைப் பின்பற்றியே தரவுகளைச் சேகரித்து இந்த ஆய்வு நூலை உருவாக்கியிருக்கிறேன். அதேநேரம், எந்த ஆராய்ச்சி முடிவும் முற்று முடிவானதல்ல. ஒருவேளை, நூலில் நான் முன்வைக்கும் கருத்துகள் தவறாக இருந்து, ஆதாரபூர்வமாக மறுக்கப்படும் என்றால், அதை நான் வரவேற்பேன். என்னைப் பொறுத்தவரை கற்றல் என்பது ஒரு தொடர் செயல்பாடு, தேங்கி நிற்பதல்ல!
- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT