Published : 13 Aug 2015 11:05 AM
Last Updated : 13 Aug 2015 11:05 AM
போரில் உயிரை விடுவது மட்டு மில்லை வீரம்; தேசத்துக்காக மனசாட்சியோடு நடந்து கொள்வதும், அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து குரல் கொடுப்பதும்கூட வீரமே. பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் இதனை நினைவூட்டுகின்றன.
இரண்டாம் உலகப் போரின் விளைவு கள் குறித்து நிறையப் புத்தகங்கள் எழுதப் பட்டுள்ளன. அதில் பெரும்பான்மை யானது யூதர்களின் இனஅழிப்பு, நாஜி ராணுவத்தின் கொடுஞ்செயல்கள், உயிர் தப்பியவர்களின் நினைவலைகள் என எழுதப்பட்டவை.
ரஷ்யாவின் செஞ்சேனை எப்படி நாஜிப் படைகளை எதிர்த்துப் போரிட் டது என்பது குறித்து ரஷ்ய இலக்கியத் தில் நிறையப் படைப்புகள் வெளி வந்துள்ளன.
அந்த வரிசையில் வெளியாகியுள்ள புதிய நாவல் ‘எலிஸ் பிளாக்வெல்’ (Elise Blackwell) எழுதிய பசி. இந்தக் குறுநாவல் மிக முக்கிய வரலாற்று நிகழ்வான லெனின்கிராடு முற்றுகையின்போது உயிர் வாழ்வதற்காக மக்கள் எப்படி பசியோடு போராடினார்கள் என்பதை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது.
இந்நாவலின் இன்னொரு சிறப்பு லெனின்கிராடில் இயங்கி வந்த விதை கள் ஆய்வு மையத்தில் இருந்த 2 லட் சத்துக்கும் மேற்பட்ட அரிய விதைகளின் சேகரத்தை நாஜி ராணுவத்திடம் இருந்து பாதுகாக்க, இளம் விஞ்ஞானிகள் எப்படி செயல்பட்டார்கள்? மக்கள் அதற்கு எப்படி ஒத்துழைத்தார்கள் என்ற வரலாற்று உண்மையாகும்.
133 பக்கம் உள்ள இந்நூலை சிறப் பாக தமிழாக்கம் செய்திருப்பவர் ச.சுப்பாராவ். பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவின் லெனின்கிராடு நகரம் ஜெர்மானிய ராணுவத்தால் முற்றுகை யிடப்பட்டது. 1941 செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கிய இந்த முற்றுகை 872 நாட்கள் தொடர்ந்து 1944 ஜனவரி 27 விலக்கப்பட்டது.
30 லட்சம் மக்கள் வசித்த லெனின் கிராடு நகரம் ராணுவ முற்றுகையின் காரணமாக முற்றிலும் ஒடுங்கிப்போனது. உணவு, உடை, எரிபொருள் என அடிப்படை தேவைகள் எதுவும் கிடைக்கவில்லை.
தாங்க முடியாத கடும் குளிரில், பசியில், எரிபொருள் இன்றி, உணவு இன்றி, குடிநீர் கிடைக்காமல் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந் தார்கள். இரண்டரை ஆண்டு காலத்துக் குள் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோனதாக கூறுகிறது ஓர் ஆய்வு.
ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 125 கிராம் ரொட்டி ரேஷனில் வழங்கப்பட்டது. அதுவும் பல நாட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்தார்கள். இன்னொரு பக்கம் இடைவிடாத நாஜிக்களின் தொடர்ந்த குண்டுவீச்சும் செஞ்சேனையின் பதில் தாக்குதலும் நடந்து வந்தன. லெனின்கிராடு நகரம் கடுமையான நெருக்கடிக்குள்ளும் வீழ்ந்துவிடாமல் எப்படி இறுதிவரை போராடியது என்ற வீரவரலாற்றை நினைவுகூர்கிறார் எலிஸ் பிளாக்வெல்.
நாவலின் கதையைச் சொல்பவர் ஒரு விஞ்ஞானி. அவர் லெனின்கிராடு முற்றுகையின்போது விதைகள் ஆய்வு மையத்தில் வேலை செய்தவர். தற்போது நியூயார்க் நகரில் வசித்துவருகிறார். அவரது நினைவுகளின் வழியாகவும் அலெனாவின் அனுபவங்கள் வழியாக வும் நாவல் விவரிக்கப்படுகிறது.
உலகின் முதல் விதை சேமிப்பு வங்கி 1894-ல் ரஷ்யாவில் தொடங்கப்பட்டது. உலகெங்கும் தேடி அரிய வகை விதைகள் இங்கே சேமிக்கப்பட்டன. இந்த மையத்தின் இயக்குநராக செயல் பட்டவர் புகழ்பெற்ற உயிரியியலாளர் நிகோலாய் வாவிலோவ்.
இவர் 1920 முதல் 30 வரை 10 ஆண்டு கள் 65 நாடுகளில் சுற்றியலைந்து, அரிய விதைகளை எல்லாம் சேகரித்துவந்து மரபணு பரிசோதனைகளை மேற் கொண்டு வந்தார். இந்தப் பயணத்தில் இந்தியாவுக்கும் வந்து கோதுமை வகை களைச் சேகரித்துச் சென்றுள்ளார் வாவிலோவ்.
ஸ்டாலின் காலத்தில் விவசாயத்துறை யைத் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த லைசென்கோவின் தூண்டுதல் காரணமாக, தேசத் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு வாவிலோவ் கைது செய்யப் பட்டார். சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வாவிலோவ் பட்டினிக் கொடுமை தாங்கமுடியாமல் இறந்துபோனார். அவரது உடல் சிறையிலேயே புதைக்கப்பட்டது.
அவரோடு வேலை பார்த்த பல இளம் விஞ்ஞானிகளும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டார்கள். சிலர் நாடு கடத்தப்பட்டார்கள். ஒருசிலர் கூட்டுப்பண்ணை வேலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். எஞ்சிய வர்கள் வாவிலோவின் விதை சேகரிப்பு களைக் காப்பாற்றப் போராடினார்கள். அந்தத் துயரம் தோய்ந்த நாட்களைத்தான் எலிஸ் தனது நாவலில் விவரிக்கிறார்.
பாபிலோனியர்கள் மருத்துவ மூலிகைகளையும் அபூர்வமான பழங் களையும் சேகரிக்க உலகம் முழுவதும் பயணித்ததை விவரிக்கிறார் கதை சொல்லி. உலகின் முதல் தாவரவியல் தோட்டத்தை உருவாக்கியது பாபிலோனி யர்களே. அவர்களின் விவசாயமுறை பொறாமைப்பட வைப்பதாகும்.
பாபிலோனியர் உணவில் பார்லிதான் முக்கிய தானியம். பார்லி மூட்டைகளை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அப்போது வெள்ளியை விடவும் பார்லிக்கு விலை அதிகம் இருந்தது. தாங்களும் பாபிலோனியர்கள் போலவே உலகெங்கும் தேடி விதைகளை சேகரித்து வருபவர்களே என்கிறார் கதை சொல்லி. இதுபோலவே பசி, பட்டினி காரணமாக லெனின்கிராடு எப்படி அவதிப்பட்டது என்பதை ஆவணப்படக் காட்சி போல எலிஸ் பிளாக்வெல் விவரிக்கிறார்:
ஜெர்மனிய குண்டுவீச்சுக்கு நடுவே தாவரவியலாளர்கள் நகரைப் பாதுகாப் பத்தில் களமிறங்கினர். பட்டினியை சமா ளிக்க உண்ணத் தகுந்த காளான்களை உற்பத்தி செய்தார்கள். கரிப் பாசி யில் இருந்து ஆன்டிசெப்டிக் மருந்து தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்தார்கள்.
‘ஒரு துண்டு ரொட்டிக்கு மாற்றாக ஒரு பியானோவை பெறலாம்’ என ஒரு கடையில் அறிவிப்புப் பலகைக்கூட தொங்கியது. இன்னோர் இடத்தில் மக்கள் எரிபொருள் இல்லாமல் புத்தகங் கள், துண்டுபிரசுரங்களை எரித்து குளிர்காய ஆரம்பித்தார்கள். புத்திசாலிக் குழந்தை பிழைத்துக் கொள்ளட்டும் என மக்கு குழந்தையைப் பட்டினி போட்டாள் ஒரு தாய்.
ஒரு ரேஷன் அட்டைக்காக சொந்த சகோதரனை வெட்டி கொலை செய்தான் ஒருவன். மனிதர்களின் கை எட்டும் உயரத்தில் எந்த மரத் திலும் மரப் பட்டைகள் இல்லை. எல் லாம் உரிக்கப்பட்டு காய்ச்சி குடிக்கப் பட்டிருந்தது.
நாய், பூனை, காக்கை, எலி, பெருச் சாளி என்று எல்லா உயிரினங்களும் உண்ணப்பட்டன. தோல் ஆடைகள், பெல்ட்டுகள், தோல் காலுறைகள் போன்ற வற்றைக் கொண்டு சூப் தயாரித்துக் குடித்தார்கள். ஒரு துண்டு ரொட்டிக்காக பெண்கள் உடலை விற்பதும், பல நாட் களாக குழந்தைகளுக்கு உணவு கிடைக்க வில்லை என்பதற்காக அவர்களைக் கொன்று புதைப்பதும் சாதாரணமாக நடந்தேறியன.
இப்படி எல்லாம் உயிருக்குப் போரா டியச் சூழலில் கூட லெனின்கிராடு வாசிகள் விதைகள் ஆராய்ச்சி மையத் தில் இருந்த தானியங்களைத் திருட வில்லை. அவை தேசிய சொத்து. அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்க படும் இயற்கை செல்வம் என்பதை உணர்ந்திருந்தார்கள். ஆகவே விதை களைக் காப்பாற்ற போராடினார்கள்.
1942 நவம்பரில் தாங்க முடியாத கடுங் குளிர் அடித்தது. அப்போது குளிராலும் பட்டினியாலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோனார்கள். அவர்களை மொத்தமாக புதைக்க சறுக்கு வண்டியில் கொண்டுபோய் கல்லறையில் குவித்தார்கள். பள்ளம் தோண்ட ஆள் கிடைக்காமல் டைனமெட் வெடி உபயோகிக்கப்பட்டது. அந்தக் குழிகளுக்குள் உடல்களை அள்ளி போட்டு மூடினார்கள். நகரமே ஒரு பெரிய இடுகாடு போல உருமாறியிருந்தது என போரின் கொடுமையை நெகிழ்ச்சியோடு விவரிக்கிறார் எலிஸ்.
தன் உயிரை இழந்து அரிய விதைகளைக் காப்பாற்றிய ரஷ்ய இளம் விஞ்ஞானிகளின் கதை, பராம்பரிய விதைகள் களவு போய்க் கொண்டிருக்கும் இந்தியச் சூழலுக்கு ஓர் எச்சரிக்கை மணி போலவே ஒலிக்கிறது.
- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
முந்தைய அத்தியாயம்: >வீடில்லாப் புத்தகங்கள் 44: லோட்டியின் பயணம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT