Published : 03 Nov 2019 10:12 AM
Last Updated : 03 Nov 2019 10:12 AM
பா.திருச்செந்தாழை
சிறிய துயரங்களைக்கூட அதனளவில் அமைதியாக எதிர்கொள்ள முடியாத அன்றாடங்கள். பெரும்பாலும் தனியர்களின் தொகுதியாகிவிட்ட தெருக்கள். இவ்வளவு தனியர்களின் கனவுகள், விருப்பங்கள், அடிப்படை உணர்வுகளில் எவ்வளவு கலைடாஸ்கோப் சிதறல்கள் நிகழ்ந்து மொழி, கலை, பண்பாட்டில் எவ்வளவு மகத்தான நிலவெளிகள் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால், நமது வாழ்வின் எல்லா முனைகளிலும் அலுத்துவிட்ட முன்முடிவுகள் மட்டுமே நமக்காகக் காத்திருக்கின்றன. ஒரு ஸ்மைலியின் வழியே தன்னைத் திருப்திப்படுத்திக்கொள்கிற டிஜிட்டல் பிரதேசங்களில் கலையானது கண்ணாடியால் வேயப்பட்ட அலுவலகங்களுக்குள் வைக்கப்பட்டிருக்கும் தாவரங்களைப் போல இனம்புரியாத தேறுதலைத் தருவதற்காகக் காத்திருக்கிறது. சிமென்ட் படிவங்கள் படிந்து மூடிவிட்ட கட்டுமானப் பகுதியொன்றில், ஒரு தொழிலாளியின் பாடலைப் போல. கலைக்கும் யதார்த்தத்துக்கும் நீண்ட இடைவெளிகள் உருவாகிவிட்டதாகத் தோற்றமயக்கம் தருகிற இந்தச் சூழலில், நாம் மேலதிகமாக, மூர்க்கமாகக் கலையின்பால் நம்மைத் தக்கவைப்பதே இந்த பிளாஸ்டிக் மனவுணர்விலிருந்து, ஒற்றை அர்த்தக் கனவுகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.
கலையின் எல்லா வடிவங்களும், தங்களது உச்சத்தை ஒரு ஓவியப் பிரதியாகவே மனித மனங்களில் எஞ்சவைக்க முயல்கின்றன. கலையில் தர்க்கமென்பது எரிந்து உதிர்கிற ஒரு பகுதியாக இருக்கவே அந்தக் கலைஞனும் விரும்புகிறான். போருக்கு நடுவே தனது சிசுவை மறைத்துவருகிற பெண்ணைப் போல தனது கலையின் குழந்தைமையை அவன் மற்றவர்களிடம் ஒப்படைக்க விழைகிறான். அவ்வகையில் நான் ஓவியங்களை, கலையில் கச்சா சுமைகளற்ற, துல்லியமாக வெட்டி எடுக்கப்பட்ட கனவுச் சதுரங்களாகவே காண்கிறேன்.
ஒரு ஓவியம் பார்க்கும்போது என்ன நிகழ்கிறது? ஓவியத்தின் ஸ்தூல இருப்பு பார்த்துக்கொண்டிருக்கும்போதே கரைகிறது. நமது ஞாபகம் ஒரு வனவிலங்கைப் போல நம்மைக் கடந்துசெல்கிறது. நிகழ்காலத்தின் இடுக்குகளை அது புறக்கணிக்கிறது. வெகு விரைவிலேயே பார்வையாளனிடம் தனது ஒற்றை அடையாளத்தை இழந்துவிடுகிற ஓவியப் பிரதியானது, தன்னைக் கனவின் லிபியாகப் புனரமைத்துக்கொள்கிறது. ஒரு ஓவியத்தின் முன்பு நீண்ட நேரமாக லயித்திருக்கும் மனிதனிடம் நான் சட்டெனப் பேச அஞ்சுகிறேன். மெதுவாகத் திரும்பிப் பார்க்கிற அவனின் கண்களுக்குள் அடியாழத்திலிருந்து அவன் வெகுவேகமாக என்னை நோக்கி ஓடிவருவதை உணர்கிறேன். இடைப்பட்ட இந்த மெய்யிழப்பு நிலையில், அவன் உணர்ந்தவற்றை நானும் அறியும் ஆவலில் அந்த ஓவியப் பிரதியை அணுகும்போது அது மீண்டும் தனது ஆதிநிலையிலேயே என்னை வரவேற்கிறது. இப்போது நான் நுழைவது வேறு வாசலின் வழியே.
இந்தத் தொகுதியின் வழியே நான் கண்டடைந்த பால் க்லீயின் ஓவியங்கள் எளிமையானவற்றின் பிரபஞ்சங்களை எனக்கு உணர்த்தின. தனது ஓவியங்களின் பார்வை அனுபவத்தை மிகுந்த கவித்துவமாகவும், பார்வைக்கு எளியது போன்ற பாவனையையும், அது தன்னுள் கொண்டிருக்கிற அசாதாரண படிமங்களும் பால் க்லீயை ஒரு விந்தைக் கலைஞனாகவே உணரச்செய்தன. இதன் வழியே ஓவியத்தைப் பார்க்கிற வழிமுறைகளின் நுட்பங்களையும், அதை வரலாறு அல்லது கருத்தியல் பிரக்ஞையோடு அர்த்தப்படுத்திக்கொள்வதன் வழியே அதை வாசகப் பிரதியாக மாற்றிக்கொள்கிற விந்தையையும் சி.மோகனின் பெறுமதியான அனுபவ வழிகாட்டுதலின் வழியே பெற முடிந்தது. சப்தமற்ற ஒரு கலை மையமாகத் தன்னை உருவாக்கிக்கொண்ட சி.மோகனின் உரைநடை மீது சமகால எழுத்தாளர்கள் கவனம்கொள்வது மிகுந்த அவசியமெனக் கருதுகிறேன். ஓவியங்களின் மீதான ஒருவரின் மனவுணர்வுகளை மொழியாக்கும்போது, அவை காகிதங்களின் எல்லைகளுக்கு வெளியே நீண்டு, மேஜை விளிம்பில் வழிந்து சொட்டுகிற இயல்பாகவும் பரவலாகவும் காண முடிகிற பலவீனத்தை எப்படிக் கடப்பதென்று துளி பாவனையும் சிறு தடுமாற்றமும் இல்லாத சி.மோகனின் உரைநடையின் வழியே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு ஓவியம் குறித்த மொழியை எழுதுவதென்பது பிரபஞ்சத்துக்கே பொதுவான ஒரு மொழியை உருவாக்குவதைப் போல. இதில் பல இடங்களில் அந்த பிரபஞ்சத்துக்கே பொதுவான குரலை நாம் அடையாளம் காண முடியும். இத்தொகுப்பை வாசித்தும், இதில் குறிப்பிடுகிற ஓவியர்களின் ஓவியங்களைப் பார்த்த பிறகும் அதை மொழியாக மற்றவர்களிடம் பகிர்வதற்கான சவாலை ஒரு புனைவு வேட்டையாகவே எதிர்கொண்டேன். என்னளவில் நான் மேலும் தனிமையடைந்து மொழிக்கும் காட்சிக்குமான ராட்சத விலங்குகளின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த கணங்கள் அவை. இந்த ஓவியங்களின் வழியே தங்களின் ஒற்றை அடையாளத்தை இழந்துவிட்ட பொருட்கள், விலங்குகள், மனிதர்களின் தோற்றங்கள், அரூபமானவற்றின் வர்ண சமிக்ஞைகள் ஆகியன, கூறப்பட்ட இந்த உலகிலிருந்து கூறப்படாத நிலவெளியில் புதியவனாக என்னை இறக்கிச்சென்றுள்ளன. ஒரு கலைப் பிரதியின் நோக்கமும் அதுவே.
‘நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்’ நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரையிலிருந்து...
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
சி.மோகன்
போதிவனம் வெளியீடு
ராயப்பேட்டை, சென்னை-14.
விலை: ரூ.400 98414 50437
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT