Published : 16 Jul 2015 11:13 AM
Last Updated : 16 Jul 2015 11:13 AM

வீடில்லா புத்தகங்கள் 41: குற்றம் களைதல்!

துப்பறியும் கதைகளுக்கு என தனி யானதொரு வாசகர் வட்டம் இருக் கிறது. எந்த மொழியில் எழுதப்பட்டாலும் கிரைம் திரில்லர்கள் விற்பனை யில் சாதனை நிகழ்த்துகின்றன. எனக்குப் பிடித்த துப்பறியும் கதை உம்பர்தோ ஈகோ (Umberto Eco) எழுதிய ‘தி நேம் ஆஃப் தி ரோஸ்’ (The Name of the Rose). இது சம்பிரதாயமான துப்பறியும் கதை இல்லை. மிக முக்கிய இலக்கியப் படைப்பாக கொண்டாடப்படுகிறது.

இன்றுவரை துப்பறியும் கதைகளுக்கு ஆதர்சம் ஆர்தர் கானன் டாயலின் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளே. 56 சிறுகதைகளையும் 6 நாவல்களையும் கானன் டாயல் எழுதியிருக்கிறார். கானன் டாயல் ஒரு மருத்துவர்.

‘எ ஸ்டடி இன் ஸ்கார்லெட்' நாவலில் தான் ஷெர்லாக் ஹோம்ஸ் முதன்முதலில் அறிமுகமானார். அதில் டாக்டர் வாட் ஸனும் ஷெர்லாக் ஹோம்ஸும் ‘221. பி. பேக்கர் தெரு’ என்ற முகவரியில் உள்ள இல்லத்தில் ஒன்றாக குடி யிருக்கிறார்கள். பின்னாளில் இவ்வீட் டில் ஷெர்லாக் ஹோம்ஸ் நிஜமாக வசிப்பதாக நினைத்துக் கொண்டு வாசகர்கள் தேடி வரத் தொடங்கினார்கள். அந்த அளவு அந்த வீடு பிரபலமானது.

ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் நிபுணர் என்றாலும் ஜேம்ஸ்பாண்ட் போல அதிரடி வேலைகள் செய்ய மாட்டார். அழகிகளுடன் கூத்தடிக்க மாட்டார். அவருக்கு இலக்கியத்திலோ, அரசியலிலோ ஈடுபாடு கிடையாது. குற்றவியலில் அளவுக்கு அதிகமான அறிவு கொண்டவர். இங்கிலாந்தில் நடைபெற்ற அத்தனை குற்றங்களையும் ஆராய்ந்து வைத்திருப்பவர். பிரிட்டிஷ் சட்டங்கள் குறித்து நன்கு அறிந்தவர். காவல்துறை யோசிக்காத புதிய கோணத்தில் குற்றத்தை அணுகி, தீர்த்து வைக்கக்கூடியவர் ஹோம்ஸ். அவரது புத்திசாலித்தனம் வாசகர்களை வெகுவாக கவர்ந்தது.

துப்பறியும் கதைகளுக்கு முன்னோடி எழுத்தாளர் எட்கர் ஆலன் போ. இவர் உருவாக்கிய ‘அகஸ்டே டியூபின்’ என்ற கதாபாத்திரம்தான், புனைவில் இடம்பெற்ற முதல் துப்பறியும் நிபுணர் என்கிறார்கள்.

இவரைத் தொடர்ந்து எமீல் கபோரியூ, அகதா கிறிஸ்டி, இயான் பிளமிங், ரேமாண்ட் சாண்ட்லர், அயன் ரான்கின் ஹென்னிங் மேன்கெல், மைக்கேல் கன்னல்லி டாஷியல் ஹாமெட், எட் மக்பெய்ன், டான் பிரவுன், ஜேம்ஸ் பாட்டர்ஸன், டென்னிஸ் லெஹேன், ஜேம்ஸ் எல்ராய் என சிறந்த குற்றப் புனைவு எழுத்தாளர்கள் உலகெங்கும் உருவாகியிருக்கிறார்கள். சம காலத்தில் மிக சுவாரஸ்யமான கிரைம் நாவல்கள் ஸ்காண்டி நேவிய நாடுகளில் இருந்து எழுதப்படுகின்றன என் கிறார்கள்

தமிழில் எழுதப்பட்ட முதல் துப்பறியும் நாவல், பண்டித நடேச சாஸ்திரியின் ‘அற்புத குற்றங்கள்’. இதில் தானவன் என்ற கதாபாத்திரம்தான் துப்பறியும் நிபுணர். இதனை தொடர்ந்து ஜே.ஆர்.ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார் வடுவூர் துரைசாமி ஐயங்கார், முதலியோர் துப்பறியும் நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். இவை பெரும்பாலும் அயல்நாட்டு நாவல்களின் தழுவல்களாக இருந்தன.

அடுத்த காலகட்டத்தில் வெற்றிகர மான துப்பறியும் கதைகளை தமிழ் வாணன், மேதாவி, சிரஞ்சீவி, சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன் றவர்கள் எழுதியிருக்கிறார்கள். தேவ னின் ‘துப்பறியும் சாம்பு’ எனக்குப் பிடித்தமான கதாபாத்திரம்.

உலகப் புகழ் பெற்ற இயக்குநரான சத்யஜித்ரே ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ கதைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆகவே, அவர் ‘பெலுடா’ என்ற துப்பறி யும் நிபுணரை முதன்மைபடுத்தி 35 சிறு நாவல்கள் எழுதியிருக்கிறார். ‘பெலுடா கதைகள்’ தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

1833-ல் முதன்முதலாக பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியைத் தொடங்கி யவர் பிரான்சிஸ் விடோக். (Francois Vidocq). இவர் ஒரு கிரிமினல். பல முறை சிறை சென்றுவந்த குற்றவாளி. காவல்துறைக்கு உதவி செய்வதற்காக திருந்தி வாழும் குற்றவாளிகளைக் கொண்டு விடோக் துப்பறியும் நிறு வனம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த நிறு வனத்தின் வழியே பல்வேறு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆகவே விடோக்கை பிரான்ஸ் காவல்துறை அதிகம் பயன்படுத்திக் கொண்டது. தொழில்முறையாக முதல் துப்பறியும் நிபுணர் விடோக் தான். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் காவல்துறை யில் இருந்து ஒய்வு பெற்ற சார் லஸ் பிரடெரிக் பீல்டு தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இவர் எழுத்தாளர் சார்லஸ் டிக்கென்ஸின் நண் பர். இப்படித்தான் துப்பறியும் கலை தனித் தொழிலாக வளரத் தொடங்கியது,

அமெரிக்க துப்பறியும் நாவல்கள் அடைந்த வீச்சை ரஷ்ய துப்பறியும் கதைகள் அடையவில்லை. ஆனால், ரஷ்ய துப்பறியும் கதைகளுக்கு என தனித்துவமிக்க எழுத்துமுறை உண்டு.

லெவ் ஷெய்னின் எழுதிய புலனாய்வாளரின் குறிப்புகள் போன்ற புத்தகத்தை வழக்கமான துப்பறியும் கதையாக மட்டும் கருதமுடியாது. ‘ராதுகா’ பதிப்பகம் 1988-ம் ஆண்டு இதனை வெளியிட்டுள்ளது. ரஷ்ய மொழியில் இருந்து இதனை தமிழாக்கம் செய்திருப்பவர் நா.முகமது செரீபு. தற்போது இந்தப் புத்தகம் அச்சில் இல்லை. முன்பு மலிவு விலையில் 7 ரூபாய்க்கு இந்தப் புத்தகம் விற்கப் பட்டுள்ளது.

27 வருஷங்கள் புலனாய்வு அதிகாரி யாக பணியாற்றிய ஷெய்னின் தனது அனுபவங்களின் வழியே குற்றவாளி களின் மனநிலையை ஆராய்ச்சி செய் கிறார். தனது முன்னுரையில் ஒரு எழுத் தாளனுக்கும் புலனாய்வு அதிகாரிக்கும் இடையில் நிறைய பொதுவான அம்சங் கள் இருக்கின்றன. இருவருமே மனித வாழ்வின் சிக்கல்கள், துன்ப நிகழ்வுகளை ஆராய்பவர்கள்.

சம்பந்தபட்ட மனிதர் களின் மனோநிலையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவர்கள். தனது பாத்திரங்களின் ஆன்மாவுகுள் நுழைந்து அவர்களின் பலவீனங்களை, இன்ப துன்பங்களை, வெற்றி தோல்விகளை, அதன் பின் னுள்ள அறியாத காரணங்களை அறிந்து கொள்பவர்கள். ஆகவே, எந்த வாய்ப்பு தன்னை புலனாய்வு அதிகாரி யாக ஆக்கியதோ, அதுவே தன்னை எழுத்தாளனாகவும் ஆக்கியது எனக் கூறுகிறார் ஷெய்னின்.

அமெரிக்க துப்பறியும் கதைகளைப் போலின்றி இதில் வரும் துப்பறியும் நிபு ணர், அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி. அவர் காவல்துறையோடு இணைந்து பணியாற்றுகிறார். சட்டத்தின் துணை கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்கிறார்.

லெவ் ஷெய்னின் கதைகளின் முக் கியச் சரடு தொழிலைவிட்டு விலகிய முன் னாள் குற்றவாளிகளைக் கொண்டு துப் பறிவது. குறிப்பாக துளையிட்ட தினார் நாணயங்கள் கதையில் நடைபெற்ற நாணயக் கொள்ளையைக் கண்டுபிடிக்க அட்மிரல் நெல்சன் என்ற திருடனின் உதவியை நாடுகிறார் ஷெய்னின்.

அவன் மாஸ்கோவில் இருக்கும் அத்தனை திருடர்களையும் ஒன்று திரட்டி, வங்கி கொள்ளையைப் பற்றி தீர விசாரிக்கிறான். அவன் மூலமாகவே முக்கியமான தகவல் கிடைக்கிறது.

ஜேம்ஸ் பாண்ட் படம் போல சாகசமும் திருப்பமும் நிரம்பிய இக்கதையின் ஊடாக பூட்டு தயாரிக்கும் நிறுவனங்கள் எப்படி தொழில்போட்டியில் ஈடுபடுகின் றன? இந்த நிறுவனங்களைத் தோற் கடிக்க ஒரு திருடன் எந்த பூட்டாக இருந்தாலும் எப்படி திறந்து காட்டுகிறான் என்ற விவரங்கள் ஊடாடுகின்றன.

முடிவில் அந்த திருடனுக்கு தங்கள் பூட்டு கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் வேலை தர நிறுவனம் முடிவுக்கு வருகிறது.

ரஷ்ய சமூகத்தில் அன்று நிலவிய சூதாட்டம், வைரக் கடத்தல், பணமோசடி போன்றவை எதனால் உருவாகின? எப்படி சட்டத்தின் துணை கொண்டு அதை ஒடுக்கினார்கள் என்பது குறித்த விளக்கங்களை தருவது ஷெய்னின் தனிச் சிறப்பு!

- இன்னும் வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x