Published : 02 Jul 2015 10:45 AM
Last Updated : 02 Jul 2015 10:45 AM

வீடில்லா புத்தகங்கள் 39: தேசம்தோறும் சினிமா!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேசத் திரைப்படங் களைப் பார்ப்பதற்கு, திரைப்பட சங்கங்கள் மட்டுமே வழியாக இருந்தன. சென்னையின் ஃபிலிம் சேம்பரிலும், ரஷ்ய கலாச்சார மையத்திலும், அமெரிக் கன் சென்டரிலும், மேக்ஸ்முல்லர் பவனி லும் காட்டப்படும் அயல் சினிமாக்களைத் தேடித் தேடிப் பார்த்திருக்கிறேன்.

உலகத் திரைப்பட விழாக்களைக் காண்பதற்காக டெல்லி, மும்பை, கொல் கத்தா, கோவா என அலைந்திருக்கிறேன். திரைப்படம் தொடர்பான புத்தகங்களை வாசிக்க வேண்டி அமெரிக்கன் சென்டர் நூலகத்திலும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திலும் மணிக்கணக்கில் செல வழித்திருக்கிறேன்.

அப்போது உலக சினிமா குறித்து அறிந்துகொள்ள தமிழில் புத்தகங்களே கிடைக்காது. பிரான்ஸ்வா த்ரூஃபோ, ரோபெர் ப்ரேஸோன், லூயி மால் பற்றிய வெ.ராமின் புத்தகங்கள், ஐசன்ஸ்டீன் பற்றிய சிறிய நூல், தார்க்கோவெஸ்கி பற்றிய அறிமுக நூல், பேல பெலாஸ் எழுதிய சினிமா கோட்பாடு என பத்துக்கும் குறைவான புத்தகங்களே வாசிக்கக் கிடைத்தன.

இன்று உலக சினிமா குறித்து தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன. தீவிர சினிமா இதழ்களும் வெளியாகின்றன. சிறுபத்திரிகைகள் தொடங்கி பெரும் பத்திரிகைகள் வரை அனைத்தும் உலக சினிமா குறித்து எழுதுகின்றன. சர்வதேச சினிமா குறித்து இணையத்திலும் நிறைய எழுதுகிறார்கள்.

2004-ம் ஆண்டு உலக சினிமா என்ற ஆயிரம் பக்க நூல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து உலக சினிமாவை அறி முகம் செய்யும் விதமாக ஆறு நூல் களை எழுதியிருக்கிறேன். அவற்றில் சில கல்லூரிகளில் பாடமாக வைக்கப் பட்டுள்ளன. உலக சினிமா குறித்து நான் எழுதக் காரணமாக இருந்தவை, நான் படித்தப் புத்தகங்களும் பார்த்த படங்களுமே.

உலக சினிமாவின் பல முக்கிய நூல் கள் இன்னமும் தமிழாக்கம் செய்யப் படவில்லை. குறிப்பாக, ஆல்பிரட் ஹிட்ச் காக்கை த்ரூஃபோ செய்த விரிவான நேர்காணல் புத்தகம்; டொனால்டு ரிச்சி எழுதிய அகிரா குரோசாவா பற்றிய நூல்; ஸ்டீவன் கார்ட் எழுதிய ‘ஷாட் பை ஷாட்’; ஜோசப் மசிலி எழுதிய ‘பைவ் சீஸ்’; சத்யஜித் ரே எழுதிய ‘அவர் ஃபிலிம்ஸ் தேர் ஃபிலிம்ஸ்’ போன்றவை தமிழில் அவ சியம் மொழியாக்கம் செய் யப்பட வேண்டியவை.

கொச்சியில் உள்ள நடைபாதை கடை ஒன்றில், பிரெஞ்சு சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநரான பிரான்ஸ்வா த்ரூஃபோ எழுதிய சினிமா கட்டுரைகளின் தொகுப்பான ‘தி ஃபிலிம்ஸ் இன் மை லைஃப்’ புத்தகத்தை வாங்கினேன்.

த்ரூஃபோ பத்திரிகையாளராக பணி யாற்றிய காலத்தில் திரைப்பட விமர்சகராக நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1954 முதல் 58 வரை த்ரூஃபோ எழுதிய இந்தக் கட்டுரைகளில் பாதி அவர் இயக்குநர் ஆன பிறகு எழுதியவை.

சிறுவயதில் அத்தையோடு சினிமா பார்க்க போன நினைவில் தொடங்கி அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறி, திருட்டுத் தனமாக தியேட்டரின் பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழைந்து, நிறைய திரைப்படங்களை ஆறேழு முறை பார்த்த அனுபவத்தை முன்னுரையில் விவரிக்கிறார் த்ரூஃபோ.

தன் வயதையொத்த மற்ற சிறுவர் களைப் போல கதாநாயகனுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவில்லை. மாறாக எந்த கதாபாத்திரம் கெட்டவ ராக சித்தரிக்கப்படுகிறதோ, அதனோடு தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொண்ட தாக கூறுகிறார்.

மவுனப் படங்கள் தொடங்கி பேசும் படம் வரையான பல்வேறு திரைப்படங் கள் குறித்த கட்டுரைகளை எழுதியிருக் கிறார் இவர். இதில் சாப்ளின், ரெனார், ஜான் போர்டு, பிரிட்ஜ் லாங், ஆல்பிரட் ஹிட்ச் காக், எலியா கசன், ஸ்டான்லி குப்ரிக், சிட்னி லுமெட் பெர்க்மென், ழாக் தாதி போன்ற முக்கிய இயக்குநர் களைப் பற்றிய கட்டுரைகள் குறிப்பிடத் தக்கவை.

‘பத்திரிகையாளராக இருந்த நாட் களில் ஜான் போர்டின் படங்களை கடுமை யாக விமர்சனம் செய்து எழுதியிருக் கிறேன். ஆனால், இயக்குநர் ஆன பிறகு அவரது படங் களை காணும்போது போர்டின் மேதமையை என்னால் உணர முடிகிறது. அமெரிக்க சினிமா வின் மிகச் சிறந்த இயக்குநர் ஜான் போர்டு.

குறிப்பாக ஜான் போர்டு கேமராவை உபயோகிக்கும் விதம் அற்புதமானது. காட்சி கோணங்கள் பெரிதும் கதாபாத்திரங்களின் நோக்கி லேயே எடுக்கப்படுகின்றன. இவான் துர்கனேவ் அல்லது மாப்பசான் கதை யைப் படிப்பது போல கதாபாத்திரங் களின் வழியே நாம் படத்துக்குள் பிரவேசிக்கிறோம். அவர்கள் காட்டுகிற உலகை நம்புகிறோம், பின்தொடர் கிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம். எந்த இடத்தில் பார்வையாளன் சிரிப்பான்? எப்போது அழுவான் என ஜான் போர்டு நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். அதுதான் போர்டின் வெற்றி’ என த்ரூஃபோ குறிப்பிடுகிறார்,

பிரிட்ஜ் லாங்கின் படத்தைப் பற்றி குறிப்பிடும் த்ரூஃபோ, ‘நாஜி ராணு வத்தால் துரத்தப்பட்டு ஜெர்மனியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் லாங். ஆகவே, அவரது திரைப்படங்களில் திடீரென வன்முறை நிகழும். அதற்கு பழிவாங்குவதை நோக்கியதாக கதை நகரத் தொடங்கிவிடும்’ எனக் கூறுகிறார்.

‘லாங்கின் காட்சிகளை இன்னொரு வர் நகல் எடுக்கவே முடியாது. ஒவ் வொரு ஷாட்டும் ஓவியம் போல கச்சித மாக, பேரழகுடன் உருவாக்கப் பட்டிருக்கும். ஒரு நடிகர் வசனத்தை உச்சரிக்கும்போதுகூட எந்த சொல் அழுத்தமாக வெளிப்பட வேண்டும் என்பதை லாங் தீர்மானம் செய்திருப் பார். தன் காலத்தை விஞ்சிய மேதமை யும் அசலான கலை உள்ளமும் கொண்ட பிரிட்ஜ் லாங், குறைவாக கொண்டாடப் பட்ட ஒரு மகத்தான கலைஞன்’ என வியந்து பாராட்டுகிறார் த்ருஃபோ.

சார்லி சாப்ளின் திரைப்படங்கள் குறித்து மூன்று கட்டுரைகள் இதில் உள்ளன. அதில் ஒன்று, ‘தி கிரேட் டிக் டேட்டர்’ படத்தை சாப்ளின் உருவாக் கியது குறித்தது. ‘படத்தின் கடைசிக் காட்சியில் ஹிட்லராக நடிக்கும் சாப்ளின் நிகழ்த்தும் உரை சினிமா வரலாற்றில் மிக முக்கியமானது. பைபிளின் சாராம்சம் போல அந்த உரை அமைந்துள்ளது. இக்காட்சியின் மூலம் உலகின் மனசாட்சியை சாப்ளின் தொட்டுவிட்டார்’ என புகழாரம் சூட்டுகிறார்,

இதுபோலவே சாப்ளினும் மார்லன் பிராண்டாவும் நடித்த ‘ஏ கிங் இன் நியூயார்க்’ படம் குறித்து விவ ரிக்கும்போது, ‘இந்த முறை சாப்ளின் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சிக்கவில்லை; மாறாக அவர் களுடன் அறிவுபூர்வமான உரை யாடல் ஒன்றை நிகழ்த்த முயற்சித்துள் ளார்.

ஒரு கலைஞனாக அவர் எடுத்த இந்த முடிவு பாராட்டுக்குரியது. ஆனால், படம் ஒடவில்லை. மிகப்பெரிய தோல்வி. ஒருவேளை சாப்ளின் நினைத்திருந்தால் இதே கதையை வேறு விதமாக திரைக் கதை எழுதி எளிதாக பார்வையாளரை அழவும், சிரிக்கவும் வைத்திருக்கக் கூடும்.

ஆனால், பார்வையாளனின் ரசனைக்கு தீனி போடுவது மட்டும் தனது வேலையில்லை’ என சாப்ளின் உணர்ந்திருந்தார். ஆகவே, ஒரு தீவிரமான அரசியல் கட்டுரையைப் போல படத்தை உருவாக்கியிருந்தார். படம் தோல்வியடைந்தாலும் சமூக பொறுப்பு மிக்க கலைஞன் என்ற அடையாளத்தை சாப்ளின் பெற்றார். அதுதான் அவர் விரும்பியதும், என்கிறார் த்ரூஃபோ.

இவை சினிமா குறித்த பாராட்டு கட்டுரைகள் இல்லை. சர்வதேச சினிமாவைப் புரிந்துகொள்ளவும், ஒரு திரைப்படத்தின் பல்வேறு தளங்களை, கருத்தியலை அடையாளம் காணவும் உதவும் முக்கிய வழிகாட்டுதலாகும்.

- இன்னும் வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

முந்தைய அத்தியாயம்- >வீடில்லா புத்தகங்கள் 37: இப்படித்தான் இருக்கிறது வாழ்க்கை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x