Last Updated : 28 Jun, 2015 12:54 PM

 

Published : 28 Jun 2015 12:54 PM
Last Updated : 28 Jun 2015 12:54 PM

சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பு வரலாறு: என்னையும் விழுங்கிய வியப்பு

கனடா தமிழ்த் தோட்டமும் டொரண்டோ பல்கலைக்கழகமும் இணைந்து ஹவாயில் வசிக்கும் வைதேகி ஹெர்பர்ட்டைக் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் விருது வழங்கிக் கவுரவித்தது. முல்லைப்பாட்டு, நெடுநெல்வாடை ஆகிய தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் சிறப்புற மொழிபெயர்த்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி அவரை நேர்காணல் கண்டது.

அந்த நேர்காணலில் அவர் சில தகவல்களைத் தெரிவித்திருந்தார். “சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டில் இதுவரை வேறு ஒருவரும் ஒரு நூலுக்கு மேல் முழுமையாக மொழிபெயர்த்ததில்லை; சங்கத் தமிழ் இலக்கியம் அறிந்த அறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பது காரணமாக இருக்கும். எனக்குத் தமிழ் அறிவோடு ஆங்கிலமும் இணைந்திருப்பதால் செய்ய முடிகிறது; பதிற்றுப்பத்து நூலை நானே முதன்முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன். கடினமான நூல் என்பதனால், இதுவரை எவருமே அதை மொழிபெயர்க்க முயன்றதில்லை” போன்ற செய்திகளைக் கூறியிருந்தார்.

இந்தத் தகவல்கள் சரியானவையல்ல. பதிற்றுப்பத்தை வைதேகி முழுமையாக மொழிபெயர்த்திருப்பது பாராட்டுக்குரியதே. ஆனால் இந்நூலை முதன்முதலில் முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஏ.வி. சுப்ரமணியம். 1980-ம் ஆண்டு, இம்மொழிபெயர்ப்பைத் தமிழக அரசு, கல்வித் துறை மூலமாக வெளியிட்டது. 2,000 படிகள் அச்சிடப்பட்டன.

மேலும், தஞ்சையில் வசிக்கும் தமிழ் அறிஞரும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த செந்தமிழ்க் கலைக் கல்லூரியின் மேனாள் முதல்வரும் என் தந்தையுமான அ.தட்சிணாமூர்த்தி அகநானூறு (1999), நற்றிணை (2000), குறுந்தொகை (2007), பத்துப்பாட்டு (2012) உட்படப் பதிமூன்று சங்க இலக்கிய நூல்களையும், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய பதினெண்கீழ்க்கணக்கு (2010) நூல்களில் ஆறையும் சேர்த்து, மொத்தம் 19 பழந்தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவற்றை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்கள் வெளியிட்டன. முதன்முதலில் 13 சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், அகநானூற்றின் முதல் முழு ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்தவரும், மேற்கூறப்பட்டுள்ள ஆறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்தவரும் இவரே என்பது குறிப்பிடத் தக்கது. இப்பணிகளை அங்கீகரித்துத் தமிழக அரசு, தமிழ்ச் சங்கங்கள், நல்லி-திசை எட்டும் போன்ற அமைப்புகள் ஆகியவை விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன.

இவரைத் தவிர, 2013 வரையில், அறிஞர்கள் பலர் சங்க இலக்கிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை, ஏ.வி. சுப்ரமணியம், கே.ஜி. சேஷாத்ரி, பி. ஜோதிமுத்து, முனைவர். ராஜரத்தினம், ஜே.எம். நல்லசாமி பிள்ளை, ஜே.வி. செல்லையா, என். ரகுநாதன், வி. முருகன், வி. கந்தசாமி முதலியார், ஈவா வில்டன், என்று இப்பட்டியல் இன்னும் நீள்கிறது. இவர்களில், பத்துப்பாட்டை முழுமையாக மொழிபெயர்த்த செல்லையாவில் தொடங்கி, அதில் அதிகபட்சமாக ஆறு வரை மொழிபெயர்த்தவர்களும், எட்டுத் தொகை நூல்களில் இரண்டையாவது முழுமையாக மொழிபெயர்த்தவர்களும் அடங்குவார்கள்.

மேலும், கோதண்டபாணிப் பிள்ளை, பொன்னம்பலம் அருணாசலம், தெ. போ. மீனாட்சி சுந்தரன், சண்முகம் பிள்ளை மற்றும் டேவிட் லுடன், பெ.நா. அப்புசாமி, எஸ்.எம். பொன்னைய்யா, நல்லாடை பாலகிருஷ்ண முதலியார், நீ. கந்தசாமிப்பிள்ளை, பி. குமாரசாமி, கி.எல். ஹார்ட், டி. மாதவ மேனன், ஏ.கே. ராமாநுஜன் , ம.இலெ. தங்கப்பா, மார்த்தா ஆன் செல்பி ஆகியோர் முழுமையாகவும், தேர்ந்தெடுத்த செய்யுள் தொகுதிகளாகவும் சங்கஇலக்கியங்களை மொழிபெயர்த் துள்ளனர். அண்மைக் காலமாக எஸ்.என். கந்தசாமி, நாசிர் அலி போன்ற அறிஞர்கள் பலரும் இப்பணியில் ஆர்வம் செலுத்திவருகின்றனர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை கொண்ட அறிஞர்கள்தாம் இத்துணை மொழிபெயர்ப்புப் பணிகளையும் 1895 முதல் தொடர்ந்து செய்துவருகின்றனர்.

பிபிசி ஊடகத்தில் வெளியான நேர்காணலில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தியும் உண்டு. ‘சங்க இலக்கிய நூல்கள் 12 ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு’ என்ற தலைப்பில் அமைந்த இந்நேர்காணல், வைதேகி, பன்னிரண்டு இலக்கியங்களை மொழிபெயர்த்துள்ள பணியைப் பாராட்டி, இலக்கியத் தோட்டம் விருது வழங்கியுள்ளது என்ற செய்தியுடன் தொடங்குகிறது. அதாவது, நூல் வடிவம் பெற்றிராத படைப்புகளுக்கும் சேர்த்து இலக்கியத் தோட்டம் விருது வழங்கியுள்ளதாகக் கூறுகிறது, பிபிசி.

இந்நேர்காணலை, என் கவனத்துக்குக் கொண்டுவந்த தஞ்சையைச் சேர்ந்த, தமிழ் ஆர்வலர் எஸ். கோவிந்தராஜன், ஜூலை மாதம், பிபிசி அமைப்பினரையும் தமிழ் இலக்கியத் தோட்டத்தையும் மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டார். நானும் கடிதம் எழுதினேன். இலக்கியத் தோட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தைத் தொலைபேசியில் அழைத்து, இவ்விவரங் களைக் கூறினேன். அவரிடம் வைதேகியின் மின்னஞ்சல் முகவரியைப் பெற்று அவருக்கும் கடிதம் எழுதினேன். அழைத்துப் பேசவும் செய்தேன்.

மூன்று மாதங்கள் கழித்து, அக்டோபர் மாதம், வைதேகியின் மற்றுமோர் நேர்காணல் பிரபல வார இதழ் ஒன்றில் வெளிவந்தது. அவரை நேர்காணல் செய்திருந்த அ. முத்துலிங்கம், வைதேகியை அறிமும் செய்யும்போது, “ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையை, 2,000 வருடங்களாக ஒருவருக்குமே தோன்றாத இந்த மேன்மையான பணியை, தனி ஒருவராகச் செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறிந்தபோது என்னை வியப்பு விழுங்கியது” என்று எழுதுகிறார். இதைப் படித்த பின் என்னையும் வியப்பு விழுங்கியது.

இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இன்றும் இச்செய்திகள், பிபிசி தளத்திலும், வார இதழின் தளத்திலும் எவ்வித மாற்றமுமின்றி அப்படியேதான் உள்ளன. இப்பக்கங்கள் தொடர்ந்து பலரால் பகிரவும்படுகின்றன. அதைப் படிப்போருக்கு, சங்க இலக்கிய மொழிபெயர்ப்பில் வைதேகியே முன்னோடி என்றும், 2,000 ஆண்டுகள் வரலாற்றில், அவர் மட்டுமே தனிப் பங்களிப்பாளர் என்றும் எண்ணம் உருவாகும். ஒரு சாதாரண வாசகருக்குச் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஊடகங்களும் இணையமும் சொல்வதே உண்மை என்று நம்பும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறதென்பதை நாம் அறிவோம். இப்படியோர் சூழலில், ஊடகங்களின் வழியே தவறான செய்திகள் பரவும்போது, அவை ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கணித்தல் கடினம். அவை திருத்தப்படாமல் மீண்டும் மீண்டும் பகிரப்படும்போது, எதிர்காலத்தில், அவையே ஆவணங்களென ஆகிவிடும் அபாயமிருக்கிறது.

தொடர்புக்கு:d.eeranila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x