Published : 23 Jul 2015 11:05 AM
Last Updated : 23 Jul 2015 11:05 AM

வீடில்லா புத்தகங்கள் 42: பொம்மைகள் வளர்வதில்லை!

குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலை. சாதாரண எளிய நிகழ்வைக் கூட சுவாரஸ்யமான கதையாக்கலாம். நான் பள்ளியில் படிக்கும்போது சௌந்தரபாண்டியன் என்ற ஆசிரியர், ‘பெயர் மறந்து போன ஈ’ என்ற கதையைப் பாடலுடன் சொல்வார். இன்றும் அந்தக் கதை பசுமையாக மனதில் நிற்கிறது

சிறுவர்களுக்குக் கதை சொல்லும் முகாம் ஒன்றில், ‘பினாச்சியோ’ கதையை அவர்களுக்கு சொன்னேன். ‘பொய் சொன்னால் பினாச்சியோவின் மூக்கு வளர்ந்துவிடும்’ என்பதை சிறார்கள் ஆர்வத்துடன் ரசித்துக் கேட்டார்கள். முடிவில் கூட்டத்தில் இருந்து ஒரு சிறுவன் எழுந்து கேட்டான்: ‘‘பொய் சொன்னா மூக்கு வளர்ந்துரும்னா… பொய் சொல்றதைக் கேட்டா காதும் வளர்ந்துருமா சார்?’’

இதுதான் சிறார்களின் கற்பனைத் திறன். அவர்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றைக் கற்பனை செய்து கொள்ளக்கூடியவர்கள். உடனே, அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். மறுகதை புனைவார்கள். கதை வழி யாக சிறுவர்கள் நிறையக் கற்றுக்கொள் கிறார்கள்.

அந்தச் சிறுவர்களிடத்தில் ‘‘யாருக்கா வது ‘மூக்கு’ பற்றி வேறு ஏதாவது கதைத் தெரியுமா?’’ எனக் கேட்டேன். சங்கர் என்ற 10 வயது சிறுவன் எழுந்து, கதைச் சொல்லத் தொடங்கினான்.

‘‘ஒரு காலத்துல மனுசங்க எல்லாருக் கும் ரெண்டு மூக்கு இருந்தது. ஒரு மூக்கு நல்ல வாசனைக்கு; இன்னொரு மூக்கு கெட்ட வாசனைக்கு. நல்ல வாசனை யைச் சுவாசித்த மூக்கு அழகா இருந்தது. அது நல்ல வாசனையை நுகர்றதாலே பளபளன்னு மினுங்கிக்கிட்டே இருந்துச்சி. கெட்ட வாசத்தைச் சுவா சித்த மூக்கு அசிங்கமா இருந்ததோட, அது நாளுக்கு நாள் சுருங்கிட்டே வந்திச்சு.

ஒருநாள் இந்த ரெண்டு மூக்குக்கும் இடையிலே ‘யார் பெரிய ஆள்’னு சண்டை வந்துட்டு. உடனே ரெண்டும் ‘நாங்க இனிமே வேலை செய்ய மாட்டோம்’னு வேலையை நிறுத்திகிடுச்சி. இதனால மனுசங்களுக்கு எந்த வாசனையும் தெரியாமப்போயிட்டு. அவங்கள்லாம் கடவுள்கிட்டப் போய் முறையிட்டாங்க. உடனே கடவுள் வந்து, ‘உங்க சண்டையால மனுசங்க ரொம்பக் கஷ்டப்படுறாங்க, விட்டு கொடுத்துப் போங்க’ன்னு சொன்னார்.

கடவுள் சொன்னதை ரெண்டு மூக்கும் கேட்கவே இல்லை. உடனே கடவுள் ‘இனிமே மனுசனுக்கு ஒரே மூக்குதான். அதுலதான் நல்லதும் கெட் டதும் நுகரணும்னு’ சொல்லி ஒரு மூக்கை கட் பண்ணிட்டாராம். அப்படித்தான் மனு சனுக்கு ஒரு மூக்கு வந்துச்சி’’ என்று கதையை முடித்தான் அந்தச் சிறுவன்.

‘‘உனக்கு இந்தக் கதை எப்படித் தெரியும்?’’ எனக் கேட்டேன்.

‘‘நானாதான் சொல்றேன் சார்…’’ என்றான் சங்கர்.

இரண்டு மூக்குள்ள மனிதர்களைப் பற்றி 10 வயது சங்கர் கற்பனை செய்து கதையாகச் சொன்னது சந்தோஷமாக இருந்தது.

மூக்கைப் பற்றி எத்தனையோ கதை கள் இருக்கின்றன. ‘உலகப் புகழ் பெற்ற மூக்கு’ என ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார் வைக்கம் முகமது பஷீர். தனது மூக்கைத் தொலைத்த ஒருவனைப் பற்றி ரஷ்ய எழுத்தாளர் கோகல் ஒரு கதை எழுதியிருக்கிறார். மூக்கில்லாத மனிதர்களைப் பற்றி விஞ்ஞானப் புனைகதை எழுதியிருக் கிறார் ஆண்ட்ரூ கெவின். இத்தனை யிலும் சிறப்பானது பினாச்சியோதான்!

இத்தாலிய எழுத்தாளர் கார்லோ கொலாடியால் எழுதப்பட்ட நாவல் ‘பினாச்சியோவின் சாகசங்கள்’ ( The Adventures of Pinocchio). 1882-ல் இந்தக் கதையின் ஒரு பகுதி தொடர்கதையாக வெளிவந்தது. பின்புதான் முழு நாவ லாக உருப்பெற்றது.

கொலாடியின் எழுத்துப் பணி பிரெஞ்சு மொழியில் இருந்து தேவதைக் கதைகளை மொழிபெயர்ப்புச் செய் வதில் தொடங்கியது. பின்பு அந்த அனுபவத்தில் இருந்து, தானே எழுதத் தொடங்கினார், அப்படி உருவானதே ‘பினாச்சியோ’.

இத்தாலியில் எழுதப்பட்ட இந்த நாவல் 1892-ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. ‘பாவை பதிப்பகம்’ இதைத் தமிழில் வெளியிட்டுள்ளது. இதனை சிறப்பாக தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் யூமா.வாசுகி.

தச்சரான கெபட்டோ ஒருமரக் கட் டையை வாங்கி வந்து, பொம்மலாட்ட பொம்மை ஒன்றை செதுக்க முயற்சிக் கிறார். அப்போது அந்தப் பொம்மைக்கு உயிர் வந்து, மனிதர்களைப் போலவே பேசத் தொடங்குகிறது. ஆச்சரியமடைந்த கெபட்டோ, அதற்கு `பினாச்சியோ’ எனப் பெயரிடுகிறார்.

பினாச்சியோ ஒவ்வொரு முறை பொய் சொல்லும்போதும் அதன் மூக்கு நீண்டுவிட ஆரம்பிக்கிறது. சில நேரம் மிக நீளமாகிப் போன தனது மூக்கை சரிசெய்வதற்காக மரங்கொத்திப் பறவைகளை உதவிக்கு அழைக்க வேண்டியதாகிறது.

‘பினாச்சியோ’ நாவல் வெறும் பொழுதுபோக்குக் கதை கிடையாது. பெற்றோரின் சொற்படி நடக்காத பிள்ளை கள் என்ன ஆகிறார்கள் என்பதைப் பினாச்சியோவின் வழியே காட்டுகிறார் கொலோடி.

முதன்முறையாக ஒரு பாச்சைதான் பினாச்சியோவுக்கு அறிவுரை சொல் கிறது. அது, ‘பெற்றோருக்குக் கீழ்படியாத வர்கள் ஒருபோதும் உருப்பட மாட் டார்கள். அவர்களால் முன்னேறவே முடியாது’ என உறுதியாகக் கூறுகிறது.

படிக்க விருப்பமில்லாமல், விளை யாட்டுதனமாக ஊர் சுற்றவே பினாச்சியோ முயற்சிக்கிறான். ‘ஊர் சுற்றும்போது சந்தோஷமாக இருக் கலாம். ஆனால், எதிர்காலத்தில் துன்பப் பட வேண்டியிருக்கும். படிக்காமல் ஊர் சுற்றுகிறவன் எதிர்காலத்தில் குற்றவாளி யாகி சிறைக்குப் போவான். அல்லது நோயாளியாகி மருத்துவமனையில் கிடப்பான்’ என்கிறது பாச்சை.

வீட்டைவிட்டு வெளியேறிப் போகும் பினாச்சியோவை, ஒரு நரியும் பூனை யும் இணைந்து ஏமாற்றுகின்றன. தங்க நாணயங்கள் தருவதாக ஏமாற்றும் நரியும் பூனையும், ‘‘நாங்கள் மக்களின் நன்மைக்காகப் பாடுபடுகிறோம். அதற் காகவே எங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறோம்’’ என்று குறிப் பிடுகின்றன. மோசடி பேர்வழிகள் எல்லாக் காலத்திலும் ஒன்று போலதான் இருக்கிறார்கள்.

‘ஒரே நாளில் யாராவது உன்னைப் பணக்காரன் ஆக்கிவிடுவேன்’ என்று சொன்னால் நம்பாதே. அது மோசடி!’ என்று பினாச்சியோவுக்குக் கூறப் படும் எச்சரிக்கை, நம் அனைவருக்கு மானதுதான்.

நாவலில் ஓர் இடத்தில், தனது குளி ராடைகளை விற்றுப் பாடப் புத்தகங் களை வாங்கித் தந்த கெபட்டோவைப் பற்றி நினைக்கும் பினாச்சியோ, ‘தந்தை களால்தான் மகத்தான தியாகங்களைச் செய்ய முடிகிறது’ என நெகிழ்ந்து கூறுகிறான்.

விநோதமான ஒரு தீவுக்குப் போகி றான் பினாச்சியோ. அங்கே சாபம் காரணமாக மனிதர்கள் கழுதைகளாக உருமாறியிருக்கிறார்கள். சந்தோஷத் தீவில் சுற்றியலைந்து அவன் பெறும் அனுபவம் வியப்பானது.

கழுதையும், நாயும், நீலக் கூந்தல் தேவதையும் கூறும் அறிவுரைகள் மறக்கமுடியாதவை.

‘பொய்க்குச் சிறிய கால்களே உள் ளன; அதிகத் தூரம் ஓட முடியாது’, ‘சோம் பேறித்தனம் என்பது மிகவும் மோசமான நோய்; அதைச் சிறுவயதிலேயே குணப் படுத்திவிட வேண்டும். இல்லையென் றால் வாழ்வை நாசமாக்கிவிடும்’, ‘நாம் இந்த உலகத்துக்கு என்ன செய் கிறோமோ, அது மட்டுமே நமக்குத் திரும்பக் கிடைக்கும்’. இப்படி அடிக் கோடிட்டு வாசிக்க வேண்டிய அற்புத மான வரிகள் நிறைய இதில் இருக்கின்றன.

நாவலில் வரும் நீலக் கூந்தல் தேவதை சொல்கிறாள்: ‘‘பொம்மைகள் வளர்வதில்லை; அவை பொம்மை களாகப் பிறந்து, பொம்மைகளாக வாழ்வை முடித்துக் கொள்கின்றன!’’

பினாச்சியோ அதைச் சரியாக உணர்ந்துகொள்கிறான். ஆகவே, முடிவில் மனிதனாக உருமாறுகிறான்.

மனிதர்கள் மாற்றங்களை உருவாக்கு பவர்கள். சிந்தனையிலும் செயலிலும் மாற்றங்களை உருவாக்க புத்தகங்களும் வாழ்க்கை அனுபவங்களும் உதவிசெய் கின்றன. அப்படியான வாழ்க்கைப் பாடங்களில் ஒன்றே ‘பினாச்சியோ’.

- இன்னும் வாசிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

முந்தைய அத்தியாயம்- >வீடில்லா புத்தகங்கள் 41: குற்றம் களைதல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x