Published : 25 Jun 2015 11:05 AM
Last Updated : 25 Jun 2015 11:05 AM
சாலையோரம் இருந்த ஒரு பிச்சைக்காரன் தன்னை நோக்கி ஒரு ரதம் வருவதைக் கண்டான். தனக்குப் பிச்சை போட யாரோ ஒரு புண்ணியவான் வருகிறான் என ஆசையோடு கையேந்தி நின்றான். ரதத்தில் வந்தவன் அருகில் வந்து தனது கைகளை விரித்து ‘‘ஏதாவது கொடு…’’ எனக் கேட்டான்.
‘நானே ஒரு பிச்சைக்காரன்; என் னிடம் கொடுக்க என்ன இருக்கிறது?’ என நினைத்தபடி, தனது பையில் இருந்த தானியத்தில் இருந்து ஒரே ஒரு தானியத்தை எடுத்து, ரதத்தில் வந்தவனின் கையில் போட்டான் பிச்சைக்காரன்.
‘நன்றி’ சொல்லி ரதத்தில் வந்தவன் விடைபெற்று போய்விட்டான். அன்று இரவு பிச்சைக்காரன் தன்னிடம் இருந்த தானியப் பையை எடுத்தபோது, அதில் ஒரே ஒரு தங்க தானியம் இருப்பதைக் கண்டான். ‘ஆஹா! எல்லா தானியங்களையும் அந்த மனிதனுக்கு கொடுத்திருந்தால் அத்தனையும் தங்கமாக மாறியிருக்குமே…’ எனப் புலம்பினான் என்று மகாகவி ரவீந்திர நாத் தாகூர் தனது கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்.
இப்படித்தான் இருக்கிறது மனித வாழ்க்கை!
கடவுளே வந்து யாசகம் கேட்டாலும், ஒற்றைத் தானியத்துக்கு மேல் மனிதன் தர மாட்டான். வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. சொல்லாலும் செயலாலும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய மனிதர்கள் காலத்தால் மறைந்து போனாலும், அவர்களின் நினைவுகள் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். நிறைவான வாழ்க்கை என்பது 100 ஆண்டுகள் வாழ்வது இல்லை; ஆயிரம் பேரின் மனதில் வாழ்வதுதான்!
அப்படி தானறிந்த அபூர்வமான மனிதர்கள் சிலரைப் பற்றிய உண்மை நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டிருக் கிறார் குகன்.
‘பெரும்புள்ளிகள்’ என்ற இந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை. 1994-ல் குகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. சுவாரஸ்யமான தகவல் களையும் உண்மை சம்பவங்களையும் கொண்ட அரிய புத்தகம் இது. ஏன், இதை மறுபதிப்பு செய்யாமல் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
குகன் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியவர். சிறந்த பேச்சாளர். பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளையின் மாணவர். இவர் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றத்துக்குத் துணை செய்ததாக கைது செய்யப்பட்ட சாவடி அருணாசலம் பிள்ளையை, ஆங்கிலேய அதிகாரிகள் மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்.
‘இந்தக் கை தானே சுதந்திரப் போராட்டத்துக்காக ரத்தக் கையெழுத்து போட்டது’ என ரூல் தடியால் அடித்து, இனி எழுதவே முடியாது என்கிற அளவுக்கு கைவிரல்கள் ஒடிக்கப்பட்டன. 23 வயதில் வழக்கில் இருந்து விடுதலை ஆன அருணாசலம், சிறை தந்த நோயுடன் சொத்து பறிபோன நிலையில் அநாதை போல அலைந்து திரிந்திருக்கிறார்.
மீதமுள்ள வாழ்க்கையை சமூகச் சேவையில் கழிக்க முடிவு செய்து, தீண்டாமையை ஒழிக்க அவர் ஒரு உணவகத்தைத் தொடங்கியுள்ளார். அங்கே சமைப்பது முதல் பரிமாறுவது வரை அத்தனையும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான். ‘அப்படியாவது சாதி ஒழியாதா?’ என்பதே அவரது எண்ணம். இதை சகித்துக்கொள்ள முடியாத உயர்சாதியினர் உணவகத்தைத் தீவைத்து எரித்துவிட்டார்கள் என வரலாற்றில் பதிவாகாமல் போன நிகழ்ச்சியைத் தனது கட்டுரையில் பதிவு செய்துள்ளார் குகன்.
1908-ம் ஆண்டு மதுரையில் உள்ள இங்கிலீஷ் கிளப்பின் நடு ஹாலில் மேஜர் ஹார்ன் உள்ளிட்ட ஆங்கிலேய அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள். திடீ ரென ஹாரிசன் அங்கு இருந்த வெள்ளைச் சுவரில் தனது உயரத்தை அளந்து குறித்ததோடு மற்ற அதிகாரிகளின் உயரத்தையும் அதில் பதிவு செய்ய சொன்னார். பலரும் தனது உயரத்தை அதில் பதிவு செய்தனர். கூடவே, தங்கள் பெயரையும் எழுதி கையெழுத்துப் போட்டார்கள். பின்பு, அது ஒரு பழக்கமாகவே உருமாறியது. 1922 முதல் 1946 வரை 350-க்கும் அதிகமான பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்தச் சுவரில் தங்கள் உயரத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இதனால் அந்தச் சுவரைச் சுற்றி கண்ணாடி பிரேம் போட்டு மாட்டியிருக்கிறார்கள். மதுரை சமூகப் பணிக் கல்லூரி வளாகத்தில் அந்தச் சுவர் உள்ளது எனக் குறிப்பிடுகிறார் குகன். இன்றும் அந்தச் சுவர் உள்ளதா எனத் தெரியவில்லை.
அக்காலத்தில் திருநெல்வேலி வட் டாரத்தில் புகழ்பெற்ற கடையாக கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது, ராம ஆனந்தம்பிள்ளை பலசரக்கு அண்ட் ஜவுளிக் கடை. அதை நடத்திய ராம ஆனந்தம்பிள்ளையை ஊர் மக்கள் ‘கைராசிப் பிள்ளை’ என அழைத்தார்கள்.
இவர், சிறுவயதில் அம்மன்புரத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு கால் ரூபாய் கூலிக்காக மூன்று மைல் நடந்து உப்பு மூட்டை சுமந்து கஷ்டப்பட்டுள்ளார். பின்பு, தனது 12-வது வயதில் பிழைப்புக்காக கொழும்புக்குச் சென்று வேலை பார்த்து, தனது 25-வது வயதில் 500 ரூபாய் பணத்துடன் திருநெல் வேலிக்குத் திரும்பி சிறிய பலசரக்கு கடை ஒன்றை ஆரம்பித்து, மெல்ல வளர்ந்து புகழ்பெற்ற வணிகராக உயர்ந்து நின்றார்.
உப்பு மூட்டை தூக்கிய காலத் தில் அவர் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வேலைக்குக் கிளம்பும் போது, ‘என்னடா கவர்னரோட போட்டோ எடுக்கப் போற மாதிரி குளிச்சிச் சிங்காரிச்சிட்டு வாரிய…’ எனக் கேலி செய்வார்களாம்.
பின்னாளில் சென்னை மாகாண கவர்னர் ஆர்ச் பால்டுனை, திருநெல் வேலிக்கு இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் வெற்றி பெற்றதைக் கொண் டாடும்விதமாக ‘விக்டரி ஆர்ச்’சைத் திறந்துவைக்க வந்தபோது, ராம ஆனந் தம்பிள்ளையைப் பற்றி கேள்விபட்டு வரவேற்பு நிகழ்வில் அவரை கலந்து கொள்ளச் செய்தாராம். அப்போது பிள்ளை கவர்னருடன் ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார்.
கவர்னரோடு தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராம ஆனந்தம்பிள்ளை எப்போதும் தனது தலைமாட்டில் தொங்க விட்டிருப்பாராம். காரணம், ‘‘அதை பார்க் கும்போதெல்லாம் ‘என்ன கவர்னரோட போட்டோ பிடிக்கப் போறியா?’ எனக் கேலி செய்தவர்கள் கண்முன்னாலேயே தான் உழைத்து முன்னேறியது நினை வுக்கு வருவதோடு, தனது கடந்த கால வறுமை நிலையை நினைவுபடுத்தி நல்வழிகாட்டுகிறது’’ என்பாராம்.
ஒரு புகைப்படத்தின் வழியே வாழ்வில் அடைந்த வெற்றியையும் அதன் பின் னுள்ள வலியையும் சுட்டிக்காட்டுகிறார் குகன்.
இன்னொரு சம்பவம்… மாணிக்கம் என்ற சாலை ஒப்பந்ததாரர் சாலையை சரியாக போடவில்லை என்ற குற்றத்துக் காக, ஜில்லா போர்டு தலைவர் தளவாய் குமாரசாமி விசித்திரமான ஒரு தண்ட னையை விதித்திருக்கிறார். அது என்ன தெரியுமா?
சாலையைச் சொந்த செலவில் சரிசெய்து தர வேண்டும் என்பதுடன் தென்காசி, கடையம் சாலையில் இரண்டு பக்கமும் மரம் வைத்து வளர்க்க வேண்டும் என்பதே அந்தத் தண்டனை. அதை ஏற்றுக்கொண்டு சாலையின் இரண்டு பக்கமும் மாணிக்கம் வளர்த்த மரங்களை இன்றும் திரவியம் நகர் பகுதியில் பார்க்கலாம் என்கிறார் குகன்.
தமிழர்களாகிய நாம் அரைத்த மாவை அரைப்பது போல சில அறிஞர் களைப் பற்றி மட்டுமே பேசியும் எழுதி யும் வருகிறோம். ஆனால், தமிழ்மண் அவ்வளவு ஏழ்மையானது இல்லை. ஆயிரக்கணக்கான சான்றோர்களும் அறிஞர்களும் இங்கே வாழ்ந்து, இந்த மண்ணுக்குப் பெருமை சேர்ந்திருக்கிறார் கள். அவர்களில் சிலரின் பெருமைக்குரிய வாழ்க்கையை அறிமுகப்படுத்துகிறார் குகன் என்று தனது முன்னுரையில் ஓவியர் மதன் பாராட்டுகிறார். அது மிகச் சரியானதே!
- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
முந்தைய அத்தியாயம்- >வீடில்லா புத்தகங்கள் 36: குறவர்களின் உலகம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT