Published : 11 Jul 2015 09:33 AM
Last Updated : 11 Jul 2015 09:33 AM
குழந்தைப் பருவத்தில் என்னுடைய மகிழ்ச்சி, வருத்தம், துக்கம் இப்படி அத்தனை உணர்ச்சிகளையும் என் தாயிடம்தான் பகிர்ந்து கொள்வேன். இன்றோ என் தாயின் இடத்தை நிரப்புபவை நான் வாசிக்கும் புத்தகங்களே! என் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்வதும் புத்தகங்களிடம்தான். அப்படி வாசிப்பில் ஆழ்ந்து போகும்போது பிரச்சினைக்கான தீர்வையும் அந்தப் புத்தகங்களிலிருந்தே கண்டுகொண்டிருக்கிறேன்.
காந்தியடிகளின் சத்திய சோதனை படித்தபோது, அவர் வாழ்வில் கடைப்பிடித்த அத்தனை விஷயங்களையும் நானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. அம்பேத்கரை வாசித்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் சமூக அரசியல் குறித்த என் புரிதல் வேறு கட்டத்துக்கு நகர்ந்து சென்றது. ஒவ்வொரு முறை காரல் மார்க்ஸை வாசிக்கும்போதும், எத்தனை நெருக்கடிகளில் சிக்குண்ட சமூகமாக இருப்பினும் ஒன்றிணைந்து எதிர்கொண்டால் மாற்றம் சாத்தியம் எனும் நம்பிக்கை விதைக்கப்படுகிறது.
அப்படி எனக்கு விடிவெள்ளியாக அமைந்த புத்தகங்களில் ஒன்று லெபனான் கவிஞர் மிகைல் நைமி எழுதிய ‘மிர்தாதின் புத்தகம்’.
மலை முகட்டில் ஒருவன் ஏறிக்கொண்டிருக்கிறான். அப்போது அவன் கையிலிருக்கும் ரொட்டித் துண்டு களை ஆடுகள் பறித்துத் தின்றுவிடுகின்றன. அடுத்து அவனுடைய உடையும் பறிபோகிறது. ஒரு கட்டத்தில் உடல் முழுவதும் காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட மலை மீது ஏறிக்கொண்டே இருக்கிறான். இப்படி அவநம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கும் சூழலிலும் நம்பிக்கையோடு முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறான். இந்த பயணத்தின் மூலம் அவனுக்காக விடுதலையை அவனே அடைகிறான்.
எத்தனையோ துயரங்கள் நம்மைச் சூழ்ந்து கொண்டாலும், லட்சியங்களை நோக்கி விடா முயற்சியோடு நடந்து செல்லும் போது உயரத்தை எட்ட முடியும் என்பதைச் சொல்லும் நூல் இது. துரோகங்களை எதிர்த்து மனிதனால் வெற்றி பெற முடியும் என்பதே நூலின் சாராம்சம். தத்துவ ஞானி ஓஷோவுக்கு மிகவும் பிடித்தமான நூல் இது. மானுடத்தின் நம்பிக்கை ஒளியைத் தொன்மத்திலிருந்து எடுத்திருப்பார் ஆசிரியர். அதே தீவிரத்தைத் தமிழ் மொழி பெயர்ப்பில் மிக அற்புதமாகத் தந்திருப்பார் கவிஞர் புவியரசு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT