Published : 10 May 2014 12:00 AM
Last Updated : 10 May 2014 12:00 AM
இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையான மதுரை நகரில் காலந்தோறும் வெவ்வேறு மொழி பேசுகின்றவர்கள் குடியேறிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரையும் அரவணைத்துக்கொள்ளும் நகருக்கு மொழி, மதம் எனப் பேதம் எதுவுமில்லை. நகரத்துப் பரப்பில் அவரவர் வாழ்வதற்கான தோது உள்ளது. வைகை ஆற்றின் தென்கரையில் முனிச்சாலை, இஸ்மாயில்புரம் பகுதிகளில் குடியிருக்கும் உருது மொழி பேசும் முஸ்லிம்கள் பற்றிய பின்புலத்தில் எஸ்.அர்ஷியாவின் அப்பாஸ்பாய் தோப்பு நாவல் விரிந்துள்ளது.
வைகை ஆற்றங்கரையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அப்பாஸ்பாய்க்குச் சொந்தமான தோப்பு, காலப்போக்கில் குடிசைகளாகவும் ஓட்டு வீடுகளாகவும் உருமாறுகிறது. பல்வேறுபட்ட விளிம்புநிலையினர் சேர்ந்து வாழும் அப்பாஸ்பாய் தோப்பு, ஆற்றங்கரை உயர்த்தப்பட்டுத் தார்ச்சாலை போடும்போது சிதிலமடைகின்றது. இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தவை குறித்துச் சொல்வதற்கு அர்ஷியாவிற்கு பல விஷயங்கள் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் தலைமுறைகளாக வாழ்பவர்கள் நினைவுகளின் வழியே அந்த மண்ணுடன் ஒன்றிப் போகின்றனர். சாதி, மொழி, மதம் போன்ற அடையாளங்களுக்கு அப்பால் சகமனித உயிர்களுடன் கொள்ளும் நேசம் அளவற்றது. தோப்புப் பகுதியில் வாழும் இந்துகளும் முஸ்லிம்களும் வறுமையிலும் நெருக்கமான நட்புடன் வாழ்கின்றனர். தோப்பை அடுத்துள்ள உருது பேசும் முஸ்லிம்களின் வாழிடமும் கதைக்களனாக ஆகி உள்ளது.
அப்பாஸ்பாய் தோப்பில் குடியிருக்கும் விளிம்புநிலையினருக்கு நாளை என்பது மற்றுமொரு நாளேதான். வசதிக் குறைவான விடுகளில் தங்கிப் பகல் முழுக்க உடலுழைப்பில் ஈடுபட்டுத் துயரப்படும் மனிதர்களின் சோகக்கதைகளைச் சொல்வது மட்டும் நாவலாசிரியரின் நோக்கமல்ல. கசப்பும் வெறுமையும் பொங்கி வழிந்தாலும், இக்கட்டான சூழலிலும் மேன்மையை நோக்கிப் பயணிக்கும் மனித இயல்பு கதைகளின் வழியே சூசகமாகப் பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிதுபுதிதாக இடம்பெறும் மனிதர்களைப் பார்க்கும்போது `தோப்பு’ தான் நாவலில் முதன்மையிடம் பெறுகின்றது. கஜானிமா குல்சார் பேகம் கதை, குஞ்சு நாயக்கர் மகள் குயில்விழியைப் பிடித்துள்ள பேயைப் பாடையேற்ற முயலுதல், யாரைப் பார்த்தாலும் `தோது’ பண்ணிவிடச் சொல்லும் சுப்புணி, சுகுரம்மா என்ற பெயரைத் தொலைத்துவிட்டு எம்.ஜி.ஆர்.பெத்தா எனப் பெயரெடுத்த மூதாட்டி, குழந்தையின்மையால் தங்கம்-வைரமணி இடையே ஏற்படும் முறிவு, ஆறு பெண்களுடன் பிறந்த ரோசாப்பூ பாய், குத்புதீன் - பெருமாள் நட்பு, ரஹமத்துலாவிற்குப் பிறந்த அப்சர் போதையில் தந்தையைக் கேவலமாகத் திட்டுதல், தர்ஹாவில் தனது மருமகள்களுடன் தங்கி சிக்கந்தரிடம் வேண்டும் தாதிபீ, உருது முஸ்லிம் அபுனு தமிழ் முஸ்லிம் பெண் பாத்திமாவைத் திருமணம் செய்துவிட்டு அடையும் துயரம் என இப்படிப் பல்வேறு கதைகளின் வழியே அப்பாஸ்பாய் தோப்பு பதிவாகியுள்ளது.
ரோசாப்பூ பாய் எனப்படும் யூசுப் பற்றிய விவரிப்பு தனித்துவமானது. திருமணமான முதல்நாள் இரவினுக்குப் பின்னர் அவரது மனைவி பொண்டுகன் எனக் குற்றம் சாட்டிவிட்டு வெளியேறிவிட்டாள். ஆறு பெண் குழந்தைகளுடன் பிறந்த யூசுப்பின் உடலில் பெண் தன்மை கூடி விட்டதா? ஓரிரவில் ஆணையோ பெண்ணையோ அறிய முடியுமா? இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றன என்ற கேள்விக்கு விடை எதுவுமில்லை. வசதியானவரான யூசுப், தோப்பில் பிரச்சினை ஏற்படும்போது சரியான வழி காட்டுகின்றார். விபத்தில் பெற்றோரை இழந்த வசந்த மீனாவை மகளாக ஏற்கும் விசாலமும் துணிவும் அவருக்கு இருகின்றது.
வாழ்வின் தீராத பக்கங்களில் என்றும் முடிவற்ற கதைகளுடன் இயங்கும் மனித இருப்பு நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தினர் பற்றி அரசியல்ரீதியில் ஊடகங்களில் தொடர்ந்து தகவமைக்கப்படும் புனைவுகளுக்கு மாற்றாகச் செயல்படும் வல்லமை இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு. அடையாளங்களுக்கு அப்பால் சக மனிதர்கள் மீதான நேசத்தினை வலியுறுத்த வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகு சூழலில் மத அடிப்படைவாதம் தயாரிக்கும் பாசிச உடல்களுக்கு எதிராக அப்பாஸ்பாய் தோப்பு நாவலின் பிரதி விளங்குகின்றது.
அப்பாஸ்பாய் தோப்பு (நாவல்),
எஸ்.அர்ஷியா. நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ், சென்னை. தொலைபேசி: 044-24899351,
பக்கம்:292; விலை:ரூ.185/-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT