Published : 07 Jun 2015 11:20 AM
Last Updated : 07 Jun 2015 11:20 AM
சுகன் (1965- 2015, ஜூன் 5)
தஞ்சாவூர் என்றதுமே சகலருக்கும் சட்டென நினைவுக்கு வருவது தஞ்சைப் பெரிய கோயில் என்றால், புத்தக வாசிப்பும் சிற்றிதழ்களுடனான தொடர்பும் உடையவர்களுக்கு எப்போதும் நினைவில் நிற்கிற பெயர்கள் ‘செளந்தர சுகன்’ இதழும் அதன் ஆசிரியர் சுகனும்தான். இயற்பெயர் க.சுந்தரசரவணன் என்றாலும் எல்லோராலும் அறியப்பட்டது சுகனாகத்தான்.
1987-ன் ஜூன் மாதத்தில், 22-வது வயதில், ‘சுகன்’ என்ற கையெழுத்து இதழைத் தொடங்கியபோது, இதுவொரு சிற்றிதழ் இயக்கத்துக்கான தொடக்கமென்பதை சுகன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், ஒரு தவம்போல் தொடர்ந்து ‘சுகன்’ சிற்றிதழைக் கையெழுத்து, நகலச்சு, ரோனியோ, அச்சு இதழெனத் தொடர்ந்து 28 ஆண்டுகள் ஒரு மாதம்கூட இடைவெளியின்றி 333 இதழ்கள்வரை கொண்டுவந்தது தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை. இடையில், ‘சுகன்’ சிற்றிதழ், ‘சுந்தர சுகன்’, ‘செளந்தர சுகன்’ எனப் பெயர் மாற்றம் பெற்றதேயொழிய, அதன் உள்ளடக்கப் படைப்புச் செறிவில் சிறிதும் சமரசமின்றி இதழைக் கொண்டுவந்தார் சுகன்.
நவீன படைப்பிலக்கியங்களுக்கான நாற்றங் காலாகக் கவிதை, சிறுகதை, கட்டுரைகள், ஓவியங்கள் வழியே இதழ்தோறும் புதுப்புதுப் படைப்பாளிகளை அறிமுகம் செய்துவைத்தார். இதழில் விளம்பரங்கள் இடம்பெற்றால், அதற்கென ஏதாவது சமரசங்கள் செய்துகொள்ள நேரிடும் என்பதால், இதழுக்கு விளம்பரங்களே வேண்டாம் என்பதில் மிகவும் கறாராக இருந்தார்.
சுகனும் ஒரு படைப்பாளி. சுகந்த சுரங்கள், உயிரில் நடந்த உற்சவங்கள், காதல் லிபிகள், சாமக்கூத்து, பூஞ்சாலி என ஐந்து கவிதை நூல்களையும், ஆழத்திலிருந்து அனலொன்று எனும் சிறுகதைத் தொகுப்பொன்றையும் எழுதியுள்ள சுகன் , ஒருபோதும் தனது இதழில் தன் படைப்புகளை முன்னிலைப்படுத்தியதேயில்லை.
கவிஞர் வெற்றிப்பேரொளியோடு இணைந்து தமிழ்ச் சிற்றிதழ்களை ஒரு சங்கமாக ஒருங்கிணைத்ததில் முதன்மையானவர் சுகன். அரசுப் பள்ளி ஆசிரியராய் இருந்து தனது வருமானத்தைக் கொண்டு இதழை நடத்தினார். ‘தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை’ எனும் அமைப்பைத் தொடங்கி, இலக்கிய நிகழ்வுகளை நடத்தியதும், ‘சுகன் பைந்தமிழ்த் தடாகம்’ வழியே தன் மாணவர்களின் படைப்புகளை நூலாக வெளியிட்டதும் சுகனின் பங்களிப்புகளில் சில.
தஞ்சை ப்ரகாஷ், தஞ்சாவூர் கவிராயர், த.ச.தமிழனார், அ.ப.பாலையன் போன்ற மூத்த படைப்பளிகளோடு, வா.மு.கோமு, கீரனூர் ஜாகீர் ராஜா, தெ.வெற்றிச்செல்வன், இளம்பிறை போன்ற இளம் படைப்பாளிகளுக்குமான படைப்புத் தளத்தைத் தனது இதழின்வழி உருவாக்கித் தந்தார். தமிழில் கடித இலக்கியம் என்பதைப் பரவலாய்க் கொண்டுசென்றதில் சுகனின் பங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழில் சிற்றிதழ் இயக்கம் என்பது தனிநபர்களின் அர்ப்பணிப்பு உணர்வாலும் கடும் முயற்சியாலுமே வளர்ந்துவந்தது. இந்தப் பண்புகளை இயல்பாகக் கொண்டிருந்த சுகனின் இழப்பு, தமிழ்ச் சிற்றிதழ் உலகம் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT