Last Updated : 13 Jun, 2015 12:21 PM

 

Published : 13 Jun 2015 12:21 PM
Last Updated : 13 Jun 2015 12:21 PM

உயரத்தில் இருக்கும் கவிதைகள்!- எம்.மணிகண்டன், திரைப்பட இயக்குநர் (காக்கா முட்டை)

பெரும்பாலான கவிதை களில் வார்த்தை அழகியல் இருக்கும். அந்தக் கவிதைகளைப் படிக்கும்போது ஓர் அற்புத மான உணர்வைக் கொடுத் துவிட்டு மனதைவிட்டு அகன்று விடும். இன்னொரு நாள் அந்தக் கவிதையை எடுத்துப் படிக்கும்போது முந்தைய அதே உணர்வை ஏற்படுத்திவிட்டு மீண்டும் போய்விடும். இதுமாதிரி கவிதைகள் ஒன்று அல்லது இரண்டு நிலை களை உணர்வுகளாக உள்ளுக்குள் ஏற்படுத்து வதோடு சரி.

அதுவே, தேவதச்சன் கவிதைகள் அதிக வார்த்தை ஜாலங்கள் இல்லாமல், மிக எளிமை யாக சொல்லவந்ததை அழகாகப் படரச் செய்யும். முதல்முறை படிக்கும் போது சாதாரணமாகத் தெரியும். அது உள்ளுக்குள் போய் யோசிக்க யோசிக்க… ஒரு மலைபோல பிரமாண்ட உயரமாகத் தோன்றும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொருவிதமான உணர்வை நமக்குள் ஏற்படுத்தும்.

படம் இயக்குவதற்கு முன்பே அவரது கவிதைகளைப் படித்தது, எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்புதான். தேவதச்சனின் கவிதைகள் மிக உயரத்தில் இருப்பவையாகவே தோன்றுகின்றன. பகட்டு இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல் உடனே கவர்ந்திழுக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டாமல் ஆழ்மனதிலிருந்து தோன்றுவதைச் சிறப்பாக இடமாற்றம் செய்துவிட்டு, படிக்கும் வாசகனைப் பறக்கவிடும் வேலையைத்தான் கவிதைகள் வழியே தேவதச்சன் செய்கிறார்.

திரைப்படங்களும் அப்படித்தான் எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். சாதாரணமாக ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். ஒரு காட்சியை நேர்த்தியாக எடுத்துக் காட்டும்போது அதில் தனிப்பட்ட நடிப்போ, கேமராவோ, இசையோ தனித்து நின்றுவிடக் கூடாது. இது மாதிரி உணர்வுகளை தேவதச்சன் கவிதைகளில் நான் முழுமையாக உணர்கிறேன்.

இங்கே அவரது கவிதை ஒன்று…

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை

காற்றில்

அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்

காட்டைத் தூக்கிக்கொண்டு அலைகின்றன

வெட்ட வெளியில்

ஆட்டிடையன் ஒருவன்

மேய்த்துக்கொண்டிருக்கிறான்

தூரத்து மேகங்களை

சாலை வாகனங்களை

மற்றும் சில ஆடுகளை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x