Published : 21 Jun 2015 01:45 PM
Last Updated : 21 Jun 2015 01:45 PM
என்னால் வருடங்களையெல்லாம், தேதி, மாதங்களையெல்லாம் துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது. அதுபற்றி அக்கறை இல்லாதவன். ஆனால் நிகழ்வுகள், சந்திப்புகள், சந்திப்புகளின்போது ஏற்படுகின்ற பேச்சுகள், முக மாற்றங்கள் பட்டையாய் மனதில் பதிந்திருக்கும்.
பதினைந்து வயதிலிருந்து பல கதைகள் படித்துக் கொண்டிருந்தாலும் நான் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரே எழுத்தாளர் தி. ஜானகிராமன்தான்.
தி. ஜானகிராமன் சென்னையில் இல்லை. அவர் டெல்லியில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் எனக்கு மிகவும் துக்கமாகப் போய்விட்டது. அந்த எழுத்துக்களில் உள்ள வசீகரம் என்னை மிகவும் கவர்ந்தது. சொற்களின் கட்டமைப்பு, பாத்திரங்களின் குணம், அவர்கள் பேசும் மொழி இவையெல்லாம் எனக்கு நெருக்கமாக இருந்தன. பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இல்லாதவர்களாக இருந்தாலும் அந்த மொழியின் சப்தம் எனக்குப் பரிச்சயமானது. அது தஞ்சாவூர் பாஷை.
‘இஞ்ச வாப்பா’ என்பதை, இங்கே என்று சொல்வதை ‘இஞ்ச’ என்று சொல்கின்ற மொழியின் நாதம், அந்த ஊருக்குத் தனியானது. ‘சபாஷ் அப்படிப் போடு’ என்று ‘பா’ வை அழுத்திச் சொல்லுகின்ற சொல்லை வேறு எந்த மாவட்டத்திலும் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை. இதற்கு எந்த ஜாதி பேதமும் இல்லை. அத்தனை பேரும் இப்படித்தான் சொல்வார்கள். ‘சல மேல ரா ஓ ராகவா’ என்று எல்லாரும் பாடுவார்கள். இதிலும் ஜாதி பேதம் இல்லை. பாட்டுப் படிங்க என்று ஒருநாளும் சொல்ல மாட்டார்கள். பாட்டு என்பது பாடுவது என்று அந்த ஊர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
எனக்குத் தெரிந்த இந்த ஊரை இன்னும் விஸ்தாரமாக எனக்கு அறிமுகப்படுத்தியவர் தி. ஜானகிராமன். அதனாலேயே அவரை நான் சந்திக்க விரும்பினேன். மொழி சப்தம் மட்டும் எனக்கு மனதில் இருந்தது. ஆனால் ஜானகிராமன் விவரித்த காவேரிக் கரைக் காட்சிகள் மனதின் முகங்கள், நிற்றல், நடத்தல் எல்லாமும் மிகவும் கவர்ந்தன. வெட்கமின்றிச் சொல்ல வேண்டுமென்றால் அதைவிட என்னைக் கவர்ந்தது யமுனா. ஒருமுறையேனும் அந்த பொம்மனாட்டியைப் பார்த்துவிட வேண்டும். அல்லது அதுபோலச் சாயல் உள்ள பொம்மனாட்டியைப் பார்க்க வேண்டும் என்று சென்னையிலிருந்து நான் தஞ்சைக்குக் கிளம்பினேன்.
புதிதாய் தெரிந்த சோழதேசம்
எனக்கு பாபநாசத்தில் யாரும் கிடையாது. ஆனால், கும்பகோணத்திலிருந்து பஸ் பிடித்து பாபநாசத்தில் இறங்கித் தெருத் தெருவாகச் சுற்றினேன். வேறு பஸ் பிடித்து மூப்பனார் வீட்டு வாசலில் நின்றேன். போவோர் வருவோரை வியந்து பார்த்தேன். பொற்றாமரைக் குளத்தருகே உட்கார்ந்து செத்துப்போன பெண்ணுக்காகத் தியானம் செய்தேன். தியாகராஜ ஸ்வாமிகள் சமாதி பக்கத்திலுள்ள படித்துறையில் இறங்கிக் காவேரியைக் காதலோடு பார்த்தேன். இறங்கிக் குளித்தேன். இடுப்பளவு ஆழத்தில் நின்று முகத்தை அலம்பிக் கொண்டேன்.
பலமுறை குளித்த காவேரி. ஆனால் இப்பொழுது தி. ஜானகிராமனை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு குளிக்கும்போதும், கிராமம் கிராமமாக நடக்கும்போதும், மாடு, கன்றுகளைப் பார்க்கும்போதும், மனிதர்களை நோக்கும்போதும் உள்ளே புதிதாய் இன்னொரு சோழதேசம் தெரிந்தது.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு ஊரை எப்படிப் பார்க்க வேண்டும், மனிதர்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற புத்தியை, ரசனையை தி. ஜானகிராமன் எனக்குக் கொடுத்தார். இதனாலேயே என் பார்வை மாறுபட்டது. இந்தப் பார்வை மாறுபட்டதாலேயே நான் எழுத்தாளரானேன். என் எழுத்தில் மனிதர்களைப் படிக்கின்ற, ரசிக்கின்ற ஒரு தன்மை படிப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னளவில் நான் தி. ஜானகிராமன் விகசிப்போ என்று எனக்குத் தோன்றுகிறது. அவருடைய விரிவாக்கமோ என்ற எண்ணமும் எனக்கு வருகிறது. ஆம் என்றும் இல்லை என்றும் சொல்வதற்கு இங்கு மக்கள் உண்டு. அதுபற்றி எனக்குக் கவலை இல்லை.
நான் தி. ஜானகிராமன் வேரடியிலிருந்து மேலெழும்பினேன். இந்தத் தஞ்சை சாயல் கரிச்சான் குஞ்சுவிடம் உண்டு. ஆனால் மற்ற எழுத்தாளர்களிடம் என்னால் காணக் கிடைக்கவில்லை. ஒரு நல்ல விதை பெருமரமாகக் கிளம்பிப் பல விதைகளைத் தோற்றுவிப்பதுபோல ஒரு நல்ல எழுத்தாளன் பல எழுத்தாளர்களைத் தோற்றுவிக்கிறார். அவரும் மிகப் பெரிதாகச் சரித்திரத்தால் மறைக்கப்பட முடியாதபடி வளர்கிறார்.
ஜானகிராமனை நேரே சந்தித்தேன். நிறைய உளறிக் கொட்டினேன். என்னை வியப்போடு எந்தச் சிரிப்பும் இன்றி கண்களாலேயே துளைத்துவிடுவது போல அவர் பார்த்துக்கொண்டிருந்தார். சுப்ரமணிய ராஜூ அடக்கினான். நான் அதிகம் பேசியதற்கு மன்னிப்பு கேட்டேன். “இல்லை இல்ல… பொங்குற, நன்னாயிருக்கு”. வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்துக் கோர்த்ததுபோலப் பேச்சும் இருந்தது.
ஒரு எழுத்தாளன் பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியாசம் இருக்கக் கூடாது. எழுதுவதுபோல் பேச, பேசுவதுபோல் எழுத என்பது இயல்பாக இருக்க வேண்டும்.
சின்ன உருவம். மென்மையான உடம்பு. மிதமான நடை. அவசரமில்லாத உடல் அசைவுகள். இலக்கியச் சிந்தனைக் கூட்டத்துக்குப் பலதும் பயமுறுத்தி அழைத்துக்கொண்டு போனோம். கேள்வி கேட்டுப் பிச்சிடுவானுங்க என்று சொன்னோம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாது ஒரு மிக நல்ல கட்டுரையை அவர் அங்கு தந்தார்.
அந்தக் கட்டுரைக்குப் பிறகு யாரும் எழுந்து அவரை எதுவும் கேட்கவில்லை. வழக்கமாக இலக்கியச் சிந்தனையில் கூச்சலிடுபவர்கூட எழுந்து நின்று, “உங்கள் வயதுக்கும், எழுதிய எழுத்துக்கும் மதிப்பு அளித்து உங்களை வாழ்த்தி வணங்குகிறோம்” என்று சொல்லி அமர, அவர் தொலைவில் இருந்து என்னை உற்றுப் பார்த்தார். “என்னமோ சொன்னியே, எப்படி நடக்கறது பார்த்தியா” என்ற ஏளனம் அதில் இருந்தது. தி. ஜானகிராமன் கண்ணால் பேசுபவர்.
கடைசி யாத்திரையில்...
பெசன்ட் நகரில் உள்ள அவர் வீட்டில் என் மனைவியோடு சந்தித்திருக்கிறேன். ஜிப்பாவும், வேட்டியும் அணிந்து பேசிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு அவர் வீட்டிற்கு அவர் இறந்த பிறகுதான் போனேன். வெளியே நின்று வாய்விட்டு அழுதேன். எல்லாரும் கொஞ்சம் வியப்பாகப் பார்த்தார்கள்.
சவண்டிகரணம் செய்கிறவர் மூங்கில் வாங்கணும், ஓலை வாங்கணும் என்று சொல்லி அங்கே காசு வாங்கிக்கொண்டார். கார் இருக்கா என்று கேட்டார். எல்லாத்தையும் எடுத்து வர்ரதுக்கு கார் இருந்தா சௌகரியம் என்று சொன்னார். நான் ஸ்கூட்டர் இருக்கிறது என்று சொன்னேன். என்னோடு ஸ்கூட்டரில் வந்தார். மூங்கில், ஓலைப்பாய், கயிறு, தேங்காய் நார், சட்டி, கரித்துண்டு என்று பலதும் வாங்கிக்கொண்டோம். தி. ஜானகிராமனின் கடைசி யாத்திரைக்காக என்னுடைய ஸ்கூட்டரில் அந்த ஓலைப் பாயும், மூங்கில் கட்டையும், தூக்குச் சட்டியும் பயணம் செய்தன.
என்னமோ அந்தச் செய்கை பெரிய கடன் தீர்த்தாற்போல இருந்தது. இப்பொழுது அதை நினைத்தாலும் நெஞ்சு கனத்து, நாக்கு குழறுகிறது. பெருமூச்சு வருகிறது. உறவுகள் செய்ய வேண்டியதை நான் செய்தேன்.
ஒரு எழுத்தாளன் உறவாக முடியுமா? முடியும். ஒரு நல்ல எழுத்தாளன் ஒரு நல்ல வாசகருக்கு ஒரு நெருங்கிய உறவு. அதைப் பிரிக்கவே முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT