Published : 10 May 2014 12:00 AM
Last Updated : 10 May 2014 12:00 AM

காவியப் புலவர்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாறு பல புதிய வளர்ச்சி நிலைகளைக் கண்டது. பல்வேறு இலக்கிய வடிவங்கள் தோன்றின. அவ்வகையில் கிறித்தவம் தழுவிய தமிழ்ப் புலமை மிக்கச் சான்றோர் சிலர் கிறித்துவ சமய உண்மைகளை இலக்கிய வடிவத்தில் படைத்தளித்தனர். அவ்வாறு படைப்பிலக்கியம் தந்த அறிஞர் பெருமக்களுள் என்றி ஆல்காட் கிருஷ்ண பிள்ளை தனிச்சிறப்புடையவராகத் திகழ்கிறார்.

இலக்கணம், தன்வரலாறு, காப்பியம், சமய சாஸ்திரம், பக்திப்பனுவல் எனப் பல நிலை இலக்கிய வகைகளைச் சமய அன்பர்களுக்கும் தமிழ் உலகிற்கும் படைத்தளித்தவர்.

மகாகவி எ.ஆ.கிருஷ்ண பிள்ளை 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் பிறந்தவர். இவருடைய தந்தையார் சங்கர நாராணயப்பிள்ளை தமிழ்ப்புலமை மிக்கவர். கம்பராமாயணம் திருவாய்மொழி போன்றவற்றில் சொற்பொழிவு ஆற்றும் ஆற்றல் பெற்றவர். தம் தந்தையிடமே தொடக்கக் கல்வியைப் பயின்ற கிருஷ்ணபிள்ளை தம் பதினான்காம் வயதிலேயே கம்பராமாயணத்தைப் படித்துப் பொருள் கூற வல்லவராய் இருந்தார். பன்னிரெண்டாம் வயதில் வைணவ சமய முறைப்படி முத்திராதாரணம், செய்யப்பட்டு பக்தி நெறியில் வளர்ந்தவர் தம் முப்பதாம் வயதில் இயேசு பெருமானின் திருவருளுக்கு ஆட்பட்டார்.

கிருஷ்ண பிள்ளை திருவனந்தபுரம் மகாராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இதே காலகட்டத்தில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் இங்கு மெய்யியல் துறை பேராசிரியராகப் பணியாற்றினார். சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணியம் காப்பியம் ஏழுதிய காலத்தில்தான், கிருஷ்ண பிள்ளை இரட்சண்ய யாத்திரிகத்தை எழுதி வந்தார். இவ்விருவரும் நல்ல நண்பர்கள் என்பதும், இவ்விரு பேரிலக்கியங்களும் வழி நூல்கள் என்பதும் அரிய செய்தி.

ஆங்கிலப் பெருங்கவிஞர் ஜான் பன்யன் என்பார் இயற்றிய THE PILGRIM’S PROGRESS என்ற நூலைத் தழுவி எழுதிய படைப்பாகும். மூலநூலைப் போலவே வழிநூலும் முற்றுருவகக் காப்பியமாக அமைக்கப்பட்டிருப்பது தமிழ்இலக்கிய வரிசையில் தனிச் சிறப்புடையதாகும்.

தண்டியலங்கார இலக்கணப்படி பெருங்காப்பியத்தில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் அமைதல் வேண்டும் வீடுபேற்றை இலக்காகக் கொண்டு பாடப்பட்ட இரட்சண்ய யாத்திரிகத்தில் அறமும், பொருளும் இயல்பாய் அமைந்துள்ளன. ஆனால் இன்பம் என்ற நிலையில் சிற்றின்பம் தவிர்க்கப்பட்டு, பேரின்பம் கூறப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு காப்பியத் தலைவன் என்பதிலும் இது புதுமையாகத் திகழ்கிறது. தன்னிகரில்லாத தலைவன் இருத்தல் வேண்டும் என்பது மரபு. இது கடவுளைத் தலைவனாகக் கொண்ட நூலன்று கடவுளிடம் ஆன்ம நாட்டம் உடைய ஒரு எளிய மனிதன் வாழ்வில் ஆன்மிக வல்லமையால் ஆட்படுத்தும் திருவருளைக் கூறும் நூல். பல்வகைப் படைகளைக் கொண்டு எதிரியை வீழ்த்தும் வீரனாக அல்ல, பொய்களவு காமம் போன்ற உட்பகைகளை வென்று அறத்தலைவனாகத் திகழும் ஒரு எளிய மனிதனே இதன் தலைவன்.

சிலப்பதிகாரம் போன்றே இதிலும் முத்தமிழ் கூறுகள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம் இதில் இடம் பெற்றுள்ள பதினொரு தேவராங்களும் இசைத் தமிழுக்கு இடமாய் இலங்குகின்றன என கிருஷ்ண பிள்ளையின் நூல்களை விரிவாக ஆராய்ந்த முனைவர் வீ.ஞானசிகாமணி கூறுகிறார்.

கிருஷ்ண பிள்ளைக்குக் கிறித்தவக் கம்பன் என்ற புகழும் உண்டு கிருஷ்ணபிள்ளையின் படைப்புகள் தமிழ் உலகம் அறிந்துகொள்ள வேண்டிய தமிழ்க்கொடை ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x