Last Updated : 23 Jun, 2015 11:05 AM

 

Published : 23 Jun 2015 11:05 AM
Last Updated : 23 Jun 2015 11:05 AM

மனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை!

சீனி நாயக்கரை ஓட்டேரி காசநோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப, சம்மதிக்க வைக்க பெரும்பாடுபடவேண்டி யிருந்தது. யாரையும் மதிக்காமல் ‘நெவர் மைன்ட்’ என்று இருந்தவர், என் எதிரே அவர் கூனிக் குறுகி உட்கார்ந்து கொண்டிருந்தார்.

எப்படி திடீரென்று காணாமல் போவார்? எப்படி எதிர்பாராமல் முன்னால் வந்து நிற்பார் என்பதே ஓர் அதிசயம்தான்!

பசி என்பது மட்டும் இவருக்கு வராமல் போயிருந்தால் இவரும் ஒரு சித்தர்தான். காதுப் பசி, வயித்துப் பசி, அறிவுப் பசி இவையெல்லாம் அவரைப் படாத பாடுபடுத்தின.

‘‘சென்னைக்குப் போகிற வழியில் மதுரைக்குப் போயிட்டுப் போரும்’’ என்றேன். மதுரை என்ற பெயரைக் கேட் டதும் அவருடைய கண்கள் விரிந்தன. ‘ஆமா’என்று நினைப்பதுபோல் இருந்தது.

நிலங்களையும் வீட்டையும், அதைச் சேர்ந்த இடத்தையும் விற்கும்போது, அந்த ‘உழக்கரிசி சீவனை’இவர் நினைத் துப் பார்த்தது உண்டா? எந்த முகத்தை வைத்துக்கொண்டு போய்ப் பார்ப்பது?

இவரும் போய்ப் பார்த்தில்லை; அவ ளும் இங்கே வந்த மாதிரித் தெரியவில்லை.

ஏழ்மை விரிய விரிய மனுசத் தன்மையும் ‘சுருங்கச் சுருங்க…’ என்று ஆகிவிடும் போலிருக்கு.

எல்லாத்தையும் விற்று முடித்து பரதேசி போல் ஆன பிறகு, ஒரே ஒருமுறை போனாராம் இவர். அந்தச் சிறு வீட்டுக் குக் கதவுக்குப் பதில் கோணிச் சாக்குதான் தொங்கிக் கொண்டிருந்ததாம்.

உள்ளே போவதா? அப்படியே திரும்பிவிடுவதா? குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டுவரலையே என்று யோசித்துக்கொண்டு நின்றபடியே அப்படியே இருந்தாராம். நாச்சியாள் படி இறங்கி வந்திருக்கிறாள். இடுப்பில் ஒன்றும் முந்தியைப் பிடித்துக்கொண்டும் இரண்டு குழந்தைகள்.

நின்றுகொண்டிருந்த இவரைப் பார்க் கிறாள். முதல் பார்வையில் கண்டு கொள்ள முடியலை. அப்படி ஒரு பிச்சைக்கார நிலை!

தனது மாமா என்று தெரிந்ததும் தாங் கிக்கொள்ள முடியவில்லை. குழந்தை கள் பயந்து அழும் நிலைக்கு இருந் துள்ளன. அவளுடைய அழுகை யைப் பார்த்து, ‘அம்மாவே பயந்து அழும்படியாக இருந்தால் இவன் எப் படிப்பட்ட பூச்சாண்டியாக இருப்பான்?’ என்று நினைத்துவிட்டன குழந்தைகள். இவர் போனால்தான் குழந்தைகள் அழுவதை நிறுத்தும் போலிருக்கு.

நாச்சியாளுக்குக் கண்ணீர்விடுவதை நிறுத்த முடியவில்லை. எதை நினைத்துத் தேறுவது? அனைத்தும் இவரைவிட்டுப் போய்விட்டன என்பதை இவள் எப் படியோ, எவர் மூலமோ தெரிந்து கொண்டுவிட்டாள்.

பிறந்து வந்த வீட்டை ஒரு பெண் பிள்ளையால் எப்படி மறந்துவிட முடியும்? உடம்புதான் இங்கே. உயிர் எல்லாம் அங்கேதானே இருக்கும்?

நாச்சியாளின் புருசன் அங்கே ஒரு எண்ணெய் பிழியும் மில்லில் வேலை செய்கிறான். அவனுடைய குழந்தை களின் தலையில் எண்ணெய்ப் பசையையே காணோம்.

ஒரே வேளை கை நனைத்ததோடு சரி. எரியும் அடுப்பின்மேல் உட்கார்ந்து இருந்ததுபோல இருந்தது அவருக்கு.

‘‘மாமா அங்கே என்ன இருக்கு உனக்கு? இங்க என்னோட இருந் திரேம்…’’ என்று வேண்டிச் சொன்னாள் நாச்சியாள்.

அந்த வீடு என்பது ஒரே அறை தான். அதில்தான் அடுப்புக்கூடம் முதற் கொண்டு எல்லாம். நாச்சியாளின் அன்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

இந்த இடத்தில் இப்படிக் கொண்டு வந்து என்னைத் தள்ளீட்டயே மாமா என்று கேட்கவில்லை. நினைக்கவும் இல்லை அவள். எது செய்தாலும் அவர் நம்ம நன்மைக்கே செய்வார் என்று நினைக்கும் நல்ல மனசு அவளுக்கு!

என் நினைப்பு வந்து என்னைப் பார்க்க வந்திருக்காரே; எப்பேர்ப்பட்ட மனசு என்றுதான் நினைத்தாள்.

அவர் இறந்தால் அவர் மேலே விழுந்துக் கதறி அழுவதற்கு ஒரு ஜீவன் இங்கே இருக்கிறது. கொடுப்பினைதான் அவருக்கு.

சீனி நாயக்கர் ஊருக்குக் கிளம்ப என்று புறப்பட்டபோது, ‘‘கொஞ்சம் இரு மாமா இதோ வந்துட்டோம்…’’ என்று இடுப்புக் குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு அவள் புறப்பட்டபோது, நடைக் குழந்தையும் அவளோடு புறப்பட்டது. ‘‘சரீ… வா’’ என்று அதையும் நடத்திக்கொண்டு போனாள்.

‘தப்பிக்க இதுதான் வேளை…’ என்று புறப்பட்டுப் போய்விட்டார் இவர். எதைப் பற்றியும் கவலைகொள்ள மாட்டார். கொடுமையான ஒரு மனசு!

ஓட்டேரி காசநோய் மருத்துவமனை யில் இரண்டு மாசத்துக்கு மேல் அவ ரால் இருக்க முடியவில்லை. பீடி குடிக்க என்ன செய்தார்? பேப்பர் படிக்க எங்கே போனார் என்று தெரியவில்லை. இவருக்குத் தெரியாமல், இவரைக் கேட்காமல் உலகத்தில் என்னவெல்லாம் நடந்திருக்குமோ தெரியவில்லையே!

‘‘ஆமா... ஒங்க கூடவே ஒருத்தர் ஒல்லியா சிகிளியா வருவாரே... என்னதான் ஆனாரு அவரு?’’

என்ன பதில் சொல்ல இவருக்கு? விரிந் திருக்கும் பூ கூம்பியது போலானது மனசும் முகமும். கீழே விழும்போது எதையாவது பிடித்துக்கொள்ளத் துளா வுமே கைகள் அது போலானேன்.

நிழல்தான் கூடவே வரும். மனுசங்க அப்படி இல்லை!

‘ஏம் இவரைப் பற்றி எழுத்தில் பதிவு செய்தாய்’ என்று கேட்பவருக்குப் பதில் என்னிடம் இல்லை.

ஊர் தவறாமல் இப்படி ஆட்கள் இருக்கிறார்கள் என்று எனது நெடிய வாழ்நாளில் கண்டிருக்கிறேன். ஆறாது விரல்களைப் போல்.

ஏதோ ஓர் அவசரம். சத்திரத்துப் பாதை யில் நுழைந்தால் சீக்கிரமாகப் போய் விடலாம். மதியம் 2 மணி . மதியத் தூக் கத்துக்காரர்கள் துண்டு விரித்தும் துண்டே விரிக்காமலும் கட்டைகளைச் சாய்த்து கண்கள் மூடிக் கிடந்தார்கள்.

இந்தச் சத்திரங்கள், கோயிலடிகளில் நல்ல வெயிலிலும் கூட சிலுசிலு என்று காற்று வந்துகொண்டிருக்கும். நெடுஞ் சான் கிடையாக, கும்பிடு என்றால் குப்புற; கோழித்தூக்கம் என்றால் மட்டமல்லாக்க. விழுந்ததும் தெரியாது; எழுந்து ஓடியதும் தெரியாது.

‘யாரு நீ? எங்கே வந்தெ…’ என்று கேட்பார் கிடையாது அங்கே. ஆற்றுத் தண்ணீரில் வந்து விழுந்து எழுந்து போகிறதுபோல!

பாதை ஒழுங்கு எல்லாம் உண்டு. காலணியைக் கையில் எடுத்துக்கொண்டு கடந்தபோது சட்டென்று நின்று கவனித்தேன். சீனி நாயக்கர்!

குனிந்து பார்த்தேன். மூக்கில் விரல் வைத்துப் பார்க்காததுதான் குறை. அப் படிக் கிடந்தார். கண்கள் பாதி மூடியிருந் தன. அளவோடு வாய் பிளந்திருந்தது. மார்பு மெல்ல ஏறி இறங்குவதைக் கவ னிக்க முடிந்தது. பாவி மட்டை எப்போ வந்தார்? சரி, இருக்கட்டும். பார்ப்போம் பிறகு என்று நகர்ந்தேன்.

அவ்வளவுதான். அதுக்குப் பிறகு நான் அவரைப் பார்க்க முடியவில்லை. யாரிடம் கேட்டாலும், இல்லியே தட்டுப் படலையே என்றே சொன்னார்கள்.

சீனி நாயக்கர் காணாமல் போய்விட்ட தால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. ஆனாலும், என் கண்கள் தேடிக் கொண்டே இருந்தன. கோவில்பட்டியில் நடக்கும் பிரபல இசைக் கச்சேரிகளின் முன்னாலும் பக்கவாட்டிலும் நின்று கொண்டே கேட்கும் ஆட்களுக்கு இடை யில் அவருடைய தலை தெரிகிறதா என்று பார்த்துப் பார்த்து கண்கள் அலுத்துப் போயின.

அபூர்வ ராகங்கள் வரும்போதெல் லாம் அவரை நினைப்பேன்.

சீனி நாயக்கர் அபூர்வ மனிதர் அல்ல; எந்த வகையிலும் அவர் சிறந்தவர் இல்லைதான். குட்டிச்சுவராகப் போனவர்.

எங்கள் ஊரிலும் இப்படிக் காணா மல் போயிருக்கிறார்கள் சிலர். என்ன ஆனார்கள் என்றே தெரியாது. திடீரென்று ஒரு கூட்டத்தின் மத்தியில் பார்த்தேன் என்று தகவல் வரும்.

இவர் எனக்கும் பல வருஷங்கள் மூத்தவர். இப்போது உயிரோடு இருக்க சாத்தியமே இல்லை.

யாரும் இவரைப் போல் இருக் காதீர்கள் என்பதே எனது செய்தி.

- இன்னும் வருவாங்க…

முந்தைய அத்தியாயம்- >மனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x