Published : 02 Jun 2015 02:41 PM
Last Updated : 02 Jun 2015 02:41 PM
சீனி நாயக்கர் எப்போதும் காரசாரமாகப் பேச மாட்டார். கேட்டுக் கொண்டே இருப்பார். அவருடைய அரசியல் தேசியத்தில் இருந்து, இப்போது சர்வ தேசியத்துக்குத் திரும்பியிருந்தது. பேசுகிற விசயங்கள் பிடிக்க வில்லை என்றால் சத்தம் காட்டாமல் அங்கிருந்து நகர்ந்து வந்துவிடுவார்.
எங்கே கண்டாலும் அரசியல் விவாதங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். கம்மாய்க் கரை மர நிழல், வேப்ப மரத்தடி நிழல் என்று. அப்போது நாடே பொதுவுடமை இயக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்த நேரம். தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டு இருந் தவர்களில் விசயம் தெரிந்த மனிதர்கள் பொதுவுடமை சித்தாந்தத்துக்கு வந்திருந்தார்கள். அவர் மனசில் முதலில் ஆணி அடித்தது போலப் பதிந்துவிட்டது ஒரு விசயம்.
‘தகப்பன் சம்பாதித்த சொத்து முழுவதும் அவனுக்குப் பிறகு பிள்ளை களுக்குப் போகாது. அதை அரசே எடுத்துக்கொள்ளும்!’
‘அய்யோ! அப்போ இந்தப் பிள்ளைகளின் கதி என்னாகும்?’
‘பயப்படவே வேண்டியது இல்லை. சாப்பாடு, மருத்துவம், படிப்பு, வேலை இதுகளையெல்லாம் அரசே செய்து தரும்!’
‘அட, இதப் பார்றா...’
‘ஊரு உலகத்துல, இந்தப் பணக் காரன் வீட்டுப் பிள்ளைகள் கொழுப்பெடுத்துப் போயி, எண்ணெய் தலைப்பிறட்டுகள் பண்ணிக்கிட்டு அலையுதான். ‘என்னெ மைனர் விளையாட்டுகள்!’ இந்தப் பயப் பிள்ளைகளோட மப்பை முதல்ல ஒடுக்கணும்.
இப்படி இந்த விதை அவருடைய மனசுக்குள் விழுந்து முளைத்ததும், அவருக்குச் சொந்தமான வீடு, நிலபுலன் கள்பேரிலுள்ள மதிப்பு அநியாயத்துக்கு குறைந்துவிட்டது. சவம், ‘இந்த இழவெல்லாம் என்னத்துக்கு’ என்று தோன்றி விட்டது.
திடீரென்று ஒருநாள் சீனி நாயக்கர் காணாமல் போனார்.
சரி! எங்காவது சொந்தக்காரரர்களின் ஊர்களுக்குப் போயிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன். ஒருவேளை, அவருடைய நாச்சியானைப் பார்க்கப் போயிருக்கலாமோ?
எனக்குத்தான் கொஞ்ச நாளைக்குக் கை ஒடிந்தது போல் இருந்தது.
திடீரென ஒருநாள் எங்கள் புது வீட்டுக்கு வந்தார்.
‘‘வேய்... எங்கெ போயித் தொலைஞ்சீர்!’
‘‘சும்மா அப்படியே தஞ்சாவூரு, கும்மகோணம்னு போயி வந்தோம்’’ என்றார்.
‘அடப் பாவி மனுசா’ என்று நினைத்துக்கொண்டேன்.. புது வேட்டிக் கட்டி புதுச்சட்டை போட்டு வாளமான துண்டால் சட்டையை மூடிப் போர்த்திக்கொண்டு, ஆளும் கொஞ்சம் மினுமினுப்பாகத் தெரிஞ்சார்.
என்னெவெல்லாம் பார்த்தீர் சொல்லும் என்று விசாரித்தேன்.
சோழ தேசத்தில் உள்ள சங்கீத மகா வித்துவான்களுடைய வீடுகளை எல்லாம் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். இதுபோதுமே! சூரியோதயத்தைப் பார்த்து அனுபவிக்கிறோம். அடையாறு ஆல மரத்தைப் பார்க்கிறோம். அதன் மேலே ஏறியா உட்காருகிறோம்? உலகத்துல முக்கால்வாசி இப்படிப் பார்க்கிறதுதானெ சுற்றுப் பயணங்கள்!
கோயில்களில், சத்திரங்களில் சாப் பாட்டுக்குக் குறைச்சல் இல்லை. சோழநாடு சோறு உடையது என்று சொல்லி யிருக்கே. வயித்துக்கு சோறு; காதுக்கு சங்கீதம். போதுமே! கோயில்களைக் கடந்து போகும்போதெல்லாம் நாயன இசை கேட்டுக்கொண்டே இருந்ததாக சீனி நாயக்கர் சொன்னார்.
இவர் இப்படியெல்லாம் செலவு செய்து போய் வருவதற்கு ஏது பணம்? நிலங்களை ஒவ்வொன்றாக விற்றார். கடேசியில் வீட்டையும் விற்றுவிட்டார்.
பெரிய்ய புரட்சி ஒன்று ‘ஆஹாவென் றெழுந்தது பார்’ என்று, கூடிய சீக்கிரமே வந்துவிடும் என்று மெய்யாக அவர் நம்பினார். அவருடைய மண்டைக்குள் ஒரு பன்றிக்குட்டி எப்படியோ நுழைந்துவிட்டது. புத்தி சொல்பவர்களைப் பிடிக்காமல் போய்விட்டது; விலகிப் போய்விடுவார்.
பார்வதி அம்மன் கோயில் முன்கூரை தான் இப்போ படுக்களை. பூசாரி சக்தி வேல் காகங்களுக்கு சோறு வைப்பான். இவருக்கும் ஒரு உருண்டை தருவான். அண்டை வீட்டுக்காரன் அல்லவா.
இவரை நினைத்து நினைத்துக் கொஞ்ச நாள் கவலைப்பட்டேன். ரோட்டுக் கடையில் தட்டுப்படுவார். ‘நானும் வர்றேனே’ என்று என்னோடு கோவில்பட் டிக்கு வருவார். என்னோடு சேர்ந்து அவருக்கும் கிளப்புக் கடை சாப்பாடு கிடைக்கும்.
இப்படியே இருந்து ஒருநாள் ஊர் திரும்ப கார் ஏறும்போது, ‘நா வரலை’ என்று கோவில்பட்டியிலேயே தங்கிவிட்டார்.
அடுத்த தடவை நான் கோவில்பட்டி போனபோது என் கண்கள் அவரைத் தேடின. கடேசியில் ஒரு ஓட்டல் முன்னால் போடப்பட்டிருக்கும் பலகையில் உட்கார்ந்துகொண்டு தினத்தாள் ஒன்றை அக்கறையாகப் படித்துக்கொண்டிருந்தார். சத்தம் காட்டித்தான் கூப்பிட வேண்டி இருந்தது.
சாப்பிட உட்கார்ந்தோம். ’’கோவில் பட்டிவாசி ஆயிட்டீர்’’ என்றேன்.
பொழுது எப்படிப் போகுது என்று விசாரித்தேன். இடைசெவலைவிட இங்கே பொழுது நல்லாப் போகுது என்றார்.
அந்தக் காலத்தில் ஓட்டல்களில் வானொலி மட்டும்தான். அதும் ஏ.அய்.ஆர். மட்டுமேதான். அதில் சங்கீதம் கேட்கலாம்.
மூப்பனார்பேட்டையில் நுழைவு வாயிலின் இடதுபுற மாடியில்தான் கட்சி ஆபீஸ். எப்போதும் திறந்தே இருக்கும். ராத்திரிக்கும் படுக்க அங்கே போய்விடலாம். ராவ்ஜி ஓட்டல் ரேடியோ, வாய் நிறுத்தாமல் பாடிக்கொண்டே இருக்கும்.
இந்த மாதிரி கொசுத் தொல்லை அப்போது கிடையாது; மூட்டைப் பூச்சி மட்டும்தான். கொசுத் தொல்லைக்கு மூட்டைப்பூச்சி தேவலையே என்று சொல்லிக் கொள்ளலாம். கோவில் பட்டியின் யானை கிணற்றின் தண்ணீர் சுவையானது. ஒரு நேரத்துப் பசி தாங்கும்.
காலையில் விடிந்ததும் பேப்பர் படிக்க, வானொலியில் செய்தி கேட்க, டீக்கடைப் பலகையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படியாவது டீ கிடைத்துவிடும்.
கதிரேசன் கோவில் பாதையில் திலாக் கிணறுகள் உண்டு. கால் கழுவிக்கொள்ள தண்ணீர் கிடைக்கும். சுகவாசிகள்தான் காலையில் குளிப்பார்கள். கிராமத்தில் இறங்கு கிணறுகளில் குளித்த சொகம் இங்கே இருக்காது.
கிளப்புக் கடைகளில் சாப்பிட என்றே சுத்துப்பட்டிகளில் இருந்து கொஞ்சம் வசதிப்பட்டவர்கள் வருவது உண்டு.
எத்தனை வேளைகள்தான் கம்மஞ் சோத்தையும் குதிரவாலிச் சோத்தையும் தின்றுகொண்டிருப்பது?
குதிரவாலி என்று நான் சொன்ன வுடன் சுந்தர ராமசாமி ‘‘கரிசல்காட்டில் என்ன நெல் விளையும்?’’ என்று கேட்டார்.
தீர வாசத்துக்காரர்களுக்கு அப்படி ஒரு பெயருள்ள நெல் உண்டு. கரிசல் மானாவாரியில் இப்படி ஒரு அழுங்கல் நிறத்தில் சிறிய ஜவ்வரிசி போல உருண்டை அரிசித் தானியம்; ருசி குறைந்தது.
சம்சாரி வீடுகளில் ராத்திரிச் சாப்பாட்டுக்கு அநேகமாக இந்தக் குதிரவாலி அரிசிதான்.
எனக்கு சடகோபு என்று ஒரு தம்பி இருந்தான். ‘என்னம்மா தினோமும் இந்த உருண்டை அரிசிச் சோறே; வேண்டாம்… வேண்டாம். நீள அரிசிச் சோறே ஆக்கிப் போடு’ என்று முரண்டு பண்ணுவான்.
தினமும் உருண்டை அரிசிச் சோறும், பருப்பும், ரசமும்தான். ரசத்தில் சோத்தை துளாவி எடுத்துப் பிழிந்து பிழிந்து சாப்பிடுவோம். பெரும்பாலான வீடுகளில் ரசம் புளிப்பாகவே அமையும். பிழிந்து சாப்பிட்டால் புளிப்பு குறைந்து தெரியும்.
- இன்னும் வருவாங்க…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT