Published : 14 Jun 2015 01:06 PM
Last Updated : 14 Jun 2015 01:06 PM
1978 முதல் 1990 வரை டெல்லியில் வாழ்ந்த காலத்தை என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்லலாம். எந்தக் கவலையும் இல்லாமல் சர்வ சுதந்திரமாக மண்டி ஹவுஸில் திரிந்துகொண்டிருந்தேன். பகல் முழுவதும் படிப்பு, மாலையில் சர்வதேச சினிமா, நாடகம், இசை எனக் கழிந்தது அந்தக் காலம்.
பின்னர் சென்னை வந்ததும் ஐந்தாறு ஆண்டுகள் வாழ்வின் மிகக் கொடுமையான இருண்ட பகுதிகளை அனுபவம் தந்தது. குடும்பம் இல்லை; வருமானம் இல்லை; இருக்க இடம் இல்லை; சில பராரியான எழுத்தாளர் நண்பர்களைத் தவிர எந்த ஆதரவும் இல்லை. ஒருவேளை சோற்றுக்கும் வழியில்லாத நிலை. இதெல்லாம் போதாது என்று என்னை நம்பி ஆறு வயதுப் பெண் குழந்தை.
தனியாக இருந்தால் திருமணமாகாதவர்கள் வாழும் திருவல்லிக்கேணி மேன்ஷன்களின் இருண்ட அறை ஒன்றில் பதுங்கிக்கொள்ளலாம். ராயப்பேட்டையில் உள்ள பிரபலமான ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் ஆறு வயதுப் பெண் குழந்தையையும் வைத்துக்கொண்டு ஒரு நாற்பது வயது ஆணாக அனாதையாக சென்னையின் தெருக்களில் திரிந்தபோது ஒரு தோழி எனக்காகத் தான் வசித்து வந்த ஒரு சிறிய வீட்டைக் கொடுத்தார். என் குழந்தையின் உணவுக்காக ஜேப்படித் திருடனாகவும் வாழ நேர்ந்தது.
ஒரு நாள் அவளுக்கு அம்மை போட்டது. அப்போது மயிலாப்பூர் பூராவும் அம்மை பரவியிருந்தது. என் நண்பர்கள் பாவைசந்திரன், திலீப்குமார் என்று எல்லோருக்கும் அம்மை. ஒருநாள் குழந்தையைத் தனியே வீட்டில் விட்டுவிட்டுப் பள்ளிக்குப் போய் அவளுடைய சிநேகிதர்களிடமிருந்து பாடங்களை ஃபோட்டோகாப்பி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வர பஸ்ஸுக்காகக் காத்திருந்தபோது என் வயிற்றில் மாடு முட்டிவிட்டது. ஆட்டோவில் போகக்கூட முடியாத நிலை. வழியில் மயிலாப்பூர் குளத்தருகே இரண்டு இளநீரையும் வாங்கிக்கொண்டு பாபா கோவில் அருகே இருக்கும் வீட்டுக்கு ஓடினேன். வீட்டில் குழந்தை வலியால் துடித்துக் கதறிக்கொண்டிருந்தாள். தாங்க முடியாத வலி. சாமியை வேண்டிக் கோம்மா என்றேன். நீ தானேப்பா எனக்குச் சாமி என்றாள்.
ஸீரோ டிகிரியை எழுத அமர்ந்தேன். ஸீரோ டிகிரி முழுவதும் என் மகளுக்கு நான் எழுதிய கடிதம். அல்லது, கடவுளோடு உரையாடிய ஒரு பித்தனின் கவிதை.
ஃப்ரெஞ்ச் ஸ்ட்ரக் சுரலிஸச் சிந்தனையாளர் ரொலான் பார்த் ‘எழுத்தாளனின் மரணம்’ என்ற கோட்பாட்டை அறிவித்தார். அப்படி என்றால்? எழுத்தின் அதிகாரத்தை உடைத்தல் என்று பொருள். ஒரு முக்கோணத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உச்சியில் இருப்பது அதிகாரம். பள்ளி, மருத்துவமனை, கோவில், குடும்பம், காவல் நிலையம், ஆட்சி அமைப்பு என்று எல்லா நிறுவனங்களின் தலைமை என்பது உச்சி.
பாரம்பரிய எழுத்தில் எழுத்தாளன் என்பவனும் அந்த உச்சியில் அமர்ந்து வாசகருக்குக் “கொடுக்கும்” நிலையிலேயே இருக்கிறான். அதில் வாசகர் வெறும் நுகர்வோர் மட்டுமே. நம் வாழ்வின் எந்தத் தருணத்திலும் யார் மீதும் அதிகாரத்தைப் பிரயோகிக்காத சமத்துவச் சிந்தனையின் தத்துவ வெளிப்பாடே அமைப்பியல்வாதம். அப்படிப்பட்ட அதிகார மையமற்ற பிரதியாகவே என்னுடைய மேலே குறிப்பிட்ட சொந்த வாழ்வைக் கச்சாப் பொருளாக்கி ஸீரோ டிகிரியை உருவாக்கினேன். அதனால்தான் அதில் ஒரு ஆரம்பமோ, முடிவோ இல்லை. நாவலை எந்த இடத்திலும் தொடங்கி எந்த இடத்திலும் முடிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT