Published : 07 May 2015 11:55 AM
Last Updated : 07 May 2015 11:55 AM
புத்தகங்களைப் பரிசாக கொடுப்பது நல்ல பழக்கம். ஆனால் யாருக்கு, என்ன புத்தகம் பரிசாக கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி பலநேரம் விழா நடத்துபவர்கள் யோசனை செய்வதே இல்லை.
திருக்குறள், காந்தியின் சத்திய சோதனை, பாரதியார் கவிதைகள் அல் லது அர்த்தமுள்ள இந்துமதம் போன் றவைதான் பெருமளவு பரிசாக தரப்படும் புத்தகங்கள். இதுவரை 100 திருக்குறள் புத்தகங்களையும், 50 பாரதியார் கவிதை களையும் பரிசாகப் பெற்றிருப்பேன்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தூக்க முடியாத அளவுக்குப் பெரிய பார்சலாக, புத்தகங்களைக் கட்டிப் பரிசாக கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்து பார்த்தால் ‘கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெறுவது எப்படி?, அடுத்து என்ன படிக்கலாம்?, ஸ்போக்கன் இங்கிலீஷ், ஒரு மார்க் வினா- விடை என அத்தனையும் பள்ளி மாணவர்களுக்கான கையேடுகள்.
இதை எதற்கு எனக்குக் கொடுத்தார் கள் எனப் புரியாமல் தொலைபேசியில் அழைத்து ‘புத்தக பார்சலை மாற்றிக் கொடுத்துவிட்டீர்களா' எனக் கேட்டேன்.
‘‘இல்லை சார், இந்த புக்ஸ் எல்லாம் எங்கள் பதிப்பக வெளியீடுகள். எல்லா விருந்தினர்களுக்கும் இதைத்தான் எப்பவும் கொடுப்பது வழக்கம்’’ என்றார் கள். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?
இதற்கு மாறாக, சமயபுரம் எஸ்ஆர்வி பள்ளியின் நிகழ்ச்சிக்குச் சென்றபோது, ‘உங்களுக்கு என்ன புத்தகம் தேவை என்பதை தெரியப்படுத்தினால், அதைப் பரிசாக வாங்கித் தருகிறோம்’ என பள்ளி முதல்வர் மெயில் அனுப்பியிருந்தார். அது போலவே கேட்ட புத்தகத்தை வாங்கியும் தந்தார்கள். இப்படி ஒரு பண்பாட்டினை வேறு எங்கேயும் நான் கண்டதே இல்லை!
டெல்லியில், ஒரு இலக்கிய நிகழ்ச்சி யில் கலந்துகொண்டபோது, 5 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுக் கூப்பனைத் தந்து, பிரபலமான புத்தகக் கடை ஒன்றில் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ள செய்தார்கள். இப்படி ஒரு முறையை தமிழகத்திலும் புத்தகக் காட்சி நடத்துபவர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பின்பற்றலாம்தானே!
பரிசாக கிடைக்கும் மோசமான 100 புத்தகங்களுக்கு நடுவே, சிலவேளை அபூர்வமாக ஒரு நல்ல புத்தகம் கிடைத்துவிடுவதும் உண்டு. அப்படிக் கிடைத்த புத்தகம் ‘மிருணாள் சென்’ எழுதிய ‘இன்று புதிதாய் பிறந்தேன்’. கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள வாழ்க்கை வரலாற்று நூல் இது.
‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற இயக்குநரான மிருணாள் சென்னின் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியல், சினிமா என்ற வகைமையை முன்னெ டுத்து வெற்றிகரமான மாற்று சினிமாவை உரு வாக்கியவர் மிருணாள் சென்.
மிருணாள் சென்னிடம் ஒரு நேர் காணலின்போது ஒரு பத்திரிகையாளர் ‘‘உங்கள் ‘ஏக்தின் பிரதின்’ படத்தின் கதாநாயகி ஒருநாள் இரவு வீட்டுக்கு வரவில்லை. குடும்பமே அவளைத் தேடு கிறது. சந்தேகம் கொள்கிறது. முடிவில் மறுநாள் அவளாக வீடு வந்து சேர்வதுடன் படம் முடிவடைந்துவிடுகிறது. உண்மை யில் அவள் எங்கேதான் போயிருந்தாள்?’’ என்று ஒரு கேள்வி கேட்டார்.
அதற்கு மிருணாள் சென் சொன்ன பதில்: ‘‘யாருக்குத் தெரியும்? அது அவளது சுதந்திரம்!’’
இந்த பதில் சரியான சவுக்கடி. இதுவே கலைஞனின் அடையாளம். நாம் எப்போதுமே அடுத்தவரின் அந்தரங்கத் தைப் பற்றி அறிந்துகொள்ளத் துடிக் கிறோம். கற்பனையாக வம்பு பேசு கிறோம். அவதூறுகளைப் பரப்பு கிறோம். நான்கு பேர் ஒன்று கூடி பேசிச் சிரிக்கும் இடத்தில், யாரோ ஒரு பெண் ணின் அந்தரங்கம் கேலிக்குள்ளாக்கப் படுகிறது என்பதே நிஜம்.
வங்க இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான தாகூர், பிமல் மித்ரா. தாராசங்கர், சீர்சேந்து முங்கோபாத்யாய, சுனில் கங்கோ பாத்யாய, ஆஷா பூரணாதேவி எனப் பலரது சிறுகதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன. தமிழில் நான் அறிந்தவரை மகேந்திரன் மட்டுமே புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ கதையை ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படமாகவும், கந்தர்வனின் ‘சாசனம்’ கதையை அதே பெயரிலும் படமாக்கியிருக்கிறார். தமிழில் பலநூறு நல்ல சிறுகதைகள் உள்ளன. ஆனால், அதில் விருப்பமானதைத் தேர்வு செய்து படமாக்க யாரும் முன்வரவில்லை என்பதே ஆதங்கம்.
மிருணாள் சென்னின் வாழ்க்கை வரலாறு படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. சென்னின் அப்பா ஒரு வழக்கறிஞர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். மிருணாள் சென்னின் குடும்பப் பின்னணி, பள்ளிப் பருவ நாட்கள், நாடகங்கள் மீதான ஈடுபாடு, கல்லூரி நாட்களில் கொல்கத்தாவுக்குப் படிக்க வந்தபோது விடுதியில் கிடைத்த அனுபவங்கள், தாகூரின் இறுதி அஞ்சலியை நேரில் கண்டது, சில காலம் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்தது, அந்த நாட்களில் தான் சந்தித்த மருத்துவர்கள், பார்த்த நாடகங்கள், இலக்கிய நிகழ்வுகள், இடதுசாரி சிந்தனையின் அறிமுகம், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியோடு தனக்கு ஏற்பட்ட உறவு என தனது பசுமையான நினைவுகளைத் துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் மிருணாள் சென்.
சார்லி சாப்ளின்தான் மிருணாள் சென் னின் ஆதர்சம். சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறும், ருடால்ப் ஆர்ன்ஹெமின் ‘ஃபிலிம் அஸ் ஆர்ட்’ என்ற புத்தகமுமே தன்னை திரைப்படத்துறைக்குக் கொண்டுவந்தன எனக் கூறுகிறார் சென்.
கொல்கத்தாவில் எப்படி ஒரு ஃபிலிம் கிளப்பை அவரும் நண்பர்களும் ஒன் றிணைந்து போராடி உருவாக்கினார்கள்? அதில் புதோவ்கின், ஐசன்ஸ்டீன், பெலினி, பெர்க்மென் போன்றவர்களின் படங்களைத் திரையிட்டு எப்படி விவாதம் செய்தார்கள் என்பதையும், தான் ஒரு திரை விமர்சகராக செயல்பட்ட விதம் குறித்தும் சென் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார்.
மிருணாள் சென்னின் முதல் படம் ‘ராத் போர்’ (Raat Bhore). இதில், உத்தம் குமார் நாயகன். சலீல் சவுத்ரி இசை. படம் படுதோல்வியைச் சந்தித்தது. தோல் வியால் சோர்ந்து போய்விடாமல் போராடி தொடர்ந்து சினிமா இயக்கினார் சென்.
1961-ல் லண்டன் திரைப்பட விழா வுக்கு அவரது ‘பைசே சிராவன்’ திரைப் படம் தேர்வாகியது. அந்த விழாவின் மூலம் சர்வதேச திரைப்பட அரங்கில் தான் கவனம் பெற்றதை நெகிழ்வுடன் நினைவுகூருகிறார் மிருணாள் சென்.
இந்த நூலில் பல ஆச்சர்யமான தகவல்கள் உள்ளன. 1969-ல் மிருணாள் சென் ஹிந்தியில் எடுத்த ‘புவன்ஷோம்’ படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு ஓர் இளைஞர் பின்னணிக் குரல் கொடுத்தார். அப்போது அவருக்கு சம்பளமாக 300 ரூபாய் கொடுக்கப்பட்டது. அந்தக் குரல் மிருணாள் சென்னுக்குப் பிடித்திருந்தது. அந்த இளைஞர்தான் இன்று ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள அமிதாப் பச்சன். அதுதான் அமிதாப் சினிமாவில் பெற்ற முதல் ஊதியம் என நினைக்கிறேன் என மிருணாள் சென் குறிப்பிடுகிறார். இதை விட ஆச்சர்யம் ‘புவன்ஷோம்’ படம் எடுக்க ஆன செலவு வெறும் இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே என்பது!
ஒரு இயக்குநரே தனது வாழ்க்கை மற்றும் கலையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்பது அவரையும், அவரது சினிமாவையும் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவி செய்யக்கூடியது. அந்த வகையில் இந்த நூல் நல்ல சினிமாவை நேசிக்கிற அத்தனை பேரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்!
- வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT