Published : 10 May 2015 01:23 PM
Last Updated : 10 May 2015 01:23 PM
ஓவியர் என்.ஸ்ரீனிவாசன் கோட்டோவியங்களையும் வண்ணத் தீற்றல்களால் ஆன அரூப ஓவியங்களையும் வரைந்துவருபவர். தன் வண்ணத் தீற்றல்களை மட்டும் "In the Lines of Cosmic Flows" (பிரபஞ்ச ஓட்டத்தின் பாதையில்) என்னும் தலைப்பில் மும்பையில் தனிக் கண்காட்சியாக சமீபத்தில் நடத்தியுள்ளார்.
ஒவ்வொரு கலைஞனுக்கும் தனது கலை வெளிப்பாட்டுக்கு ஆதாரமான ஒரு வேட்கை இருக்கும். "நான் ஏன் ஓவியங்களை வரைய வேண்டும்?" என்னும் கேள்வியும் அதற்கு விடை காண்பதற்கான தேடலும் அவன் மனதில் இருந்துகொண்டுதான் இருக்கும். "என் ஓவியங்களை இரண்டு விதமாக நான் பார்க்கிறேன்" என்று சொல்லும் ஸ்ரீனிவாசன், தனது கோட்டோவியங்களையும் உருவங்கள் அற்ற வண்ணத் தீற்றல்களையும் தனது கலையின் இரண்டு வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்.
"நினைவுக்கும் மறதிக்கும் இடைப்பட்ட இடத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நான் ஏகாந்தம் என உணர்கிறேன்" என்கிறார் ஸ்ரீனிவாசன். இந்த ஏகாந்தத்தை நீடிக்கச் செய்ய முடியுமா என்பது தன் கேள்வி என்று தொடர்கிறார்.
நினைவு, மனதில் பதியும் பிம்பங்களை உருவ ஓவியங்களாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கும்போது மனதில் ஒரு வெற்றிடம் உருவாகிறது. புலன்கள் வழியே உள்ளேவரும் பல்வேறு பிம்பங்கள் அந்த வெற்றிடத்தை மீண்டும் நிரப்பிவிடுகின்றன. உருவங்களின் எல்லைகளைத் தாண்டி, வண்ணங்களுடன் என் கலையில் நான் ஆழ்ந்து ஈடுபடும்போது இந்த வெற்றிடம் தொடர்ந்து நீடிக்கிறது. எனக்கான ஏகாந்தம் கிடைக்கிறது. அப்படிப் பார்க்கும்போது வண்ணங்களுடனான எனது ஊடாட்டம் ஒரு வகையில் தியானம் போன்றது என்று தன் கலையைப் பற்றிய தனது பார்வையை விளக்கிக்கொண்டேபோகிறார்.
தன் கலை பற்றி ஒரு கலைஞர் என்னதான் பதில் சொன்னாலும் அவரது ஆக்கங்கள் வேறு சில பதில்களைத் தமக்குள் வைத்திருக்கக்கூடும். படைப்புகள் கலைஞனின் உத்தேசத்தையும் பிரக்ஞை நிலையில் ஏற்றுக்கொண்ட இலக்கையும் மீறிப் பயணிப்பவை.
ஸ்ரீநிவாசனின் ஓவியங்களைப் பார்க்கும்போது அவர் சொல்லும் இடைவெளியைத் தாண்டியும் அவை தம் இருப்பை ஸ்தாபித்துக்கொள்ள விழைவதை உணர முடிகிறது.
அவர் பயன்படுத்தும் வண்ணங்களும் அவற்றின் பல்வேறு சாயைகளும் ஒரு நிலையில் மனம் என்னும் புதிரின் பல்வேறு அடுக்குகளாகவும் இன்னொரு நிலையில் இயற்கையின் மாறுபட்ட தோற்றங்களாகவும் வெளிப்படுகின்றன. மனமும் இயற்கையும் இணைந்த படிமங்களாகவும் இவை தோற்றம் கொள்வதையும் உணர முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT