Published : 14 May 2015 10:45 AM
Last Updated : 14 May 2015 10:45 AM

வீடில்லா புத்தகங்கள் 32: அறிவின் வரைபடம்!

நூலகங்களுக்குச் செல்லும் போதெல்லாம் என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்கா தொகுதி களை வியந்து பார்த்துக் கொண்டிருப் பேன். மேற்கோள் நூற்பகுதியில் லெதர் பைண்டிங் செய்யப்பட்டு, தங்கநிற எழுத்துக்கள் மின்ன வரிசை வரிசையாக அடுக்கிக் வைக்கப்பட்டிருக்கும் பிரிட்டானிக்காவின் 32 தொகுதிகளும் வாசிக்கத் தூண்டுபவை.

நேர்த்தியான அச்சும், துல்லியமான புகைப்படங்களும், ஓவியங்களும், எளி மையும் செறிவும் மிக்கக் கட்டுரைகளும், வியப்பூட்டும் தகவல்களும் கொண்ட பிரிட்டானிக்கா பிரமிக்க வைக்கும் அறிவுக் களஞ்சியமாகும்!

ஒவ்வொரு முறை அதைக் காணும் போதும், ‘இந்த மொத்த தொகுதிகளையும் யாராவது ஒருவர் படித்திருப்பாரா? என்ற கேள்வி மனதில் எழும். யாரால் இதை மொத்தமாக படிக்க முடியும்? ஒருவேளை படிப்பது என்று முடிவு செய் தால் கூட எத்தனை ஆண்டுகள் செல வாகும் என மலைப்பாகத் தோன்றும்.

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.ஜே.ஜேக்கப் என்பவர் என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்காவை முழுமையாக வாசித்து முடித்ததோடு, அது குறித்த தனது அனுபவத்தை ‘தி நோ இட் ஆல்’ (The Know It All) என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார் என ஆங்கில நாளிதழில் வெளியான குறிப்பை வாசித்த உடனே, அதை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது.

இணையம் வந்தபிறகு புத்தகம் வாங்கு வது எளிதாகிவிட்டது. தற்போது எந்த ஆங்கிலப் புத்தகம் வேண்டும் என்றாலும் பிலிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் எளிதாக ஆர்டர் செய்துவிடலாம். வீட்டில் கொண்டுவந்து புத்தகத்தைக் கொடுத்துவிட்டு பணம் பெற்றுக்கொள்கிறார்கள். அதுவும் இரண்டே நாட்களில். கூடுதலாக சிறப்பு சலுகைகள் வேறு தருகிறார்கள்.

இணையத்தில் ஆர்டர் செய்து, ‘தி நோ இட் ஆல்’ புத்தகத்தை வாங்கி வாசித்தேன். வியந்து பாராட்டும் அளவில் ஒன்றுமில்லை. சராசரியான புத்தகமே. ஆனால், ‘எப்படி கலைக்களஞ்சியத்தின் 32 தொகுதிகளையும் வாசித்தேன்’ என்ற தனது அனுபவத்தையும், பிரிட்டானிக்காவில் உள்ள விசித்திரமான, சுவாரஸ்யமான தகவல்களையும் ஒன்று சேர்த்து ஏ.ஜே.ஜேக்கப் எழுதியிருக்கிறார். அதற்காக வாசிக்கலாம்.

என்சைக்ளோபீடியா என்பது கிரேக்க மொழிச் சொல். அதன் பொருள் ‘பொது அறிவு’ என்பதாகும். என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பல துறை அறிவை உள்ளடக்கிய அறிவுக்களஞ்சியமாகும். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதல் பதிப்பு 1768-ம் ஆண்டு ஸ்காட் லாந்தில் வெளியானது. அதில் இருந்து தொடர்ச்சியாக 200 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தத் தொகுதிகள், ‘இனிமேல் அச்சில் வெளிவராது’ என பிரிட்டானிக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

அச்சு புத்தகங்களின் விற்பனை குறைந்துபோனதே காரணம். 1989-ம் ஆண்டு பிரிட்டானிக்கா குறுந்தகடு (சி.டி) வடிவில் கலைக்களஞ்சியத்தை முதல் முறையாக வெளியிட்டது. அதன் வெற்றி யைத் தொடர்ந்து இனிமேல் இணையத் திலும், குறுந்தகடு வடிவிலும் மட்டுமே கலைக்களஞ்சியம் விற்கப்படும் என அறி வித்துள்ளார்கள். தமிழிலும் பிரிட்டா னிக்கா கலைக்களஞ்சியம் மூன்று பெரும் தொகுதிகளாக வெளியாகி உள்ளன.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா 32 தொகுதிகளைக் கொண்டது. 33 ஆயிரம் பக்கங்கள். இதில், பல்வேறு துறைச் சார்ந்து 65 ஆயிரம் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 9,500 பேர் இதில் எழுதியுள்ளார்கள். இதில் 4 கோடியே 40 லட்சம் சொற்கள் இடம்பெற்றுள்ளன.

ஜேக்கப்புக்கு என்சைக் ளோபீடியாவை முழுமையாக வாசிக்க வேண்டும் என்கிற ஆசை எப்படி உருவானது? முதல் காரணம் அவரது அப்பா. அவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் சிறந்த படிப்பாளி. அவர் பிரிட்டானிக்கா முழு தொகுதிகளையும் படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவரது பணிச் சுமை காரணமாக அது சாத்தியமாகவில்லை. ஆகவே, தனது தந்தையின் ஆசையை தான் நிறைவேற்ற வேண்டும் என ஜேக்கப் கலைக்களஞ் சியத்தைப் படிக்க முடிவு செய்தாராம்.

ஜேக்கப் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றுபவர் என்பதால் இயல் பாகவே நிறைய நேரம் படிக்கக்கூடியவர். கலைக்களஞ்சியத்தைப் படிப்பது என முடிவு செய்தவுடன், அதை ஒரு திட்டமாக உருவாக்கி அதற்காகவே நேரம் ஒதுக்கி வாசிக்கவும், மனப்பாடம் செய்யவும் தொடங்கினார்.

கலைக்களஞ்சியத்தை வாசிக்கத் தொடங்கியபோது உருவான முதல் பிரச்சினை, அகர வரிசைப்படி உள்ள எழுத்துகளை அப்படியே வாசித்துக் கொண்டு போவதா, இல்லை தொடர் புடைய விஷயங்களை வேறு வேறு தொகுதிகளில் தேடி வாசித்துவிட்டுத் தொடர்வதா என்ற குழப்பம் உருவானது. தானே இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்திக் கொண்டு அகரவரிசையைப் பின்தொடர தொடங்கியுள்ளார்.

கலைக்களஞ்சியத்தில் பல்வேறு துறையைச் சார்ந்த தகவல்கள், விளக்கங் கள், செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதை ஒரு நாவலைப் போலவோ, இலக்கியப் பிரதி போலவோ வாசிக்க முடியாது. மேலும், அறிவியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் ஒரே ஆளுக்கு எப்படி எல்லாத் துறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்? ஆகவே, ஜேக்கப் தொடர்ந்து வாசிக்க சிரமப்பட்டார்.

தனக்குப் புரிந்தாலும், புரியாவிட்டா லும் கலைக்களஞ்சியத்தைத் தொடர்ச்சி யாக வாசித்து விட வேண்டும் என்ற உந்து தல் காரணமாக அவர் நாள்கணக்கில் வாசித்துக் கொண்டேயிருந்திருக்கிறார்.

ஒவ்வொரு பக்கம் வாசித்து முடித்தவுடன், அதைப் பற்றிய தனது எண்ணங்களை குறிப்பாக எழுதி வைத்துக்கொண்டுள்ளார். அத்துடன் கலைக்களஞ்சியத்தில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களைத் தனியே எழுதிக்கொள்ளவும் செய்தார்.

கலைக்களஞ்சியத்தை வாசிக்க வாசிக்க அவருக்கு தலைசுற்றத் தொடங் கியது. சில நாட்கள் மண்டைக்குள் சம்பந் தமே இல்லாத தகவல்கள் ஒன்றுகலந்து கொந்தளிக்கத் தொடங்கினவாம். தான் படித்த விஷயங்களை யாரிடம் கொட்டுவது எனப் புரியாமல், தான் கலந்துகொள்ளும் விருந்துகளிலும், தன்னைத் தேடி வரும் நண்பர்களிடமும் படித்த விஷயங்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

இதனால், இவரைக் கண்டு பலரும் விலகி ஓடினார்கள். மனைவி எரிச்சல் அடைந்தார். ‘ஏன், இப்படி கலைக்களஞ்சியத்தை விழுந்து விழுந்து படிக்கிறீர்கள்?’ எனக் கேட்டவர்களுக்கு, ஜேக்கப் ஒரு ஆப்பிரிக்கப் பழங்கதை ஒன்றை சொன்னார்.

உலகிலேயே மிக அதிசயமான ஒரு பாகற்காய் இருந்தது. அது சாதாரண மானது இல்லை. உலகின் அத்தனை அறிவும் ஒன்று சேகரிக்கப்பட்டு அந்தப் பாகற்காய்க்குள் சேமிக்கப்பட்டு இருந் தது. அதை ஒரு ஆமை திருடிக் கொண்டு போனது. தன் வீட்டுக்குப் போகிற வழியில் ஒரு மரம் விழுந்து கிடப்பதைக் கண்ட ஆமை, முதுகில் இந்தப் பாகற்காயை வைத்துக் கொண்டு எப்படி மரத்தின் மீது ஏறிப் போவது என யோசனை செய்தது. முடிவில் பாகற்காயைத் துண்டு துண்டாக உடைத்தது. உடனே அதில் சேகரிக்கப்பட்டிருந்த அத்தனை அறிவும் வெளியேறிப் போய்விட்டதாம். அப்படித்தான் உலகெங்கும் அறிவு பரவியது.

‘சிதறடிக்கப்பட்ட அறிவை ஒன்று திரட்டவே நான் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தை வாசிக்கிறேன்’ என்றார் ஜேக்கப்.

‘எதையாவது செய்து மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வைப்பது ஜேக்கப்பின் வழக்கம். அதில் ஒன்றுதான் இந்தக் கலைக்களஞ்சிய வாசிப்பு. மற்றபடி, அவர் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை. பிரிட்டானிக்காவை மேம்போக்காக வாசித்திருக்கிறார் என்பதன் அடையாளமே இந்த நூல்’ என ‘நியூயார்க்கர்’ பத்திரிகை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

18 மாதங்களை ஒதுக்கி, ஜேக்கப் பிரிட்டானிக்காவை வாசித்திருக்கிறார் என்பதால் அவரது நூலை வாசிக்க நாமும் இரண்டு மணி நேரங்களை ஒதுக்கலாம்தானே!

- இன்னும் வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x