Published : 31 May 2015 01:15 PM
Last Updated : 31 May 2015 01:15 PM
தமிழின் சிறந்த சிறுகதையாளர்களில் ஒருவரும், முன்னோடி நாடக ஆளுமையுமான ந.முத்துசாமி எழுதிய நாடகங்கள், போதிவனம் சார்பில் முழு நூலாக வெளியிடப்படும் தருணத்தையொட்டி அவரது நாடகங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரை இது…
நான் கடந்த 40 ஆண்டுகளாக, நாற்காலிக்காரர் தொடங்கி, முத்துசாமியின் நாடகங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அவருடைய நாடகங்கள் புரிவதில்லை என்கிற குற்றச்சாட்டு ஒவ்வொரு நிகழ்விலும் எழுப்பப்படும். இந்த ‘புரியாமை’ என்பது ஒரு குற்றச் சாட்டாக ஒவ்வொரு காலத்திலும் சில படைப்பாளிகள் மீது வைக்கப்படுகிறது. மௌனி, நகுலன் தொடங்கி தற்போது கோணங்கியின் எழுத்துகள் மீதும் முருக பூபதியின் நாடகங்கள் தொடர்பாகவும் இந்தக் குற்றச்சாட்டு உண்டு.
கூட்டு உணர்வுநிலைகள்
முக்கியமாக, முத்துசாமியின் நாடகங்கள் நாடகத்துக்கான ஒரு சம்பிரதாயமான கட்டமைப்புடன் இயங்கு வதில்லை. வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து மாறுபட்டு இவை தீவிரமான உணர்வுத்தளத்தில் இயங்குகின்றன. சம்பவங்களின் சேர்க்கையாகவோ, முடிவுகளை நோக்கி பாத்திரங்கள் உந்தப்படுவதாகவோ இந்த நாடகங்கள் அமைவதில்லை. முக்கியமாக தனிப்பட்ட பாத்திரங்கள் இல்லை. கோரஸ் போன்று உணர்வுநிலைகளை பாத்திரங்கள் உருவகம் செய்கின்றன. வழக்கமான உரையாடல் பாணியில் அமையாமல் துண்டுதுண்டான வார்த்தைகளில் உள்மன அதிர்வுகளாகவும், மோதல்களாகவும் இவை வெளிப்படுகின்றன. ஒரு பிரத்யேக மான பேச்சுத் தொனியுடன் சம்பிரதாயமான கட்டுக்கோப்பையும், ஒழுங்கையும் கேலி செய்யும் அபத்த பாணியை இவை கையாளுவதால் இவற்றை வகைப் படுத்துவதில் பார்வையாளனுக்குச் சிக்கலை உருவாக்குகின்றன.
சிதறுண்ட மதிப்பீடுகள், மனிதர்கள்
இந்த நாடகங்களில் சமகாலத்திய சிதறுண்ட மனிதர்கள் வருகிறார்கள். மதிப்பீடுகளில் நிலவும் தலைமுறை இடை வெளி, சமூக வாழ்வில் சுவரொட்டிகள் பெறும் அந்தஸ்து, ஆண் பெண் உறவுநிலைகளில் உள்மன விழைவுகள், கிராமப்புற மதிப்பீடுகளின் இழப்பு, பிம்பங்களின் அரசியல், ஒற்றைக் குரல்களின் ஆதிக்கம் போன்ற சமகால நுண்ணுணர்வு சார்ந்த பல பிரச்னைகள் குறித்த கவனம் இந்த நாடகங்களில் முன்வைக்கப்படுகிறது. நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், நற்றுணையப்பன், அர்ச்சுனன் தபசு போன்ற நாடகங்களில் கோஷங்களின் அரசியல், பிம்பங்களின் ஆட்சி, நாடுகளின் ஆயுதக் குவிப்பு போன்ற சமகால நுண் அரசியல் பேசப்படுகிறது.
இந்த நாடகங்கள் பல்வேறு குரல்களில் ஒலிப்பதால் இவை பிரத்யேகமான ஒரு இயங்குதளத்தைக் கோருகின்றன. வெளி என்பது தட்டையாக, ஒற்றைத்தன்மை கொண்டதாக இல்லாமல் அதிகப் படிநிலைகள் கொண்டதாக வடிவம் கொள்கிறது. பாத்திரங்களின் அசைவுகள் நடனத்தன்மை கொண்டதாகவும், பேச்சுகள் சம்பிரதாயமான உரையாடல் தன்மையற்ற இசைத்தன்மையுடனும் வெளிப்பட வேண்டியவையாக உள்ளன. நம்முடைய பாரம்பரியக் கூத்தின் ஆட்டம், பாட்டம், பேச்சு, கொச்சைத்தன்மை எல்லாவற்றையும் உள்ளடக்கிய நவீன கூத்து போன்ற வடிவத்தையே இவை கோருகின்றன. சம்பிரதாயமான மத்திய வர்க்க கட்டுமானங்கள் மீது இவை தொடர்ந்து தாக்குதல் தொடுக்கின்றன. அபத்த நிலை, கவிதை, குறியீட்டு நிலை என யதார்த்தத்திலிருந்து மாறுபட்ட ஆனால் யதார்த்தத்தைக் கேள்விக்குட் படுத்தும் குரல்களையும், படிமங்களையும் முன்வைக்கின்றன.
ஒற்றைத்தன்மையற்று பல்வேறு குரல்களில் இவை இயங்குவதால் பலவிதமான அனுமானங்கள் கொள்ள வாய்ப்பளிக்கின்றன.
சமகால வாழ்வியல் சார்ந்த பல உரையாடல்கள் இவற்றின் மீது சாத்தியப்படுகிறது.
முக்கியமாக இவை கருத்து ஆதிக்கமற்று காட்சித்தள அனுபவங்களையே ஆதாரமாகக் கொள்கின்றன. வெளி, வண்ணம் மற்றும் அசைவுகள் குறித்த ஒரு நுண்தன்மையே இந்த நாடகங்களை இயக்கின.
கட்டுரையாளர், நாடக வெளி இதழின் ஆசிரியர்,
தொடர்புக்கு: velirangarajan2003@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT