Published : 03 May 2015 12:30 PM
Last Updated : 03 May 2015 12:30 PM
ஆண்டு 1972. ‘மெட்ராஸ் ஆர்ட் கிளப்’ என்று அழைக்கப்பட்ட குழுவில் ஓவியக் கலை ஆர்வம் கொண்ட ஆறேழு பேர் சுறுசுறுப்பாக வரைந்துகொண்டிருந்தனர். நான் அங்கே போன முதல் நாள், ஓவியர் பி.டி. சுரேந்திரநாத் நீர்வண்ண ஓவியம் எப்படி வரைவது என்று குழுவினருக்கு வரைந்து காட்டிக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் பல்வேறு வயதினரும் இருந்தனர்-சிலர் வயதில் மிகச் சிறிவர்கள், சிலர் எண்பது வயதைத் தாண்டியவர்கள்.
சென்னை கவின்கலைக் கல்லூரியில் வாரம் இரண்டு முறை கூடியது அந்த ‘ஆர்ட் க்ளப்’. மிக நெருக்கமான நண்பர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில்கூட வந்தார்கள். அங்கேதான் நான் எஸ்.என். வெங்கடராமனை முதலில் சந்தித்தேன். ஓவியர் என்பதற்கான எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை—தாடி இல்லை, கிருதா இல்லை.
ஒரு சாதாரண மனிதர், ஆனால் மகிழ்ச்சியான மனிதர். பெரும்பாலான நாட்களில் அவர் நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார். அவ்வப்போது, மனம்திறந்த, வாய் நிறைந்த உரத்த குரலில் சிரிப்பார்; பேச்சில் அவர் ஒருபோதும் கடுமையான சொற்களையோ வசவுகளையோ பயன்படுத்தியதில்லை.
சில நாட்கள், அவர் ஒரு கான்வாஸில் தைல வண்ண ஓவியம் ஒன்றை வரையத் தொடங்குவார். ஒரே மூச்சில் படத்தை வரைந்து முடித்துவிடுவார். வெங்கடராமனுடைய ஓவியங்களில் மறுமுறை வேலை செய்வதற்கு எதுவும் இருக்காது. அவர் ஓவியம் வரைந்த முறையில் எந்த விதப் போராட்டமோ, முட்டிமோதுவதோ இருப்பதற்கான அடையாளம் எதுவுமே இருக்காது. அவருடைய ரத்த நாளங்களிலிருந்து வண்ணம் பெருக்கெடுத்து ஓடிவந்தது போல் இருக்கும். அதே நேரத்தில் ஒரு நிலக்காட்சி எப்படி உருவாகிறது என்பதை மிக லகுவாக செய்துகாட்டி விளக்குவார்.
பால் கொகேனையும் செசானையும் அவர் எடுத்துக்காட்டுகளாகக் கூறுவார். ஒரு ஓவியத்தில் மீண்டும் மீண்டும் வேலைசெய்து திருத்த வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஓவியம் எப்போதும் புதிதாகத் தெரிய வேண்டும் என்று வலியுறுத்துவார். ஆர்ட் கிளப்புக்கு வரும் முன்பே அடிப்படை வரைதிறன்களையும் வெளிப்புறக் காட்சிகளை வரைவதிலும் அவர் பயிற்சிபெற்றிருந்தார்.
மெட்ராஸ் ஆர்ட் கிளப், ஓவியக் கலையின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் சந்திக்கும் இடமாக இருந்தது. நுழைவுத் தேர்வுகள் இல்லை; மதிப்பெண்கள் இல்லை; தேர்வுகள் இல்லை; சான்றிதழ்களும் இல்லை. அங்கே கற்றதுக்கும் கற்பித்ததற்கும் முறையான தொடக்கமோ முடிவோ இல்லை. வண்ணங்கள்தான் எங்களைப் பிணைத்திருந்தன. இது என் போன்றோருக்கு உகந்த இடமாக ஆர்ட் க்ளப்பை ஆக்கியது.
மூத்த ஓவியர்கள் எஸ். தனபாலும், எல். முனுசாமியும் கல்லூரித் தலைவர்களாக இருந்த நாட்கள் அவை. ஆர்ட் கிளப்புக்கு எல்லா வகைகளிலும் ஆதரவு தந்தவர்கள். கே.சி.எஸ். பணிக்கர் சோழமண்டலம் ஓவியர் கிராமத்தை நிறுவியிருந்தார். நாங்கள் அவ்வப்போது அங்கு போவோம். மூத்த ஓவியர்களிடம் வெங்கடராமன் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். 1974-ல் ஜெயராமன் அப்போதைய பம்பாயில் ஜெஹாங்கிர் அரங்கில் கண்காட்சிக்காக இடம் கேட்டுப் பெற்றிருந்தார்.
நானும் மற்றவர்களுடன் வர வேண்டும் என்று வெங்கடராமன் வற்புறுத்தினார். எனக்கு ஓவியக் கலையில் இரண்டு வருட அனுபவமே இருந்தது. எங்களுடைய ஓவியக் கண்காட்சி விற்பனைரீதியில் வெற்றிபெறவில்லை. வெங்கடராமன் மட்டும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு கான்வாஸை விற்றிருந்தார்.
என்னைப் பொறுத்தவரை, என்னுடைய பாதை தெளிவாகத் தெரிந்துவிட்டது. பம்பாயின் ஓவியர்களிடையே காணப்பட்ட பண்பின் அடையாளமாக எம்.எஃப். ஹுசேன், பேந்த்ரே, ஹெப்பார், அக்பர் பதம்ஸி போன்ற மூத்த ஓவியர்கள் வந்து எங்கள் படங்களைப் பார்வையிட்டு, எங்களுக்கு வழிகாட்டும் முறையில் ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் தந்து உதவினார்கள்.
பத்திரிகைகளில் எங்கள் கண்காட்சியைப் பாராட்டி விமர்சனங்கள் வெளியாயின. ஜே.ஜே. ஓவியப் பள்ளியின் தலைவர் வி.ஆர். அம்பேத்கர் எங்களைப் பள்ளிக்கு அழைத்துச்சென்றார். அந்நாட்களில், ஓவிய உலகில் விமர்சகர்களுக்குச் சிறப்பான இடம் இருந்தது; சந்தை மோகிகளும், தனிப்பட்ட சக்திகளும் ஓவியக் கலையைக் கடத்திச்சென்றிருக்கவில்லை.
ஓவிய உலகில் அங்கீகாரம் என்ற வாயிலின் முன் நாங்கள் நின்றிருந்ததாக உணர்ந்தோம். வெங்கடராமன் எனக்கு முன்னரே அரூப ஓவியத்துக்குள் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டிருந்தார். நான் என் இலக்கியப் பின்னணி காரணமாக (இலக்கிய ஆசைகளுடன்தான் நான் ஓவியத் துறையில் நுழைந்தேன்) மருட்சியும் மரணமும் கலந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருந்த ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தேன்.
ஓவியத்தைக் குறித்த வெங்கடராமனின் அணுகுமுறை ஆரோக்கியமானது. அதில் பாணி என்பது படைப்பூக்கத்தை ஒரு சட்டகத்துக்குள் திணிப்பதாக இல்லை. அந்த வகையில் அவர் சுதந்திரமான ஓவியர். ஆனால், ரூப ஓவியத்தின் மீது வெறுப்போ, அதைக் குறித்த நிராகரிப்போ அவரிடம் இல்லை. அவருடைய மறுஉருவாக்கப்பட்ட (stylised) மரங்களில் பறவைகள்முதல் முளைக்கும் விதைகள்வரை ஸ்தூலமான உருவங்களைக் காணலாம்; உயிரினங்களின் மாறிய வடிவங்களும் அவற்றில் அடங்கும்.
சுகமான அமைதியில் கண்கள் பார்க்க ஒரு ஓவியப் படிமத்தை உருவாக்குவதிலேயே அவர் அக்கறை இருந்தது. வண்ணங்களையும் கோடு களையும் கச்சிதமான அளவில் பயன்படுத்துவது மூலம் இதை அவரால் அடைய முடிந்தது. பின்னாள் படைப்பு களில் அவர் கோடுகளையும் அசைவையும் அதிகம் பயன்படுத்தினார், ஏதோ அவருடைய தூரிகையிலிருந்து படிமங்கள் விடுபட்டு வெளியே வர விரைவதுபோல். அவருடைய கோட்டோவியங்கள் பார்ப்பதற்கு எப்போதும் புதியவையாகவும், இயல்பானவையாகவும் இருந்தன. கண்களை ஏமாற்றும் விதத்தில் அவை எளிமையையும் கொண்டிருந்தன.
வெங்கடராமன் மிகச் சில தனி-ஓவியர் கண்காட்சிகளையே நடத்தினார். அவருடைய முதல் தனி-ஓவியர் கண்காட்சியை 1979-ல் ராயப்பேட்டையில் க்ரியா, தன் புத்தக வெளியீட்டு அலுவலக அரங்கில் நடத்தியது. பிறகு சரளா ஓவிய அரங்கிலும், லக்ஷணா அரங்கிலும் இரு தனி-ஓவியர் கண் காட்சிகள் நடந்தன. அவர் தன்னை ஓவியராக முனைப்புடன் காட்டிக்கொண்டதில்லை. அவரைப் பற்றிய ஆவணப் படம் ஒன்றை கீதா ஹட்சன் தயாரித்திருக்கிறார்.
நாங்கள் நாற்பதாண்டுகளாகத் தொடர்ந்து ஓவியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். அவர் தன் மனதை ஒரு கோயிலைப் போல் தூய்மையாக வைத்திருந்தார். இறப்பதற்கு ஒரு வாரம் முன்புவரை அவர் வரைந்து கொண்டிருந்தார் என்று அவர் மகள் சொன்னார். இரண்டு வருடங்களுக்கு முன் கோட்டோவியங்களின் தொடர் ஒன்றையும் வண்ணத் தைல ஓவியங்களின் தொடர் ஒன்றையும் அவர் வரைந்து முடித்திருந்தார். பிரமிக்க வைக்கும் படைப்புகள் அவை.
- அச்சுதன் கூடல்லூர். ஓவியர்.
தொடர்புக்கு: achuthankudallur@gmail.com
தமிழில்: ‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT