Published : 11 May 2014 10:00 AM
Last Updated : 11 May 2014 10:00 AM

முரண்பாடுகள் நிறைந்த மனம்: ஜே.கே-வுடன் உரையாடல்

கேள்வியாளர்: போதையில் ஆழ்ந்த, மூடத்தனமான மனம் எனக்கு வேண்டாம். அது துடிப்பாகவும் உத்வேகத்துடனும் இருக்க வேண்டும். மனம் போதையில் ஆழ்ந்தோ, முரண்பாடுகள் நிரம்பியதாகவோதான் இருக்க வேண்டுமா?

கிருஷ்ணமூர்த்தி: துடிப்பான, உத்வேகம் மிகுந்த மனம் உங்களுக்கு வேண்டும். ஆனால், முரண்பாடுகள் இருக்கக் கூடாது அல்லவா?

ஆமாம். மனதில் முரண்பாடுகள் நிரம்பியிருக்கும்போது அது தன்னுடைய சொந்தச் செயல்பாடுகளால் காயப்பட்டுத் தன் சுரணையை இழந்துவிடுவதுபோல்தான்.

ஆக, முரண்பாடுதான் உத்வேகத்தையும் செயலூக் கத்தையும் சுரணையையும் அழித்துவிடுகிறது என்பது தெளிவாகிறது அல்லவா?

ஆமாம். எனக்கு அது தெரியும். ஆனால், இதைத் தாண்டி என்னால் போக முடியவில்லை.

தெரியும் என்றால் என்னவென்று பொருள்படுத்து கிறீர்கள்?

நான் சொன்னதில் இருக்கும் உண்மை வெளிப்படை யானது. ஆனால், இதை என்னால் தொடர்ந்து மேலே செல்ல முடியவில்லை.

அதன் உண்மையை நீங்கள் பார்க்கிறீர்களா அல்லது அதன் மொழி சார்ந்த கட்டமைப்பைப் பார்க்கிறீர்களா? இது பற்றி நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால், விளக்கம் என்பது உண்மை அல்ல. விளக்கம் வேறு விவரிக்கப்படும் பொருள் வேறு. தெரியும் என்று நீங்கள் சொல்லும்போது விளக்கத்தை மட்டுமே நீங்கள் உள்வாங்கிக்கொண்டதாகவும் இருக்கலாம்.

இல்லை.

அவசரப்படாதீர்கள். பொறுமை இழக்காதீர்கள். விளக்கம் வேறு விவரிக்கப்படும் பொருள் வேறு என்றால், அந்தப் பொருள் மட்டும்தான் இருக்கிறது என்று ஆகிறது. அதுதான் உண்மை. முரண்பாடுகள் இருக்கும்போது செயலூக்கமும் சுரணையும் இல்லாமல் ஆகிறது என்பதுதான் அந்த உண்மை. முரண்பாடு என்பது சிந்தனையும் உணர்வுகளும் கலந்தது. மனம் விருப்பு வெறுப்பு, தீர்ப்பு, முன்தீர்மானம், கண்டனம், நியாயப்படுத்தல் ஆகியவற்றால் நிரம்பியிருக்கிறது.

விவரணப்படுத்துவது மனதின் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று. மனம் அதில் சிக்கிக்கொள்கிறது. அந்த விளக்கத்தில் சிக்கிக்கொண்டு அதையே உண்மை என்று நினைக்கிறது. மனம் தன் செயல்பாட்டிலேயே சிக்கிக்கொண்டுள்ளது என்பதே யதார்த்தம்.

மனதில் உள்ள முரண்பாடுகள் அதன் சுரணையையும் செயலூக்கத்தையும் அழித்துவிடுகின்றன என்கிறீர்கள். ஆக, மனம், தனக்கு எதிராகத் தானே செயல்பட்டு, தன்னைத் தானே மந்தமாக்கிக்கொள்கிறது அல்லவா?

மனம் தனக்குத் தானே எதிரகச் செயல்படுவதைத் தடுப்பது எப்படி என்பதுதான் இப்போது உங்கள் கேள்வி, இல்லையா?

ஆமாம்.

இந்தக் கேள்வியே இன்னொரு கண்டனமாக, நியாயப் படுத்தலாக, தப்பித்தலாக அமைந்துவிடவில்லையா? இதுவே மனம் தனக்கு எதிரான செயல்பாடுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது இல்லையா? அப்படியானால், இந்த முயற்சியே மேலும் முரண்பாடுகளை உண்டாக்குகிறது. இந்த முடிவுறாத சுழற்சியில் நீங்கள் நிரந்தரமாகச் சிக்கிக்கொள்கிறீர்கள்.

ஆகவே, முரண்பாடுகளை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பதல்ல, உத்வேகமும் செயலூக்கமும் இருக்கும்போது முரண்பாடுகள் இல்லாமல்போகின்றன என்னும் உண்மையை எப்படிப் பார்ப்பது என்பதே சரியான கேள்வி. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

ஆமாம்.

அப்படியானால், முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி நீங்கள் இனியும் கவலைப்பட வேண்டாம். அவை தானாகவே உதிர்ந்துவிடும். ஆனால், எண்ணங்கள் அதற்கு உரமூட்டிக்கொண்டிருக்கும்வரையில் அவை உதிராது. செயலூக்கமும் உத்வேகமும்தான் முக்கியம். முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதல்ல.

புரிகிறது. ஆனால், எனக்கு உத்வேகம் வந்துவிட்ட தென்றோ நான் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டேன் என்றோ இதற்குப் பொருள் அல்ல.

இதை நீங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறீர்கள் என்றால், அதுவே உத்வேகம். அதுவே செயலூக்கம். அதுவே சுரணை. இந்நிலையில், அங்கே மோதல் இருக்காது.

- தமிழில்: அரவிந்தன்.
நன்றி: கே.எஃப்.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x