Published : 11 Apr 2015 11:05 AM
Last Updated : 11 Apr 2015 11:05 AM
உயரிய இலக்கியத்துக்குச் சிறப்பான இடம் அளிக்கும் பொருட்டு 1932-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதழ் கலைமகள். மாத இதழான இதன் நோக்கம் வெறும் பொழுதுபோக்கு அல்ல. காலம் கரைத்துவிடாத அளப்பரிய பல சிறுகதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்ட பெருமைக்குரிய இதழ் இது.
இதன் காரணமாகவே வாசகர்களின் மனத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றும் திகழ்கிறது. தமிழின் பெருமைக்குரிய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளும், பங்கிம் சந்திரர், சரத் சந்திரர், தாகூர், பிரேம் சந்த், காண்டேகர் போன்ற பிற மொழி எழுத்தாளர்களின் படைப்புகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் கலைமகளில் பிரசுரமாயின.
கலைமகளின் ஆயிரமாவது இதழ் இந்த ஏப்ரலில் வெளியாகியுள்ளது. கலைமகளில் ஏற்கெனவே வெளியான பல பிரபலங்களின் படைப்புகள் இந்த இதழை அழகுபடுத்தியுள்ளன. ராஜாஜி முதல் ராஜேஷ்குமார் வரை பல்வேறுபட்டவர்களின் கட்டுரைகளும் சிறுகதைகளும் அழகிய வண்ணங்களில், கண்கவர் ஓவியங்களின் துணையுடன் வாசகரைக் கவர்ந்திழுக்கும் வகையில் அச்சிடப்பட்டுள்ளன. பாரதியார், உ.வே. சாமிநாதய்யர், கி.வா. ஜகந்நாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,
ந. பிச்சமூர்த்தி, ஆர்.சூடாமணி உள்ளிட்ட பிரபலமான பல ஆளுமைகளின் படைப்புகள் வாசிப்பனுபவத்தைத் தரும் வகையில் இடம்பெற்றுள்ளன.
கலைமகள் ஆயிரமாவது சிறப்பிதழ்
விலை ரூ. 60, இதழ் பக்: 82
இணைப்பிதழ் பக்: 148
- ரிஷி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT