Published : 02 Apr 2015 11:52 AM
Last Updated : 02 Apr 2015 11:52 AM
‘மெக்கனாஸ் கோல்டு’ படத்தை இன்றைய தலைமுறையினர் எத்தனை பேர் பார்த்திருப் பார்கள் எனத் தெரியாது. தங்கம் தேடி கிராண்ட் கேன்யான் பள்ளத்தாக்கில் குதிரைகளில் செல்லும் அந்த சாகசக் கதை வெறும் திரைப்படம் மட்டுமில்லை; அது ஒரு வரலாற்று உண்மையின் புனைவடிவம்!
அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத் தாளர் ‘ஜாக் லண்டன்’ தான் தங்கம் தேடி அலாஸ்காவில் அலைந்த துயரத்தை, தனது சிறுகதைகளிலும் நாவல்களிலும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
சார்லி சாப்ளின் தனது ’கோல்டு ரஷ்’ படத்தில் இதே தங்கம் தேடும் கூட்டம், பசியில் எப்படி ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடித்துச் சாப்பிடத் தூண்டும் அளவு வெறிகொண்டது என்பதை வேடிக்கையாக சித்தரித்துள்ளார். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தங்கம் தேடி இப்படிக் கூட்டம் கூட்டமாக அலைந் தார்கள்.
காரல் மார்க்ஸ் தனது ’மூலதனம்’ நூலில் தங்கத்தைப் பணப் பண்டம் என்றே கூறுகிறார். 19-ம் நூற்றாண்டின் கடைசியில் தென்னாப்பிரிக்காவில் தங்கம் கண்டுபிடிக்கபட்டது. அதன் மூலமே தங்கத்தின் நவீன காலகட்டம் தொடங்கியது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் வரை ரூ. 1.63 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருந்து வந்தது. தற்போது சீனா அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஒரு நாட்டின் விதியை அதன் தங்க சேமிப்புதான் தீர்மானிக்கிறது. தேசத்தின் நாணயச் செலாவணியில் தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தியா தனது ரிசர்வ் வங்கியில் தங்கத்தைக் கையிருப் பில் வைத்திருக்கிறது. இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்புக்கு ஏற்றவாறு பணம் வெளியிடப்படுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.
தங்க விலையேற்றம் என்பது நகை விற்பனையை மட்டும் பாதிக்க கூடிய ஒன்றில்லை; அது நாட்டின் பொருளா தார நிலையை நிர்ணயம் செய்யக்கூடி யது. பணவீக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பண வீக்கம் என்ற சொல்லை டெல்மார் என்ற அமெரிக்கர் 1864-ல்தான் முதன்முதலாக உபயோகித் தார். அதன் பிறகே இந்தச் சொல் உலகெங்கும் பரவியது.
தங்கம் எப்படி வெட்டி எடுக்கப்படுகிறது என்பது குறித்தும், தங்க நகைகள் செய்கிற முறை குறித்தும், தங்கத்தின் தரக்கட்டுப்பாடுகள் குறித்தும் சில நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. ஆனால், தங்கத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு ஏதேனும் நூல் இருக்கிறதா எனத் தேடும்போது, கையில் கிடைத்த புத்தகமே ரஷ்ய மொழியில் அ.வி. அனிக்கின் எழுதிய ‘மஞ்சள் பிசாசு’ கிடைத்தது. இதனை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளவர் பேராசிரியர் தர்மராஜன். ‘முன்னேற்றப் பதிப்பகம்’ இதனை வெளியிட்டுள்ளது.
தங்கத்தின் வரலாற்றையும், அது பணப் பொருளாக எப்படி வளர்ச்சி அடைந் தது என்ற விரிவான விளக்கத்தையும், சோவியத் ரஷ்ய அரசு தங்கத்தை எப்ப டிக் கையாள்கிறது என்பது பற்றியும் அனிக்கின் எழுதியிருக்கிறார்.
ஐரோப்பிய மொழிகளில் தங்கத்தைக் குறிக்கும் சொல் ‘மஞ்சள்’ என்ற சொல் லில் இருந்தே தோன்றியிருக்கிறது. தங்கத் தைப் பற்றி மனிதனுக்கு சுமார் 6 ஆயிரம் வருஷங்களாகத் தெரியும். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்தில் ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளன. தங்க ஆதார அளவு முதலாவதாக கிரேட் பிரிட்ட னில் பின்பற்றபட்டது. அதுவே பின்பு மற்ற நாடுகளுக்கும் பரவியது.
வேளாண் சமூகம் உருவானபோது தங்கம் மதிப்பு பெறத் தொடங்கியது. எகிப்து, மெசபடோமியா, ஆசியா மைனர், கிரீஸ் ஆகிய நாகரீகங்களில் செல்வம் மற்றும் பலத்தின் சின்னமாக தங்கம் உருவானது.
மேய்ச்சல் சமூகத்தில் செல்வத்தை மதிப்பிட, எண்ணும் முறையே பிரதான மாக இருந்தது, எத்தனை கால்நடைகள் இருக்கின்றன, எத்தனை பண்டங்கள் விற் பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன, எத்தனை அடிமைகள் இருந்தார்கள் என எண்ணுதலே சந்தையின் முதன்மைச் செயல்பாடாக இருந்தது. அதை வைத்தே பண மதிப்பீடு உருவாக்கபட்டது.
ஆனால், தங்கத்தின் மதிப்பு உயரத் தொடங்கிய பிறகு எடையை அடிப்படை யாகக் கொண்டு பண மதிப்பீடு உருவா னது. தங்கத் தூசியை நிறுப்பதற்குக் கூட துல்லியமான எடைக் கற்களும், தராசுகளும் உருவாக ஆரம்பித்தன. ‘ஜாக் லண்டன்’ தனது சிறுகதையில் தங்க வேட்டைக்காரர்கள் எப்போதும் தங்கள் பையில் ஆளுக்கு ஒரு தராசு வைத்திருப்பதைப் பற்றி எழுதியிருக் கிறார். இது தங்கம் சந்தையில் பெற்றிருந்த மதிப்பின் அடையாளமே.
தங்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதை நாணயமாக அச்சிட்டு வெளி யிட்டதே. பரிவர்த்தனைக் காக நாணயங்களை அச் சிடும் முறை முதன்முதலாக லிடியர்களால்தான் அறி முகப்படுத்தபட்டது என் கிறார் ஹெரடோடஸ். அதா வது கி.மு. 7-ம் நூற்றாண்டில் லிடியர்கள் நாணயங்களை அச்சிடத் தொடங்கியிருக்கிறார்கள். அது பின்னர் கிரேக்க நாகரிகம் முழுமைக்கும் பரவியது.
அங்கிருந்து பாரசீகத்துக்குச் சென்றிருக்கக் கூடும் என்கிறார் ஹெர டோடஸ். லிடியாவின் அரசர் கிரேசஸ் தன்னிடம் ஏராளமாக தங்கம் வைத்திருந்த காரணத்தால், அவர் செல்வம் படைத்த அரசராக கருதப்பட்டார் என்பதே இதற் கான சான்று. இந்தியாவில் கி.மு. 6-ம் நூற்றாண்டிலே நாணயம் அச்சிடுவது தொடங்கியிருக்கிறது.
பண பரிவர்த்தனையில் தங்கத்தோடு வெள்ளி போட்டியிடுவதை வரலாறு முழுவதும் காண முடிகிறது. கிரேக்க நாகரீகத்தில் வெள்ளி முக்கிய இடம் பெற்றிருந்தது. ஆனாலும் அதனால் தங்கத்தை வெல்ல முடியவில்லை. 19-ம் நூற்றாண்டுக்குப் பிறகு வெள்ளியின் மதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியது. தங்கம் வேகமாக வளர்ந்து உச்சத்தை தொட்டுவிட்டது. ஆகவே இன்றும் வெள்ளியால் தங்கத்தின் இடத்தைப் பிடிக்கவே முடியவில்லை.
காரட் என்பது தங்கத்தின் தரத்தை அளப்பதற்கான அலகு. ஒரு கிராமில் 1/5 அல்லது 200 மி.கி. ஒரு காரட் ஆகும். கரோப் என்ற மரத்தின் விதை மாறாத எடை உடையது. இதிலிருந்து வந்த அரபிச் சொல்லே காரட் என்பதற்கான மூலமாகும்.
சுரங்கத்தில் இருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது மிக கடினமாக வேலை. சுரங்க தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டார்கள். தங்க சுரங்கத்துக்குள் போவது என்பது நரகத்துக்குள் போய் வருவது போன் றதே என்கிறார் தங்க ஆய்வாளர் டிமோத்தி கிரீன்.
இன்று சுரங்கங்கள் நவீனமயப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனாலும் ஒரு சுரங்கம் அமைக்க ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் தேவைப்படுகின்றன. முதலீடும் பல்லாயிரம் கோடி தேவைப்படுகிறது.
தங்க சந்தையின் இன்றைய முக்கியப் பிரச்சினை, பதுக்குதலும், தங்கக் கடத்தலுமாகும். உலகெங்கும் தங்கக் கடத்தல் மிகப் பெரிய குற்றவலைப் பின்னலாக வளர்ந்து பரவியிருக்கிறது. எந்த நோய்க் கிருமியை விடவும் தங்கமே அதிக எண்ணிக்கையில் மனிதர்களைக் கொன்றிருக்கிறது.
உலகிலே முதன்முறையாக பழங் கால எகிப்திலும், சுமேரியாவிலும் பிரபுக்களுக்காக தங்கப் பற்கள் தயாரிக்கப்பட்டன என்கிறார்கள். நாடு கண்டுபிடிக்கப் பயணித்த கொலம்பஸ், தங்கத்துக்காக பூர்வகுடி மக்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்த வரலாற்றை உலகம் ஒருபோதும் மறக்காது
1943-ல் எழுத்தாளர் பிராங்க்ளின் ஹாப்ஸ், ’உலகத்தின் உண்மையான அரசன் தங்கமே’ என தனது புத்தகத்துக்கு தலைப்பு வைத்தார். இந்தத் தலைப்பு வாசகம் இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது.
- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT