Published : 04 Apr 2015 11:47 AM
Last Updated : 04 Apr 2015 11:47 AM
நம்மைக் கடந்துபோன அண்மைக் காலப் படைப்பாளிகள் குறித்தும், சமகாலப் படைப் பாளிகள் குறித்தும் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்பிரமணியன் தன் கட்டுரைகள் வழியே உருவாக்கும் இந்த மனச் சித்திரங்கள் நம்முடைய கவனத்திலிருந்து பல அதிர்வுகளை மீட்டெடுக்கின்றன.
இந்தப் படைப்பாளிகளின் படைப்புகள் மூலமாகவும், நேரடித் தொடர்புகள் மூலமாகவும் உருவாகும் இந்த மனச் சித்திரங்கள் தனிப்பட்ட உறவு நிலைகளைக் கடந்து படைப்புச் சூழல், கலைஞர்களின் அதிகம் அறியப்படாத நுண்ணுலகம், நோய்க்கூறான வாழ்க்கை, யதார்த்தம் இவை குறித்தெல்லாம் ஆழ்ந்த உணர்வுகளை உருவாக்குகின்றன.
படைப்பாளிகளின் தனிமையும் துயரமும்
பொதுவாக தஞ்சைப் பின்புலம் என்பது, தமிழிசை மூவர், உ.வே. சாமிநாதய்யர், ஆபிரஹாம் பண்டிதர் என்று தொடங்கி ஒரு செறிவான இசை, இலக்கியப் பாரம்பரியம் கொண்டது. படைப்பாளிகளின் சந்திப்புக்கும் உரையாடலுக்குமானகளமாக விளங்கி கு.ப.ரா., மௌனி போன்றவர்கள் மூலமாக நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு உத்வேகம் அளித்த ஒரு நீண்ட தொடர்ச்சி கொண்டது.
அந்தத் தொடர்ச்சியின் இழைகளை உள்வாங்கி அந்தப் பின்புலத்தில் எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தேனுகா போன்றவர்களை ரவிசுப்பிரமணியன் அடையாளம் காண்பதும், அந்தப் பயணத்தில் தன்னை இணைத்துக்கொள்வதற்கான பொறிகளைக் கண்டறிவதும் தொகுப்பில் சிறப்பாக வெளிப்படுகின்றன. முக்கியமாக, லௌகீக இருப்பைக் கடந்த இலக்கிய ஈடுபாடு, புதிய படைப்புருவாக்கம், பல்துறை ஈடுபாடு என அவர்களது வாழ்க்கை அலைவு கொண்டதின் பல அரிய தருணங்களை இத்தொகுப்பு நினைவுகூர்கிறது.
இவ்விதமாகவே கரிச்சான் குஞ்சின் அரசியல் பங்கேற்புகள், எம்.வி.வெங்கட்ராமின் நோய் சூழ்ந்த வாழ்க்கை, தேனுகாவின் முடிவற்ற உரையாடல்கள் இவை குறித்தெல்லாம் அதிக வெளிச்சம் கிடைக்கிறது. ஆனால், வறுமை, நோய், அகால மரணம் இவை எதுவும் படைப்பின் ஓட்டத்தைத் தடுக்க முடியவில்லை. இப்படைப்பாளிகளின் தனிமையையும், துயரையும் இப்பதிவுகள் மீண்டும் மீண்டும் நினைவூட்டி ஒரு கலைப் படைப்பாளி எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை முன்வைக்கின்றன.
‘அவள் அப்படித்தான்’ போன்ற தரமான மாற்று சினிமாவை எடுத்த பிறகும் ருத்ரையா போன்ற இயக்குநர்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை, உரையாடலுக்கு யாருமற்ற தேனுகா போன்ற கலைஞர்களின் தனிமை, விநோத நோய்த் தன்மைகள் எம்.வி.வெங்கட்ராம் போன்ற படைப்பாளிகளைத் தாக்கும் கொடூரம் என சூழலின் பல யதார்த்தங்களை கவனத்துக்கு கொண்டுவரும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு, படைப்பாளிகளின் மென்மையான நுண்தளங்களையும், அவற்றின் படைப்பு வீச்சையும் அழகியல் அணுகுமுறையுடன் பதிவுசெய்கிறது.
உதாரணமாக பி.பி. ஸ்ரீனிவாஸின் வித்தியாசமான மென்குரல் உருவாக்கும் நெகிழ்ச்சி, மருதுவின் - காலத்தை வரையும் கோட்டோவியம், ஓவியர் ஜே.கே.யின் குதிரை மற்றும் பாலியல் படிமங்கள், பாலுமகேந்திரா, எஸ்.வி. சகஸ்ரநாமம் போன்ற நிகழ்த்துக் கலைஞர்களின் இலக்கிய உத்வேகங்கள், மொழியிலிருந்து மவுனத்தை உருவாக்கும் கவிஞர் அபியின் இசை ஈடுபாடு, மதுரை சோமுவின் இசைக்கேற்ற உடல் அதிர்வுகள் என இப்படைப்பாளிகளின் நுட்பமான பல பக்கங்கள்மீது இத்தொகுப்பு ஒளியூட்டுகிறது.
இசை, இலக்கியம், கவிதை இவற்றால் இப்படைப் பாளிகள் கொள்ளும் உத்வேகம் அவர்கள் இயங்கக்கூடிய துறை சார்ந்த பார்வையையும் அறிவையும் விரிவுபடுத்திச் செல்வதை ரவிசுப்பிரமணியன் முக்கியமாகக் கவனப் படுத்துகிறார். குறிப்பாக தேனுகாவின் கோயில் சார்ந்த இசை, நடனப் பரிச்சயம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை போன்றவற்றின் நுண்தளங்களுக்குள் ஆழ்ந்து பயணம் செய்வதை ரவிசுப்பிரமணியன் உடனிருந்து பார்க்கிறார். வெளி, வண்ணம், ஓசை, அசைவு குறித்த ஒரு நுண்பார்வை தேனுகாவுக்கு இவ்விதமாக சாத்தியப்பட்டதை ரவிசுப்பிரமணியன் நினைவுகூர்கிறார்.
இத்தகைய படைப்புலகப் பயணங்களுடன் இவர் மேற்கொண்ட உறவுநிலைகள் அந்தப் படைப்புப் பொறிகளை அடையாளம் காணவும் அவற்றை வசப்படுத்தக்கூடிய ஒரு மொழியை இவருக்கு உருவாக்கி இருப்பதையும் இந்த கட்டுரைகளில் நாம் காணமுடிகிறது.
அதன் மூலம் அதிகம் பேசப் படாத பல பக்கங்களை இவர் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். இன்றைய தொழில்நுட்பப் பெருக்கத்தில் கலை இலக்கியப் படைப்பாளிகள் சார்ந்த சாரமான பல விஷயங்கள், சமூகத்தின் கவனத்திலிருந்து மறைந்து போய்விடுகிற நிலையில் இதுபோன்ற பதிவுகள் உருவாக்கும் கலாச்சாரத் தொடர்புகளும் நினைவுகூரல்களும் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கின்றன. காலப்போக்கில் அப்படைப்பாளிகள் குறித்த மறுபார்வைக்கும் பரிசீலனைக்கும் பெரிதும் உதவக்கூடிய பங்களிப்பு இது.
ஆளுமைகள் தருணங்கள்
ரவி சுப்பிரமணியன்
காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.ரோடு, நாகர்கோவில் - 629 001, தொடர்புக்கு: 04652-278525.
விலை: ரூ. 100
- வெளி ரங்கராஜன்,
நாடகத் துறை ஆளுமை,
தொடர்புக்கு: velirangarajan2003@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT