Published : 23 Apr 2015 11:32 AM
Last Updated : 23 Apr 2015 11:32 AM

வீடில்லா புத்தகங்கள் 29: பூச்சி எனும் ஆயுதம்!

பண்டைக் காலங்களில் யுத்த களத்தில் எதிரிகளை விரட்ட தேனீக்களைப் பயன்படுத்துவார்கள், நீர்நிலைகளை நஞ்சூட்டிவிடுவார்கள், குற்றவாளிகளைத் தண்டிக்க கொடிய விஷம் உள்ள வண்டுகளையும் தேள்களையும் கடிக்கவிடுவார்கள், காதில் எறும்புகளை விடுவார்கள் என்பார்கள்.

கல்லையும் இரும்பையும் மட்டுமில்லை; உயிரினங்களையும் ஆயுதமாக்கியவன் மனிதன். இன்று அதன் தொடர்ச்சியைப் போல உலக நாடுகளை அச்சுறுத்தும் மிகப்பெரிய அபாயமாக உருவெடுத்துள்ளது ‘உயிரியல் யுத்தம்’!

அதாவது நுண்கிருமிகள், பூச்சிகள், வண்டுகள் போன்றவற்றைக் கொண்டு மனிதர்களை, உயிரினங்களை, தாவரங்களை அழிக்கும் அல்லது செயலிழக்க வைக்கும் தாக்குதலை ‘உயிரியல் யுத்தம்’ என்கிறார்கள்.

உயிரியல் யுத்தம் மூன்று தளங்களில் செயல்படுகிறது. ஒன்று, மோசமான நோய்களை ஏற்படுத்தும் நுண்கிருமிகளை உருவாக்குவதும், அவற்றைப் பரவ செய்வதும். இரண் டாவது, பூச்சி மற்றும் வண்டுகளைக் கொண்டு விவசாயத்தை அழிப்பது. மூன்றாவது, காற்றிலும் நீரிலும் நுண்ணுயிர்களைக் கலக்கச் செய்து நேரடியாக உயிர் ஆபத்தை உருவாக்குவது.

இந்த அபாயங்கள் குறித்தும், பூச்சி இனங்கள் மற்றும் கிருமிகள் எவ்வாறு ஆயுதமாக பயன்படுத்தபட்டன என்பதன் வரலாறு குறித்தும் விரிவாக எழுதப் பட்ட நூல் ‘சிக்ஸ் லெக்டு சோல் ஜர்ஸ்’. (Six Legged Soldiers). இதை ‘ஜெஃப்ரி ஏ லாக்வுட்’ எழுதியுள்ளார். ஆக்ஸ்போர்டு பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

பூச்சிதானே என ஏளனமாக நாம் நினைக்கும் உயிரினம்தான் இன்று உலகின் முக்கிய அச்சுறுத்தலாக, ஆயுதமாக வளர்ந்து நிற்கிறது என்பதைப் பல்வேறு பூச்சி இனங்கள் மற்றும் நுண்கிருமிகளை முன்வைத்து விளக்குகிறார் லாக்வுட்.

உலகிலே அதிக எண்ணிக்கையில் உள்ள உயிரினம் பூச்சிகளே! நன்மை செய்யும் பூச்சிகள், கெடுதல் செய்யும் பூச்சிகள் என இரண்டுவிதமான பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. கெடுதல் செய்யும் பூச்சி இனங்களை, கிருமிகளை தங்களின் சுயலாபங்களுக்காக எப்படி வணிக நிறுவனங்களும், ராணுவமும், தீவிரவாத இயக்கங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதைப் பற்றி வாசிக்கும்போது அதிர்ச்சியாகவே உள்ளது.

இன்று அணுகுண்டு வீசி அழிப்பதை விடவும் அதிகமான நாசத்தை நுண்கிருமிகளால் உருவாக்கிவிட முடியும். அமெரிக்கா, சீனா, கொரியா உள்ளிட்ட அநேக நாடுகள் உயிரியல் யுத்தத்துக்கான பரிசோதனைகள், மற்றும் தயாரிப்புக்காக ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக் கின்றன.

1972-ல் நடைபெற்ற உயிரியல் மற்றும் விஷத்தன்மைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, இத்தகைய ஆயுதங்களைத் தயாரிப்பதோ, பயன் படுத்துவதோ, தடை செய்யப்பட்டிருக் கிறது. ஆயினும் இந்தக் கிருமி யுத்தம் திரைமறைவில் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ நாவலில் வெட்டுக் கிளிகள் கூட்டமாக படை யெடுத்து வந்து, விளைச்சலை அழிப் பதாக ஒரு காட்சி விவரிக்கப்படும். பூச்சிகளின் தாக்குதலில் மக்கள் பயந்துபோகிறார்கள். பேரழிவு ஏற்படு கிறது.

இதுபோன்ற ஒரு காட்சியை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ‘பியர்ள் எஸ் பக்’ தனது ‘நல்ல நிலம்’ நாவலிலும் விவரிக்கிறார். வேறுவேறு தேசங்களில் நடைபெற்ற கதைகள் என்றபோதும் இயற்கை சீற்றம் எவ்வாறு விவசாயத்தைப் பாதித்தது என்பதை இருவரும் சிறப்பாக விவரிக்கிறார்கள்.

இது போன்றவை இயற்கையான நிகழ்வுகள். ஆனால், இன்று நடப்பது இயற்கை சீற்றமில்லை. திட்டமிட்டு பரிசோதனைக் கூடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கிருமிகள், பூச்சிகள், நுண்ணுயிர்களை இன்னொரு தேசத் தில் பரவவிட்டு, பேரிழப்பை உருவாக் கும் பயங்கரவாதமாகும்.

இரண்டாம் உலகப் போரின்போது எதிரிகளை அழிப்பதற்காக ஜப்பானிய ராணுவம் லட்சக்கணக்கான விஷப் பூச்சிகளைப் பயன்படுத்தியது. இது போலவே, கியூபாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக அங்குள்ள கரும்புத் தோட்டங்களை அழிக்க 1962-ம் ஆண்டு அமெரிக்கா புதிய வகை பூச்சிகளை கியூபாவில் பரவவிட்டது. இதன் காரணமாக கரும்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.

வியட்நாம் யுத்தத்தின்போது அமெ ரிக்கா ‘கில்லர் இன்செக்ட்ஸ்’ (killer insects) எனப்படும் விஷத்தன்மை கொண்ட வண்டுகளை வியட்நாமில் பரவசெய்து, விவசாயத்தை அழித் தொழித்தது என்கிறார்கள்.

யுத்த காலத்தில் பிரிட்டனின் உருளைக்கிழங்கு உற்பத்தியை அழிக்க, ஜெர்மனி நோய் உருவாக்கும் வண்டுகளையும் பூச்சிகளையும் விமா னத்தில் கொண்டுபோய் கொட்டி பிரிட்டனை அழிக்க முயன்றது என ஒரு குற்றசாட்டும் உள்ளது. இப்படியாக பல்வேறு சான்றுகள் நமக்குள்ளன.

இன்று தற்காப்புக்காக உயிராயுதங் களைத் தயாரித்துக் கொள்வதாகக் கூறி, அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகள் பெரும் முதலீட்டில் உயிராயுதங்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் அமெரிக்கா உருவாக்கிய ‘ஆந்த்ராக்ஸ்’.

1980-ல் இருந்து அமெரிக்க ராணுவம் தன்வசம் கையிருப்பில் வைத்திருக்கும் உயிராபத்தை விளைவிக் கும் கிருமிகளின் சேமிப்பு, அணுகுண்டை விடவும் பேராபத்து தரக்கூடியவை. ஒருவேளை இந்தக் கிருமி கள் எல்லாம் பிரயோகம் செய்யப்பட்டால் ஒட்டு மொத்த உலகை சில நாட்களில் அழித்துவிட முடியும் என்கிறார்கள்.

திரைப்படங்களிலும் துப்பறியும் நாவல்களிலும் மட் டுமே பயங்கரவாதிகள் கொடிய வைரஸைப் பரவவிட்டு ஒரு தேசத்தை அழிக்கப்போகிறார்கள் என்பதை கண்டிருக்கிறோம். ஆனால், இவை பயங்கரவாதிகள் செய்கிற வேலை மட்டுமில்லை; ஒரு நாடு இன்னொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கவும், இயற்கை வளங்களை நாசம் செய்யவும், புதிய மருந்துகளை விற்பனை செய்யவும் உயிரியல் யுத்தத்தினை மேற்கொள்கிறது.

இவை ராணுவ செயல்பாட்டின் பகுதியாகவே அறியப்படுகிறது என் கிறார் லாக்வுட்.

சமீபத்தில் வெளியான ‘இண்டர்வியூ’ எனப்படும் ஹாலிவுட் திரைப்படத்தில் வடகொரிய அதிபரைக் கொல்வதற்கு அவரோடு கைகுலுக்கினால்போதும், கையில் மறைத்து வைக்கப்பட்ட நுண் கிருமி உள்ள ஊசி அவரது உடலில் நுழைந்து உயிரைப் பறித்துவிடும் என அமெரிக்கா திட்டமிடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சி உயிராயுதப் போர் முறையின் சாட்சிய மாகும்.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூச்சிகளைக் கொண்டு பேரழிவை ஏற்படுத்துகிற யுத்தமுறை எகிப்தில் நடைமுறையில் இருந்துள்ளது. இரும்புக் குழாய்களில் வண்டுகளையும் தேனீக்களையும் அடைத்து வைத்து, அவற்றை உஷ்ணமேற்றி பீரங்கியால் சுடுவது போல வீசி எறிந்து, அழிவை உண்டாக்கும் முறை நைஜீரியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘மாயன்’ இனத்தவரும் விஷ எறும்புகளையும் தேனீக்களையும் யுத்தக் களத்தில் பயன்படுத்தி எதிரிகளை அழித்து உள்ளார்கள் என்கிறது வரலாறு.

சமீபத்தில் நடைபெற்ற ஈராக் யுத்தத்தின்போது அமெரிக்க விமானப் படை, பாலைவனத்தில் காணப்படும் விஷத் தேள்களை சேகரித்து, பாக்தாத்தில் கொண்டு போய் கொட்டி உயிர் சேதத்தினை உருவாக்கியது. நீர்நிலைகளில் நுண்கிருமிகளைக் கலந்து உயிர் ஆபத்தை உருவாக்கியது.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ராணுவத்தின் ‘யூனிட் 731’ பிரிவு, பிடிபட்ட சீனக் கைதிகளின் உடலில் கிருமிகளைப் பிரயோகம் செய்து அவர்களைப் பரிசோதனை எலிகளைப் போல பயன்படுத்தியது. இதன் மூலம் கிருமிகளை ‘யூஜி பாம்’ எனப்படும் குண்டுகள் மூலம் சீனாவில் பரவ செய்து, இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்களை ஜப்பான் கொன்று குவித்ததை சாட்சியத்துடன் லாக்வுட் விவரிக்கிறார்.

நாளை உங்கள் வீட்டில் பறக்கும் ஒரு ஈ, சாதாரணமான ஓர் உயிரினமாக இருக்காது. அது ஓர் அழிவு ஆயுதமாக இருக்கக் கூடும்! ஆகவே, உயிராயுதங்கள் குறித்த விழிப்புணர்வு உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன், ‘உயிரியல் யுத்தம் ஒருபோதும் கூடவே கூடாது’ என நாம் அனைவரும் உரத்த குரல் கொடுக்கவும் வேண்டும்.

- இன்னும் வாசிப்போம்

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x