Published : 19 Apr 2015 11:45 AM
Last Updated : 19 Apr 2015 11:45 AM
மூன்று வயதுக்கு மேல் மன வளர்ச்சியை மறுத்து தகரக் கொட்டுக்களை அடிப்பதாலும் வீறிட்ட கிறீச்சிடல்களாலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ‘டின் ட்ரம்’ நாவலின் கதாபாத்திரம் ஓஸ்காரை உலக இலக்கிய வாசகர் யார்தான் மறக்க முடியும்? ஓஸ்காரின் வீறிட்ட கிறீச்சிடல்களில் கண்ணாடிகள் உடையும். ஓஸ்கார், நாஜி ஜெர்மனி நிகழ்த்திய இனப் படுகொலையை நினைத்து உழலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமூகப் பிரக்ஞையின் அடையாளம்; குற்றவுணர்வின் உருவகம். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜெர்மானிய சமூகத்தின் பெருந்துயரத்துக்கான வெளிப்பாட்டை, ‘டின் டிரம்’ என்ற அபாரமான நாவலைக் கலை வடிவமாக வழங்கியவர் எழுத்தாளர் குந்தர் கிராஸ்.
மனசாட்சியின் குரல்
1959-ம் ஆண்டு வெளிவந்த ‘டின் டிரம்’ நாவல் போருக்குப் பிந்தைய சமூகத்தின் அறம்சார் கேள்விகளை நுட்பமாக எழுப்பியதால் ஜெர்மனி முழுக்கப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘டின் டிரம்’ நாவலின் ஆசிரியர் குந்தர் கிராஸ் வெகு விரைவிலேயே ஜெர்மானிய சமூகத்தின் மனசாட்சியின் குரலாக அறியப்பட்டார். நாடகாசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், சிற்பி, நாவலாசிரியர் எனப் பல கலைவடிவங்களிலும் முத்திரை பதித்த குந்தர் கிராஸ், வெகுஜன அரசியல் தளத்திலும் அறிவுஜீவியாக இயங்கிவந்தார். சர்வதேச அரசியலில் ஃபிடல் கேஸ்ட்ரோவின் கூபாவையும் நிகாரகுவா நாட்டின் இடதுசாரி சாண்டினிஸ்டா அரசாங்கத்தையும் ஆதரித்து எழுதியும் பேசியும்வந்தார்.
ஆனால் சோவியத் ஒன்றிய கம்யூனிச நாடுகளில் நிலவிய அடக்குமுறையைக் கடுமையாக எதிர்த்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவின் ஏவுகணைத் தளம் ஜெர்மனியில் அமைவதையும் எதிர்த்துப் பேசினார். நாஜிக் கொடுமைகளையும் யூத இனப் படுகொலையையும் கடுமையாக விமர்சித்து தொடர்ந்து இனப் படுகொலைக்கான குற்றவுணர்வை வெகுஜனதளத்தில் நினைவுபடுத்திக்கொண்டேயிருந்த குந்தர் கிராஸ் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைவதை 1989-ல் எதிர்த்தார்.
மறக்கப்பட்ட வரலாற்றைப் பதிவுசெய்தவர்
குந்தர் கிராஸின் இலக்கியமும் இடதுசாரி அரசியலும் ஒன்றாக இணைந்ததாகவே உலகம் அவரைக் கொண்டாடியது.
1999-ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு குந்தர் கிராஸுக்கு வழங்கப்பட்டபோது அவருடைய எழுத்து மறக்கப்பட்ட வரலாற்றைக் கறுப்புக் கதைகளால் படம்பிடித்துக்காட்டும் வல்லமையுடையது எனப் புகழப்பட்டது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் உருவாக்கப்பட்டு உலக இலக்கியங்களுக்குப் பரவிய மாந்திரீக யதார்த்த எழுத்தின் ஐரோப்பிய வடிவம் என்றும் குந்தர் கிராஸின் எழுத்து அறியப்பட்டது. ஆனால் உண்மையில் குந்தர் கிராஸின் எழுத்து பல வடிவங்களைக் கொண்டிருந்தது. அவரது நாவலின் கதைசொல்லிகள் பொய்யர்களாக இருந்தார்கள். அவர்கள் உண்மையையும்,பொய்யையும், ஆவணங்களையும், தேவதைக் கதைகளையும் கலந்துகட்டிக் கதை சொன்னார்கள். ‘டின் டிரம்’மைத் தொடர்ந்து ‘Cat and Mouse’ (1961), ‘Dog Years’ (1963) ஆகிய நாவல்களும் பெரும் வெற்றியைப் பெற்றன. ‘டின் டிரம்’ நாவலைப் போலவே குந்தர் கிராஸின் இதர நாவல்களிலும் மிருகங்களைக் கொண்ட காட்சிப் படிமங்கள் இருக்கின்றன. விலாங்கு மீன்கள் கூட்டத்தினிடையே மிதந்து செல்லும் வெட்டப்பட்ட குதிரைத்தலை ‘டின் டிரம்’ நாவலில் வரும் படிமங்களில் ஒன்று.
ரகசியத்தை வெளிப்படுத்திய குந்தர் கிராஸ்
இவ்வாறாக ஜெர்மனியின் மனசாட்சியாகப் புகழ்பெற்றிருந்த குந்தர் கிராஸ் 2006 -ம் ஆண்டில் தன்னுடைய 78-வது வயதில் தனது சுயசரிதை வெளியாவதற்குச் சில நாட்களுக்கு முன்பு தானும் நாஜிக்களின் உயர் கொலைப்படையான வாஃபென் எஸ்எஸ்ஸின் உறுப்பினர் என்பதைச் சொல்லி ஜெர்மனியைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அந்த நாள் வரை குந்தர் கிராஸ் தான் நாஜிக்களின் ஆதரவு இயக்கத்தில் வலிந்து சேர்க்கப்பட்ட அப்பாவி மட்டுமே என்று சொல்லிவந்தார். ஆனால் படுகொலைகளில் நேரடியாக ஈடுபட்ட வாஃபென் எஸ்எஸ்ஸின் உறுப்பினர் என்று சொல்லவில்லை.
அறுபது ஆண்டுகளாக ஜெர்மனியின் மனசாட்சியென்று தன்னை உயர்த்திக்கொண்ட எழுத்தாளர் எப்படி அந்தக் குற்றங்களில் நேரடியாகப் பங்குபெற்றவராக இருக்க முடியும் என்று உலகளாவிய அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தன. Peeling the Onion என்று தலைப்பிடப்பட்ட தன் சுயசரிதையில் தான் ஒரு துப்பாக்கிக் குண்டைக்கூடச் சுடவில்லை, ஹிட்லரின் இன அழிப்புக் கொள்கைகள் பின்னரே தெரிய வந்தன என்று குந்தர் கிராஸ் எழுதினார். இருந்தாலும், அவர் ஏன் அத்தனை வருடங்கள் அந்த உண்மையை மறைத்தார் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.
குந்தர் கிராஸின் நாவல்களில் வரும் நம்பகத்தன்மையற்ற கதைசொல்லிகளைப் போல அவரும் ஒரு பொய்யர் என்று எழுத ஆரம்பித்தார்கள். குந்தர் கிராஸ் பிறந்த போலந்து நாட்டின் க்டான்ஸ்க் நகரக் கௌவரக் குடியுரிமையை அவரிடமிருந்து பறிக்க வேண்டும் அல்லது அவரே திருப்பித் தந்துவிட வேண்டும் என்று அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த லெஃக் வலேசா கிராஸை நேரில் சந்தித்துச் சொன்னார். வலேசா கிராஸைச் சந்தித்தபோது வலேசா கிராஸுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார்.
நோபல் பரிசைத் திரும்பப்பெறும் வழக்கமில்லை என்று ஸ்வீடிஷ் அகாடமி மறுத்துவிட்டாலும் குந்தர் கிராஸுக்குக் கொடுத்த நோபல் பரிசைத் திரும்ப வாங்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. குந்தர் கிராஸின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் மைக்கேல் உர்க்ஸ்கூட கிராஸின் பாவசங்கீர்த்தன வெளிப்பாட்டால் அதிர்ச்சி அடைந்தார். குந்தர் கிராஸ் இடதுசாரி அரசியல் நிலைப்பாடுகளையே எடுத்து வந்திருப்பவர். ஆதலால் கிராஸின் பாவசங்கீர்த்தனத்தை வைத்து அத்தனை வலதுசாரிகளும் அவரை வசைபாடினர்.
தனது கடைசி வருடங்களில் லுபெக் நகரத்தில் வசித்துவந்த குந்தர் கிராஸ் உரைநடையையும் கவிதையையும் இணைக்கும் வகையில் நாவல் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல் முடியும் முன்னரே அவர் உயிர் பிரிந்துவிட்டது. குந்தர் கிராஸின் மனசாட்சியின் குரல் பிசிறு தட்டியதா, ‘டின் டிரம்’ நாவலில் பைத்தியக்கார விடுதியிலிருந்து கதைசொல்லும் ஓஸ்கார் கிராஸின் பிரதிமைதானா, குற்ற உணர்வுக்கும் கதைசொல்லலுக்கும் உள்ள உறவு என்ன ஆகிய கேள்விகளுக்குக் காலம்தான் பதில்சொல்ல வேண்டும். ஆனால் குந்தர் கிராஸ் வாழ்க்கையை மீறி ‘டின் டிரம்’ என்ற கலைப் படைப்பு காலத்தை விஞ்சிய பயங்கர அழகுடன் மிளிர்ந்துகொண்டுதான் இருக்கும்; இன அழிவுகளை உண்டாக்கிய சமூகங்களின் பிரக்ஞையை, அந்த அழகு தொடர்ந்து கீறிக்கொண்டே இருக்கும்.
கட்டுரையாளர், நாட்டுப்புறவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர். தொடர்புக்கு: mdmuthukumaraswamy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT