Published : 22 Mar 2015 03:25 PM
Last Updated : 22 Mar 2015 03:25 PM
எழுத்து நடையில் வாசிக்கப்பட்ட நாடகங்களை நிகழ்வாகக் காணும் அனுபவம் என்பது வேறு. எழுத்தில் வாசிக்காமலேயே நேரடி நிகழ்வாகக் காண்பதன் மூலம் ஒரு நாடகத்தைக் கண்டடைவது என்பது வேறு.
சென்னைக் கலைக் குழு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் இயங்கிவரும் முக்கியமான அரங்கக் குழு. தமிழகத்தில் வீதி அரங்குகளை ஒரு அரசியல் செயல்பாடாக உருவாக்கியதில், சென்னைக் கலைக் குழுவின் நாடகங்களுக்கும் பயிற்சிப் பட்டறைகளுக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. அதன் முப்பதாவது ஆண்டையொட்டி அண்மையில் அரங்கேற்றிய புதிய நாடகம் கூக்குரல். சென்னைக் கலைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரளயன் நாடகத்தை எழுதி, நெறியாளுகையும் செய்துள்ளார்.
முதியோர் பிரச்சினையைக் குறிப்புணர்த்தும் வகையில் பின்னணிப் பாடலுடன் ஆண்-பெண் முதியவர்களின் பிம்பங்கள் இசைவுடன் அசைகின்றனர். ஆழ்ந்த அமைதியை அடுத்து, பிரமாணத்தில் கூறப்படும் நான்கு ஆசிரமங் களில் கடைசி ஆசிரமம் ஆடவரின் இறுதிக் காலத்தை மட்டும் குறிப்பிடுவதன் மீது எதிர்வினை ஆற்றப்படுகிறது. குருக்ஷேத்திர யுத்தத்தைத் தொடர்ந்து திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி, விதுரன், சஞ்சயன் ஆகியோரின் வானப்பிரஸ்தம் காட்சிகளாக இடம்பெறுகிறது.
அதிரும் நிகழ்காலம்
அடுத்து, இன்றைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களிலிருந்து முதியோர் வெளியேற்றப்படும், வெளியேறும் சூழ்நிலைகள் முதியோர் இல்லங்களின் பின்புலத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இக்காட்சிகள் ஒரு ஆராய்ச்சி மாணவியிடம் தங்கள் கதைகளை நேரடியாகக் கூறுவதாக அமைகிறது.
எப்போதும் வெடிக்கும் நிலையில் கனிந்து முற்றி உணர்ச்சியின் விளிம்பில் வாழும் பல முதியோர்களின் கண்ணீர்க் கதைகள், மிகையுணர்ச்சியில் வெடித்துக் கிளம்பினாலும் முடிவில் தாளமுடியாத அமைதிதான் எஞ்சுகிறது. அங்கும், எல்லாவற்றையும் மூன்றாம் நபர் பார்வையில் காணும் ஒரு முதியவர், தானாகவே வீட்டிலிருந்து வெளியேறி முதியோர் இல்லத்தில் அமைதி வாழ்க்கையைக் கழிப்பதைப் பற்றி கூறுகிறார்.
அடுத்து, விடுதலைப் போராட்ட வீரரும், இசை நாடகக் கலைஞருமான கலைமாமணி விருதுபெற்ற மூத்த கலைஞரின் வாழ்வியல் துயரம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரை இருத்தி விளம்பரமும் பரபரப்பும் பெறும் முயற்சியாக அத்தொலைக்காட்சி நிருபரும், கேமராமேனும் தேடி வருகிறார்கள். கூத்து, நாடகம் என பழம்பெருமை பேசுவதை, அரசியல் பிரமுகரான அவரது மகனும் மருமகளும் எதிர்த்து அவரை அடித்து உதைப்பதையும் பகிர்ந்துகொள்கிறார்.
சமகால அரசியல் பகடி
இக்காட்சியினூடாக, நாகரிகம் என்ற பெயரிலான அறியாமையையும், தொலைக்காட்சி ஊடகங்களின் வணிகத் தந்திரங்களையும், தற்கால அரசியலையும் கூடுதலாக நையாண்டி செய்கிறார். பஞ்சாயத்துத் தலைவி பதவியையும் முதல்வர் பதவியையும் ஒப்பிட்டுப் பேசும் நையாண்டி வசனம் அரங்கில் விசிலைக் கிளப்புகிறது. தொடர்ந்து, ஒரு பிராமணக் குடும்பத்தில் முதியோர் எவ்வாறு அணுகப்படுகிறார் என்ற காட்சி. அவரவர் அன்றாடங்களிலிருந்து ஒரு கணமும் விலகுவதில்லை எனினும் அவரவர் சுதந்திரமும் எவ்வாறு ‘பாதுகாப்பாக’ப் பேணப்படுகிறது என்பதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தினாலும் அதன் மறுபக்கத்தையும் நக்கல், நையாண்டியுடன் அம்பலப்படுத்துகிறது. காலமெல்லாம் குடும்பத்துக்காக உழைத்த அர்ப்பணிப்புக் குணம் கொண்ட நடுத்தர வர்க்க மனிதர்களின் முதுமை மற்றும் தனிமையின் கொடூரத்தை உணரவைக்கிறார் பிரளயன்.
தந்தை கேட்கும் கேள்வி
நினைவுகள் அறுந்து விழும் நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்க்கையைத் தள்ளும் முதியவர், குழந்தை வளர்ப்பில் தான் காட்டிய பொறுமை, தனது மகனிடம் ஏன் இல்லாமல் போனது என்ற வலி தரும் கேள்வியை தன் மகனிடமே எழுப்புகிறார். இது குழந்தைமை துள்ளும் குதூகுலம் நிறைந்த காட்சி.
முதுமையின் ஆழ்ந்த அமைதியில் தொடங்கி, உணர்ச்சிக் கொந்தளிப்புகளினூ டாக, முதிர்ச்சி நிலை அடைந்து குழந்தைமையின் குதூகுலத்துக்கு முதியவர்கள் வந்தடைகிறார்கள். நிறைவாக, புராண காலம் முதல் சமகாலம்வரை முதுமையின் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எதிலும் பெண்களுக்கான இடம் வெற்றிடமே. மதுரா நகரில் பெண் விதவையின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு யமுனையில் விடப்பட்ட நிகழ்வு நினைவுகூரப்படுகிறது.
புறத்தில் கனிந்த கனியாகக் காணப் பட்டாலும் அகத்தில் அடிபட்டு, அடிபட்டு அழுகிக்கொண்டிருக்கும் மனித மாண்பு களை விவாதப் பொருளாக்குவதில் இந்த நாடகம் வெற்றி அடைந்ததுள்ளது.
ஒரு கதையாக இல்லாமல் ஒரு பிரச்சினையின் பக்கங்களை விவாதத்துக்குட்படுத்தும் வகையில் பிரதியைத் தயாரிப்பது பிரளயனுக்குக் கை வந்த கலை. அதன் உச்சமாக இப் பிரதியைக் கொள்ளலாம்.
நெறியாளராக, அதிக எண்ணிக்கை யிலான நடிகர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகப் பங்களிப்பு, வடிவ மாற்றங்கள், காட்சி மாற்றங்களின்போது அதிக மாறுபாடுகள், வண்ணங்கள், மேடைப்பொருள்களின் அர்த்த வேறுபாடுகள் என அரங்க நிகழ்வை முழுமைப்படுத்தியுள்ளார். எந்தவிதச் சிக்கலும் நெருடலும் இல்லாமல் படைப்பு அமைதியோடு வழங்கியதுடன் துல்லியமாக 120-வது நிமிடத்தில் நாடகம் நிறைவடைந்தது நவீன நாடகத் தயாரிப்பில் மிகவும் அபூர்வம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT