Last Updated : 22 Mar, 2015 03:28 PM

 

Published : 22 Mar 2015 03:28 PM
Last Updated : 22 Mar 2015 03:28 PM

நன்றி, குட்பை

மார்ச் 22 - யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள்

யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படும் உப்பலுரி கோபால கிருஷ்ணமூர்த்தி, 1918-ல் ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டணத்தில் பிறந்தவர். ஞானமடைவது என்ற நிலையைக் கேள்வி கேட்டவர். எண்ணம் என்பதின் அடிப்படையையே மறுத்தவர் அவர். அறிவு மற்றும் சிந்தனை சார்ந்த அத்தனை கருத்தியல்களையும் புறக்கணித்தவர் அவர். இந்த உலகத்தில் புரிந்துகொள்ள ஒன்றும் இல்லை என்றார். அவரை நிறைய பேர் ஞானமடைந்தவர் என்று கருதினாலும், அவர் தனது நிலையை இயற்கையான விலங்கு இயல்பில் உள்ள நிலை என்று சொன்னவர். அவருடன் நெருங்கிப் பழகிய பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட்டின் குறிப்பு இங்கே வெளியிடப்படுகிறது…

“இந்த ஆசிரியர் தினத்தில் மனித குலத்திற்கு உங்களுடைய செய்தி என்ன யு.ஜி?” என்று வெளிநாட்டிலிருந்த யு.ஜியிடம் நான் தொலைபேசியில் உரத்த குரலில் கேட்டேன். என் வாழ்க்கையின் பெரும்பாலான முக்கியப் பாடங்களை நான் கற்றுக்கொண்ட அந்த மனிதரிடமிருந்து ஒரு எதிரிடையான பதிலைப் பெறுவதற்கு என்னை நான் தயார் செய்துகொண்டிருந்தேன். சிறிது நேரம் மவுனம் நீடித்தது. நியூயார்க்கில் இரவு வெகு நேரமாகிவிட்ட அந்த சமயத்தில் நான் அவரைப் படுக்கையிலிருந்து எழுப்பியிருக்கிறேன்.

“எல்லா ஆசிரியர்களும் அழிக்கப்பட்டாக வேண்டும்” என்று முழங்கினார் அவர். “உங்களுக்குள் நீங்கள் காணும் எல்லா விதமான குழப்பங்களுக்கும் அவர்கள்தான் காரணம். நான் ஒரு போதகன் அல்ல. நான் என்றுமே ஒரு போதகனாக இருந்ததில்லை. இந்த உலகத்தை அவர்கள் எப்படிப்பட்ட மோசமான நிலையில் விட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?”

“ஆமாம் யு.ஜி.” என்று நான் மெதுவாக முனகினேன்.

“நன்றி, குட்பை” என்று சிரித்துவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.

அவர் என்னிடம் சொன்ன அந்த விஷயம் எனக்கு எப்படிப்பட்ட ஒரு மோசமான பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பது அவருக்கு மிகவும் நன்றாகத் தெரிந்திருக்கும். நான் எப்போதுமே என் மனத்தில் உன்னதமான ஓர் ஆசானாக உருவாக்கி வைத்திருக்கும் மனிதர், இவரேதான். நான் அவரிடம் கொண்டிருந்த பயபக்தியைப் போக்கிய மனிதர் இவர். இந்த மனிதர் யார்? எப்படிப்பட்டவர் இவர்? என்று நான் வியந்திருக்கிறேன். 20 வருடங்களாக எனக்கு அவரைத் தெரிந்திருந்தாலும் இன்னமும் அவரைப் பற்றி விவரிப்பதற்கு நான் சிரமப்படுகிறேன்.

எனக்கு நினைவிருக்கிறது. ஒரு நண்பர், உண்மையில் அவர்தான் என்னை யு.ஜி.க்கு அறிமுகம் செய்து வைத்தவர். “யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் யார்?” என்ற இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாத விரக்தியில் இதே கேள்வியை ஒரு சீனரான ஐ-சிங் என்பவரிடம் கேட்டபோது, அந்த நண்பருக்குக் கிடைத்த பதில் இதுதான்:

“அவர் ஒரு குரு அல்லர்; ஒரு பாதிரியார் அல்லர்; ஒரு ரட்சகர் அல்லர்; நிச்சயமாக அவர் போதகர் கிடையாது. உங்களை ஞானமடைய வைப்பதில் அவருக்கு எந்த விதமான ஆர்வமும் கிடையாது. உண்மையில் அவர் எதையும் செய்ய நினைப்பதில்லை. எந்த விதமான குறிக்கோளும் இல்லாத ஆர்வப் பெருக்குடன் அவர் சுடர்விடுகிறார். அவரில்லாமல் நீங்கள் எப்படிப் பறிகொடுத்தவர் போல ஆகிவிடுகிறீர்களோ, அதைப் போலவே அவரும் நீங்கள் இல்லாமல் பறிகொடுத்தவராகி விடுகிறார். அவருடைய சுடர் ஒளியை நீங்கள் பிரதிபிலிக்காவிட்டால் அது அணைந்துவிடுகிறது. அவருடைய சுடரொளி இல்லாமல் உங்களுடைய வாழ்க்கை இருண்டு போய்விடுகிறது”

மேலும், உங்களை ராட்டினத்தில் ஏற்றிவிட்டு, யு.ஜி. சுற்றும்போது நீங்கள் கிறுகிறுத்துப் போய் ‘கடவுளே!’ என்று முனகுகிறீர்கள். உடனே அவர், இந்த ஆளை இங்கு கொண்டுவந்து விட்டது யார்…அவருக்கு இங்கே என்ன வேலை?” என்று கத்துவார். கடவுளை, போதனையை, ஆன்மிக மீட்பை, நம்பிக்கையை- இது எதையுமே யு.ஜி. உங்களுக்கு வழங்குவதில்லை. மாறாக இதுவரையில் நீங்கள் எதற்கு ஆதரவாக இருந்தீர்களோ அவற்றையெல்லாம் தகர்த்துவிடுகிறார்.

“ஒரு கொசுவைவிட, ஒரு வயல் எலியைவிட எந்த விதத்திலும் தான் மேலான ஒன்றல்ல என்ற அப்பட்டமான உண்மையை இந்த மனித குலம் ஒப்புக்கொள்ளாவிட்டால் அது அழிந்துபோய்விடும்” என்று ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் சொன்ன விஷயத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது.

(நன்றி: தனித்து நிற்கும் துணிவு, யு.ஜி. கிருஷ்ணமூர்த்தியுடன் நிகழ்ந்த உரையாடல்கள், கண்ணதாசன் பதிப்பகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x