Published : 14 Mar 2015 10:49 AM
Last Updated : 14 Mar 2015 10:49 AM
இந்தியாவின் பண்டைய மதங்களில் ஒன்றான சமணம் ஒரு காலத்தில் தமிழகத்தில் மேலோங்கி இருந்தது. கல்வி, மருத்துவம், சிற்ப-ஓவியக் கலைகளில் தமிழ்ச் சமூகம் மேம்பட சமண மதம் முக்கிய பங்களித்திருக்கிறது. விரதங்கள், தீபாவளி, சரஸ்வதி பூஜை போன்றவற்றிலும் சமண மதக் கூறுகளைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் மலைகள், குன்றுகள், குகைகள் இருக்கும் இடங்களிலெல்லாம் சமண மத அடையாளங்கள், சின்னங்கள், சிலைகள் பரவலாக இருக்கின்றன. வெகு மக்கள் தளத்தில் சமணப் பங்களிப்பு போற்றப்படாதது போலவே, சமண அடை யாளங்களும் பெருமளவு புறக்கணிக்கப் பட்டே இருக்கின்றன.
இந்தப் பின்னணியில் சமண மதம் தழைத்தோங்கியிருந்த மதுரைப் பகுதியை மையமாக வைத்து 'மதுரையில் சமணம்' என்ற நூலை எழுதியிருக்கிறார் முனைவர் சொ. சாந்த லிங்கம். மதுரை சமண மதத் தலங்கள் பற்றி புதியவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய முறையில் இந்த நூல் விளக்குகிறது. அதற்கு நூலாசிரியர், தொல்லியல் துறை அலுவலராக மதுரையில் 18 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவமும் தனிப் பட்ட ஆர்வமும் கைகொடுத்துள்ளன.
தமிழகத்தில் உள்ள கற்படுக்கைகள், குகைப் பள்ளிகள் அனைத்தும் சமண மதத்துக்கே உரியவை என்ற வாதத்தை ஆதாரங்களுடன் ஆசிரியர் முன்வைத்துள்ளார். இவைதான் சாதாரண மக்களுக்கும் கல்வியளிக்கக் காரணமாக இருந்த இடங்கள் என்று குறிப்பிடுகிறார். இதேபோன்று பெரு மளவு சமணச் சிற்பங்களைப் பெருமதங்கள் சுவீகரித்துக்கொண்டதாக ஆசிரியர் கூறுகிறார்.
அகிம்சையை போதித்த சமண மதத்துக்கு எதிராக வெவ்வேறு வகைகளில் வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டுவந்திருக்கின்றன. நவீன காலத்தில் சமண மதச் சின்னங்கள் கிரானைட் குவாரிகளுக்காக அழிக்கப்பட்டுவருகின்றன. எஞ்சியிருக்கும் நினைவுச்சின்னங்களை அறிந்துகொள்ளவும், அழிவைத் தடுத்து நிறுத்தவும் அவற்றின் அருமையும் அவசியமும் பரவலாக விளக்கப்பட வேண்டும். அதற்கு இது போன்ற நூல்கள் அத்தியாவசியம்.
மதுரையில் சமணம்
முனைவர் சொ. சாந்தலிங்கம்
கருத்து = பட்டறை
2, முதல் தளம், மிதேசு வளாகம்
நான்காவது நிறுத்தம், திருநகர்
மதுரை-6
தொடர்புக்கு: 9842265884
விலை: ரூ.100
- ஆதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT