Last Updated : 21 Mar, 2015 12:32 PM

 

Published : 21 Mar 2015 12:32 PM
Last Updated : 21 Mar 2015 12:32 PM

கம்யூனிச விதையைப் பற்றிய ஆராய்ச்சி

உலகின் பல பகுதிகளில் இன்று நடைபெறும் மக்கள் போராட்டங்களில் காரல் மார்க்ஸின் கருத்துக்களும் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றுக்கு ‘அதிகார பூர்வமான’ கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமை தாங்குவதில்லை. மக்களின் உணர்வுகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளி, உலகெங்கும் பல அறிவாளிகளின் ஆய்வுப் பொருளாகி உள்ளது. கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்ஸெல்லோ முஸ்ட்டோ அவர்களில் ஒருவர். ஆரம்ப கால கம்யூனிச இயக்க ஆவணங்களை ஆராய்ந்து அவர் எழுதிய பல நூல்களில், ‘முதலாம் அகிலம்’ பற்றியது இது. ‘முதலாவது அகிலம்’ என்று அழைக்கப்பட்ட, சர்வதேசத் தொழிலாளர் சங்கம்தான் கம்யூனிச இயக்கத்தின் விதை.

மனித இனத்தின் உயிரியல் வளர்ச்சிப் போக்கைத் தெளிவுபடுத்தியவர் டார்வின். மனித இனத்தின் பொருளியல் வளர்ச்சிப் போக்கைத் தெளிவுபடுத்தி, அதன் எதிர்காலத்தைக் கணித்தவர் காரல் மார்க்ஸ். மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கை அதன் பொருளாதார உற்பத்தி முறையை வைத்து மதிப்பிடும் புதிய சிந்தனை முறையை உருவாக்குவதற்கான உலைக்களமாக ‘அகிலம்’ காரல் மார்க்ஸுக்கு இருந்தது. உணவு, உடை, உறைவிடம் எனும் அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு பெற்றதாக மனித இனத்தை மாற்றுவது என்ற லட்சியக் கனவோடு அவர் இந்தப் புதிய சிந்தனையை உருவாக்கினார்.

மூன்று அகிலங்கள்!

முதலாம் அகிலத்துக்கு (1864-76) பிறகு, இரண்டாம் அகிலம் (1889-1916) செயல்பட்டது. மூன்றாவது அகிலத்தை (1919- 43) லெனின் உருவாக்கினார். உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு கருத்துக்களுக்கு ஊற்றாக இவை இருந்துள்ளன.

150 வருடங்களுக்கு முன்பே, முதலாவது அகிலத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்புபற்றிய விவாதங்கள் நடந்திருக்கின்றன. பெரும்பான்மை, சிறுபான்மை என்றுகூடப் பார்க்காமல் பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வைத்தது, விவாதத்தின் மூலமாகவே அகிலத்தின்பால் பலரையும் கவர்ந்திழுத்தது உள்ளிட்ட பல நல்ல விஷயங்களைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர், அகிலத்தின் உறுப்பினர் எண்ணிக்கை, வர்க்க சேர்மானம் ஆகியவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறார். மார்க்ஸை எதிர்த்துச் செயல்பட்ட மிகையில் பக்கூனின் உள்ளிட்டோரின் விவாதக் கருத்துக்களையும் இதில் தொகுத்துள்ளார்.

பன்முகத்தன்மை கொண்ட கட்டமைப்பும் புரட்சிகரக் குறிக்கோள்களும் அகிலத்தின் சிறப்பியல்புகள். இன்றைய உலகச் சூழலில் அவற்றைக் கொண்ட ஒரு புதிய அகிலம் மக்களுக்குத் தேவை என்ற ஆசிரியரின் குரல் நூலில் ஒலிக்கிறது.

ஒன்றுசேர்ந்த அமைப்பு

மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர் எஸ்.வி. ராஜதுரை இந்த நூலைத் தமிழாக்கம் செய்துள்ளார். அவரும் தனது முன்னுரையில் மார்க்ஸை எதிர்த்துச் செயல்பட்ட கம்யூனிச முன்னோடிகளான மிகையில் பக்கூனின் உள்ளிட்டவர்களுக்கும் சோவியத் யூனியனில் லெனின் நினைவுச் சின்னங்களை எழுப்பிய பரந்த மனப்பான்மையை நினைவுகூர்கிறார். குறுகிய மனப்பான்மைகளைக் கைவிட்டு தலித் மக்கள், பெண்கள், சுற்றுச்சூழலியலாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், சிறுபான்மையோரின் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஒரு பரந்த ஜனநாயக மேடையை உருவாக்க வேண்டும். அதுவே, சமூக முன்னேற்றத்தை வேகப்படுத்தும் என்கிறார் எஸ்.வி. ராஜதுரை.

உலகளாவிய கண்ணோட்டமும் மனிதரின் அடிப்படைத் தேவைகள்பற்றிய விவாதமும் பெரும் பணக்கார நாடுகளின் கைத்தடியாக இருக்கிற ஐ.நா. சபையின் பிடிக்குள் இன்று இருக்கின்றன. உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனமாக (என்.ஜி.ஓ) உள்ள ஐ.நா. சபை முதலாளித்துவப் பாதுகாப்புக்கான, மக்களுக்கு எதிரான ஒரு அகிலமே. அதற்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டக்கூடிய ஆற்றல் உள்ள ஒரு உலகளாவிய அமைப்புதான் மனிதரின் அடிப்படைத் தேவைகளையும் ஆன்மிகத் தேவைகளையும் நிறைவு செய்யும். அதற்கான முன்முயற்சிகளைச் செய்யக்கூடிய இடதுசாரிச் சக்திகளோ சுயதிருப்தியாலும் குறுகிய மனப்போக்காலும் செயலற்றுக்கிடக்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நினைக்கிற சமூக உணர்வாளர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும்
மார்ஸெல்லோ முஸ்ட்டோ,
தமிழில்: எஸ்.வி. ராஜதுரை, பக்கங்கள்: 168,
விலை: ரூ. 150,
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
அம்பத்தூர், சென்னை-600098.
மின்னஞ்சல்: info@ncbh.in,
தொலைபேசி: 044-26241288



- த. நீதிராஜன்,
தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x