Published : 05 Mar 2015 10:25 AM
Last Updated : 05 Mar 2015 10:25 AM
சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசு அளித்தேன். இரண்டு மாணவிகள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார்கள். பாடி முடிந்த பிறகு, அவர்கள் கையில் இருந்த காகிதத்தைப் பார்த்தேன், ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பாடியிருக்கிறார்கள். ‘உங்களுக்குத் தமிழ் தெரியாதா..?’ எனக் கேட்டேன். பேசத் தெரியும், படிக்கத் தெரியாது என்றார்கள். இத்தனைக்கும் அவர்கள் வெளிநாட்டு மாணவிகள் இல்லை. தமிழ் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான்!
‘எத்தனை மாணவர்களுக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கிறது’ எனக் கேட்டதற்கு, விரல்விட்டு எண்ணும் அளவே கையைத் தூக்கினார்கள். ‘மற்றவர்கள் ஏன் புத்தகங்கள் படிப்பது இல்லை?’ எனக் கேட்டேன்.
‘பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிக்கக் கூடாது. புரிந்தோ, புரியாமலோ… மனப்பாடம் செய்தால் மட்டும் போதும் என ஆசிரியரும் பெற்றோரும் கூறுகிறார்கள்’ என மாணவர்கள் பதில் சொன்னார்கள்.
ஒரு மாணவன் குரலை உயர்த்தி, ‘எனக்குப் பரிசாக கிடைத்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தைக் கூட வீட்டில் படிக்க அனுமதிப்பது இல்லை. காலேஜ் போனதுக்கு அப்புறம் படித்துக் கொள்ளலாம்’ என அப்பா திட்டுகிறார் என்றான்.
‘ஏன் இந்தச் சூழல்...?’ என ஆசிரி யர்களிடம் கேட்டதற்கு, நிறைய மார்க் வாங்காவிட்டால் காலேஜ் சீட் கிடைக்காது. புத்தகம் படித்தால் மாணவர்கள் கவனம் சிதறிப் போய்விடும். கெட்டுப் போய்விடுவார்கள். பெற் றோர்கள் எங்களைத் திட்டுவார்கள் என ஒருமித்தக் குரலில் சொன்னார்கள்.
‘பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை இதை ஏற்றுக்கொள்வேன். ஆனால், ஆறு முதல் ஒன்பது வரை உள்ள மாணவர்கள் பல்வேறு துறையைச் சார்ந்த புத்தகங்கள், கதை கட்டுரைகள் படிக்கலாம்தானே? விளை யாட்டு, இசை, யோகா, ஓவியம், கராத்தே போன்ற எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கி கற்றுத் தருகிறீர்கள். ஆனால், புத்தகம் வாசிப்பதில் மட்டும் ஏன் கவனம் செலுத்துவது இல்லை’ எனக் கேட்டேன்,
‘அதற்கு எல்லாம் டைம் கிடையாது சார். நிறைய ஹோம்வொர்க் இருக் கிறது’ என்றார்கள்.
‘ஆசிரியர்களில் எத்தனை பேருக்கு படிக்கிற பழக்கம் இருக்கிறது. சமீபமாக என்ன புத்தகம் படித்தீர்கள்?’ எனக் கேட்டேன். 80 ஆசிரியர்களில் 7 பேர் மட்டுமே புத்தகம் படிக்கிறவர்களாக இருந்தார்கள். அவர்களும் ‘பணிச் சுமை காரணமாக படிக்க நேரம் கிடைக்கவில்லை’ என அலுத்துக் கொண்டார்கள். இது ஒரு பள்ளியின் பிரச்சினை மட்டுமில்லை. தமிழகம் முழுவதும் கல்விச் சூழல் இப்படிதான் இருக்கிறது.
பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிக்காதே எனப் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறும் சராசரி பெற்றோர்களை போலின்றி, கல்விக் கூடத்தில் படித்தால் மட்டும் போதாது, வெளியே போய் சுற்றியலைந்து வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக் கொள் என வழிகாட்டும் பெற்றோராக திகழ்ந்தவர் சுற்றுச்சூழல் அறிஞர் கிளாட் அல்வாரீஸ்.
இவரது பையன் ராகுல் தனது பள்ளிப் படிப்பை முடித்தவுடன், ஒரு வருஷம் அவன் விரும்பியபடி மீன் வளர்ப்பு, பாம்புப் பண்ணை, முதலை பண்ணை, இயற்கை விவசாயம்… என மாறுபட்ட அனுபவங்களை நேரடியாக பெற்று வரச் செய்திருக்கிறார். ஓர் ஆண்டு காலம் தனக்குக் கிடைத்த அனுபவங்களை, ராகுல் அல்வாரீஸ் தொகுத்து… ‘ப்ரீ ஃப்ரம் ஸ்கூல்’ (Free from School) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதை எழுதிய போது அவரது வயது 16.
கோவாவைச் சேர்ந்த கிளாட் அல்வாரீஸ் இந்தியாவின் முக்கியமான சுற்றுசூழல் அறிஞர். வளர்ச்சித் திட்டங்களின் பேரால் நடத்தப்படும் அழித்தொழிப்புகளையும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் பற்றி தொடர்ந்து எழுதி வரும் சிந்தனையாளர்.
ராகுலின் முதல் அனுபவம் அலங்கார மீன் வளர்ப்பில் தொடங்குகிறது. அப்பாவின் நண்பரும் அலங்கார மீன்கள் விற்பனை செய்பவருமான அசோக்கிடம் ராகுல் உதவியாளராக சேர்கிறார். அங்கே மீன் தொட்டிகள் அமைப்பது, அதை சுத்தப்படுத்துவது, அலங்கார மீன்களை வளர்க்கும் விதம், மீன் ரகங்கள் என யாவும் கற்றுக்கொள்கிறார்.
இதற்காக மீன்களைப் பற்றி நிறையப் படிக்கிறார். வாடிக்கையாளர்களை நேரடியாக சென்று சந்தித்து, மீன் வளர்ப்பு நுட்பங்களை அறிந்து கொள்கிறார். இதன் அடுத்த கட் டத்தில்… தானே வண்ண மீன்களை விற்பனை செய்கிறார். தனது ஆசிரியர் ஜூலியட் வீட்டுக்கு அலங்கார மீன் தொட்டி அமைத்துத் தருகிறார்.
அடுத்ததாக, இயற்கை விவசாயம் குறித்து கற்றுக்கொள்ள தனது கிராமத்துக்குப் போகிறான். விதை விதைத்தல், நடவு செய்வது போன்றவற்றை அறிந்துகொள்கிறார். காளான் வளர்ப்பது எப்படி என்பது குறித்த குறுகிய காலப் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டு, காளான் வளர்ப்பதற்கு கற்றுக்கொள்கிறார்.
அப்பாவின் உதவியோடு புனேயில் உள்ள பாம்புப் பண்ணைக்குச் சென்று, இந்தியாவில் உள்ள 238 வகை பாம்புகள் குறித்தும், அதில் எவை விஷமானவை, எவை விஷமற்றவை என்பதையும் கற்றுக்கொள்கிறார். இதனை அடுத்து சென்னையில் உள்ள தனது அப்பா வின் நண்பரும், எழுத் தாளருமான எஸ்.வி. ராஜதுரை வீட்டில் தங் கிக்கொண்டு, மண்புழு உரம் தயாரிப்பது பற்றி யும் மண்புழுக்களின் முக்கியத்துவம் பற்றியும் கற்றுக்கொள்ள நியூ காலேஜுக்குச் சென்று வருகிறார்.
ஒரு மாத காலம் சென்னையில் உள்ள முதலைப் பண்ணையில் தங்கி முதலைகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்வதுடன், இருளர்களுடன் சேர்ந்து பாம்பு பிடிக்கவும் கற்றுக்கொள்கிறார். ஒருநாள் பேருந்தில் மகாபலிபுரம் போக ஏறியபோது, போலி கண்டக்டர் ஒருவரால் ஏமாற்றப்படுகிறார். இப்படியாக ஓர் ஆண்டு முழுவதும் தான் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து பெல்காமில் நடைபெற்ற, சுற்றுச்சூழல் விழாவில் ராகுல் உரையாற்றுவதுடன் புத்தகம் நிறைவுபெறுகிறது.
15 வயது பையன் தனக்குக் கிடைத்த வாழ்வியல் அனுபவங்களை நேரடியாக, எளிமையாக, எழுதியிருப்பதே இந்த நூலின் தனித்துவம். வீட்டுக்குள்ளே பிள்ளைகளை பிரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் பழம் போல பொத்திப் பொத்தி வளர்ப்பதைவிடவும், இப்படி பல்வேறு அனுபவங்களைக் கற்று வரவும், தனியாக பயணம் செய்யவும், எதிர்பாராதப் பிரச்சினைகளை சமாளித்து நம்பிக்கையுடன் வாழ கற்றுக் கொள்ளவும் செய்ய வேண்டியதே பெற்றோர்களின் உண்மையான கடமை.
ராகுல் தனது பள்ளிப் பாடங்களில் இருந்து கற்றுக்கொண்டதை விட அதிகமாக வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறான். அதற்கு அத்தாட்சியே இந்தப் புத்தகம்! இரண்டு விதங்களில் இந்தப் புத்தகம் முக்கியமானது, ஒன்று, மாணவர்கள் வெறும் மனப்பாடக் கல்வியைத் தாண்டி வெளியே நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான நேரடி ஆவணம் இது.
இரண்டாவது, தனியே பயணம் செய் யவும், நண்பர்கள், உறவினர்களுடன் தங்கிப் பழகி புதியன கற்றுக்கொள்ள பெற்றோர்கள் ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்குத் தூண்டுகோலாகவும் உள்ளது. ராகுல் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்களுக்கு பரீட்சைகள் கிடையாது. மதிப்பெண்களும் கிடையாது. ஆனால், இந்த ஒரு வருஷம் அவர் கற்றுக் கொண்டது அவரது ஆளுமையை மாற்றியமைத்திருக்கிறது. இயற்கை யைப் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் வைத்திருக்கிறது. கூடவே ராகுலை ஓர் எழுத்தாளனாகவும் உருவாக்கி இருக் கிறது. பொறுப்பான பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தக இது.
- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT