Published : 12 Mar 2015 11:42 AM
Last Updated : 12 Mar 2015 11:42 AM

வீடில்லா புத்தகங்கள் 25: வேளாண்மை ஆவணம்!

‘‘விவசாயம் குறித்து தமிழில் எழுதப்பட்ட முக்கியமான புத் தகம் எது?’’ என ஓர் அமெரிக்க ஆய்வாளர் என்னிடம் கேட்டார். அவர் சமூகவியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகத் தமிழகம் வந்தவர்.

உடனடியாக எந்தப் புத்தகத்தைச் சொல்வது எனத் தெரியவில்லை.

‘‘ஓர் ஆண்டில் விவசாயம் சார்ந்து எத்தனைப் புத்தகங்கள் வெளியாகின் றன? யாராவது ஒரு விவசாயி, தனது விவசாய அனுபவத்தை முழுமையாக எழுதியிருக்கிறாரா?’’ என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

‘‘இயற்கை வேளாண்மையைப் பற்றி தமிழில் சில புத்தகங்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, நம்மாழ்வார் எழுதிய ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’, ‘மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்’, ‘தாய் மண்ணே வணக்கம்’, ‘இனி விதைகளே போராயுதம்’ போன் றவை;

பாமயன் எழுதியுள்ள ‘வேளாண் இறையாண்மை’, பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள ‘மண்ணுக்கு உயி ருண்டு’ ஆகியவை முக்கியமான புத்தகங்கள். நவீன வேளாண்மை முறைகளைப் பற்றியும் சில நூல்கள் வெளியாகியுள்ளன’’ என்றேன்

‘‘தமிழர்களின் பராம்பரிய விவசாய முறைகள், நீர் பங்கீடு, உணவுப் பண்பாடு பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள ஏதாவது ஒரு புத்தகம் இருந்தால் சொல்லுங்கள்’’ எனக் கேட்டார்.

‘‘அப்படி ஒரு நூலை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை எழுதப் பட்டதாகத் தெரியவில்லை…’’ என்றேன்.

‘‘இந்திய விவசாயியின் மரபு அறிவு ஏன் தொகுக்கப்படவில்லை? இந்திய விவசாயம் நவீனப்படுத்தப்படாமல் போனதற்குக் காரணம், விவசாயிகள் படிப்பறிவு அற்றவர்களாக இருப்பது தானா..?’’ எனவும் அவர் கேட்டார்.

‘‘விவசாயி என்றவுடன் படிக்காதவர் என்ற பிம்பம் நமக்குள் ஆழமாக ஊடுருவி யிருக்கிறது. இது ஒரு தவறான எண்ணம்.

இன்று இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் பலரும் படித்தவர்கள். கிராமப்புறங்களிலும் இந்தத் தலைமுறை விவசாயிகளில் பெரும்பான்மையினர் அடிப்படை கல்வி கற்றவர்களே.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை பெரும்பான்மை இந்திய விவசாயி கள் கல்வி பெறாமலே இருந்தார்கள். இன்று அப்படியில்லை. இன்றைய விவசாயிகள் மண் பரிசோதனை முதல் ரசாயனப் பொருட்கள், உரங் கள், பூச்சிக் கொல்லிகள் வரை அறிந்த வர்களாக இருக்கிறார்கள். மாற்று விவசாய முறைகளையும் அதன் முக் கியத்துவத்தையும் கற்றுக்கொள்வ துடன், இதற்கான சிறப்பு பயிலரங்குகள், களப் பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள்.

‘விவசாயம் என்பது ஒரு தொழில் அல்ல; அது வாழ்க்கை முறை! உற்பத்தியை அதிகப்படுத்துவதைப் பற்றி சிந்தனை செய்யும் அதே நேரம், மக்களின் ஆரோக்கியம் குறித்தும் விவசாயி சிந்திக்கக் கடமைப்பட்டவன்’ என்கிறார் மசானபு ஃபுகோகா.

அதிக உற்பத்தி, அதிக தரம் என நவீன விவசாயம் புதிய பாதையைக் காட்டியபோது, இந்திய விவசாயத்தில் பெரிய மாற்றம் உருவானது. வணிகப் பயிர்கள் அதிகரிக்க தொடங்கின. புதிய வேளாண் கருவிகள் அறிமுகமாயின. இந்த மாற்றத்தின் சாதக, பாதகங்கள் குறித்து இன்றைய விவசாயி நிறைய யோசிக்கிறான். ‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’ என்று ஜே.சி.குமரப்பா சொன்னது அவன் நினைவில் வந்து போகிறது.

விவசாயம் கைவிடப்பட்ட துறை யாக புறமொதுக்கப்படுவதை வேதனை யோடு எதிர்கொள்கிறான். தனது விளைச் சலைக் கொண்டு இடைத்தரகர்கள், வணிகர்கள் அதிகம் சம்பாதிப்பதையும், தனக்கு அடிப்படை ஊதியம்கூட கிடைக் காத நிலை இருப்பதையும் கண்டு வருத்தப்படுகிறான். வேறு எந்தத் துறையிலும் இத்தனை பேர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொள்ளவில்லை. விவசாயத்தில் தான் நடந்திருக்கிறது. இதுதான் நம் காலத்தின் விவசாய சூழல்’’ என்றேன்.

அவர் சென்ற பிறகு உடனடியாக ஜப்பானியரான மசானபு ஃபுகோகா எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தைத் தேடி எடுத்துப் படித்தேன். 1978-ல் இந்தப் புத்தகம் வெளியான பிறகே, உலகம் முழுவதும் இயற்கை விவசாயம் தொடர்பான கவனம் குவிய ஆரம்பித்தது.

இது வேளாண்மையைப் பற்றி மட் டும் பேசும் புத்தகம் மட்டுமில்லை; இயற் கையைப் புரிந்துகொண்டு இணைந்து வாழும் வாழ்க்கை முறையைப் பற்றியும் பேசும் புத்தகம். வேளாண்மை ஒரு மனிதனின் உடலையும் ஆன்மாவையும் முழுமையாகச் செழுமைப்படுத்தும் வழி என்கிறார் ஃபுகோகா.

‘ஒற்றைவைக்கோல் புரட்சி’ புத்தகத் தைப் போலவே இயற்கை விவசாயத் தின் ஆதார புத்தகங்களில் ஒன்று எனக் கொண்டாடப்படுகிறது ’ஒரு வேளாண்மை ஆவணம்’ (An Agricultural Testament ) என்ற புத்தகம். எழுதியவர் ‘சர் ஆல்பிரட் ஹோவர்ட்’.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விவசாயம் படித்த சர் ஆல்பிரட் ஹோவர்ட் இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடு களில் தனது விவசாய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். உலகெங்கும் உள்ள விவசாய வரலாற்றையும், பயிரிடும் முறைகளையும், மண் வளம் குறித்தும் ஆராய்ந்த இவர், தனது கள அனுபவத்தில் கண்ட உண்மைகளைத் தொகுத்து எழுதியதே இந்தப் புத்தகம்.

தொழில்புரட்சிக்குப் பிறகு புதிய வேளாண்கருவிகள் அறிமுகமாயின. ஆகவே உற்பத்தியை அதிகப்படுத்த நவீன அறிவியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக வணிகப் பயிர்களின் எழுச்சியும், உணவுப் பதப்படுத்துதல், ஒட்டு ரகங் களை உருவாக்குவது என விவசாய முறைகளில் நிறைய மாற்றங்கள் உருவா யின. இதனால், விளைச்சல் அதிகமானது டன் அதிக லாபம் கிடைக்கும் தொழிலாக வும் விவசாயம் முன்னிறுத்தப்பட்டது.

இன்னொரு பக்கம் ரசயான உரங் களைப் பயன்படுத்துவதன் காரணமாக மண் வளம் பாதிக்கப்படுகிறது, பூச்சிக் கொல்லி மருந்துகளால் பின்விளைவு கள் ஏற்படுகின்றன என புதுப் பிரச்சனை களும் எழுந்தன.

உரங்கள், பூச்சி மருந்துகளைப் பயன் படுத்தாமல் இயற்கையான மரபு விவசாய முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வேட்கை உண்டானது. இதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நாடுகளிலும் இயற்கை வேளாண்மை மீது தனிக் கவனம் உருவானது.

தனது விவசாய அனுபவத்தைக் கொண்டு ஆல்பிரட் ஹோவர்ட் மண்வளம் சார்ந்தும், இயற்கை உரங்கள் சார்ந்தும் எழுதிய குறிப்புகள் மிக மிக முக்கியமானவை.

அதிக அளவில் ரசாயன உரங் களைப் பயன்படுத்துவதன் காரணமாக மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து, மண் வளம் பாதிக்கப்படுகிறது. மண் வளத்தை அதிகரிக்க, இயற்கை இடுபொருட்களை இடவேண்டும். உயி ரூட்டப்பட்ட மண்ணில்தான் அதிக விளைச்சல் பெற முடியும். அதற்கு தொழு உரம், பசுந்தாள் உரம்… போன்றவற்றைப் பயன் படுத்த வேண்டும். இதனால் மண் ணில் உள்ள நுண்ணுயிர் களின் பெருக்கம் அதிகரித்து அந்த மண் உயிரோட்டம் உள்ள தாக மாறும் என செயல்முறை விளக்கம் அளிக்கிறார்.

நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக் குத் தேவை என்று பலரும் வாதிட்ட போது, பாரம்பரிய உழவுமுறை யான பயிர் சுழற்சி உழவே போது மானது என நிரூபித்துக் காட்டியவர் நம்மாழ்வார். இதைத்தான் ஆல்பிரட் ஹோவர்ட் அறிவியல்பூர்வமாக விளக்கு கிறார்.

இன்று சிக்கிம் மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் நடைபெறுவதற்கு அரசே முன்முயற்சி எடுத்துள்ளது. இது போன்ற அரசின் வெளிப்படையான ஆதரவே இயற்கை விவசாயம் பரவலாக நடைபெறுவதற்குப் பெருந் துணையாக அமையும்.

இயற்கை விவசாயிகள் தங்களுக்கு யார் துணை எனக் கேட்டதற்கு, ‘நீ தனியாக இல்லை; இயற்கை உனக்கு ஆதரவாக இருக்கிறது’ என்றார் நம்மாழ்வார். இதே குரலைத்தான் ஹோவர்ட்டும் எதிரொலிக்கிறார் இந்தப் புத்தகத்தில்.

- இன்னும் வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramiki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x