Published : 08 Mar 2015 02:39 PM
Last Updated : 08 Mar 2015 02:39 PM

ஆவணம்: வானம்பாடியைச் சந்தித்த வானம்பாடி

கவிதையைச் சமூக மாற்றத்துக்கான வடிவமாக்க முயன்ற இதழாக 1970களில் வெளிவந்த ‘வானம்பாடி’ இதழுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. இந்த இதழ் வெளிவருவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே புலவர் த.கோவேந்தனை ஆசிரியராகக் கொண்டு 1957 முதல் 1959 வரை ‘வானம்பாடி’ என்ற பெயரிலேயே கவிதைக்கென ஒரு மாத இதழ் வெளியாகி யுள்ளது பலரும் அறியாத ஒரு செய்தியாகும். இந்த இதழ்த் தொகுப்பைத் தற்போது புலவர் கோவேந்தனின் புதல்வர் கோ.எழில்முத்து தொகுத்து கலைஞன் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, பெருஞ்சித்திரனார் முதல் சாலை இளந்திரையன் வரை மரபுக்கவிதை சார்ந்த பல ஆளுமைகள் இந்த இதழில் பங்களித்துள்ளனர். கவிஞர் புவியரசு தாங்கள் கொண்டு வந்த இதழின் பெயரில் இன்னொரு இதழ் வெளிவந்திருந்த விவரத்தைப் பின்னரே தெரிந்துகொண்டதாகக் கூறுகிறார். ‘வாழிய நீ வானம்பாடி’ என்ற தலைப்பில் இந்த இதழ் தொகுப்புக்குக் கவிஞர் புவியரசு எழுதியிருக்கும் முன்னுரையி லிருந்து சில பகுதிகள்…

1972-ம் ஆண்டு. ஏப்ரல் மாதம் என்று நினைவு. கோவை வெரைட்டி ஹால் சாலையில் எதிர்பாராமல் புலவர் த.கோவேந்தனைச் சந்திக்க நேர்ந்தது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

வெரைட்டிஹால் திரையரங்குக்கு எதிரில்தான் என் மாப்பிள்ளை நடராசன் நடத்திவந்த ‘மலர்விழி’ அச்சகம் இருந்தது. அங்கிருந்துதான் வானம்பாடி என்ற விலையிலாக் கவிமடல் வந்து கொண்டிருந்தது.

அதுவரை மூன்று இதழ்கள் வெளிவந்திருந்தன. வானம்பாடிகள் கூடுமிடமும் அந்த அச்சகமாக இருந்தது. எங்களுக்கும், இதழுக்கும், இயக்கத்துக்கும், அச்சகத்துக்கும் அச் சுறுத்தல்கள் வந்துகொண்டே இருந்தன. இலக்கியவாதிகள் பலரும் அங்குவர அச்சப்பட்டார்கள்.

இந்தச் சூழலில் கவிஞர் எங்களைச் சந்திப்பதற்காகவே வருகை தந்தது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அவரை அச்சகத்துக்கு அழைத்துச் சென்றேன். அவர் எமது வானம்பாடியைப் பாராட்டினார். அவர் சொல்லித்தான் ஐம்பதுகளில் அவர் வானம்பாடி இதழை நடத்திவந்தது தெரியவந்தது. அதை அறியாமல், அதே பெயரில் அதுவும் ஒரு கவிமடலை ஆரம்பித்தது, எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று.

தெரிந்திருந்தால் அவரிடம் ஓர் அனுமதி கேட்டிருக்கக்கூடும். கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால், கவிஞர் கொஞ்சம்கூட வருத்தம் காட்டாமல் பாராட்டிப் பேசியதோடு நன்கொடையும் தந்தார்!

தயக்கத்துடன் அவரிடம் ஒரு கவிதை கேட்டேன்.

“நீங்கள் கடுமையாக மரபுகளைச் சாடுகிறீர்கள். நான் மரபுக்கவிதைதானே தரமுடியும்” என்றார்.

“நாங்கள் மரபே கூடாது என்று சொல்லவில்லை. மரபுக் கவிதை எதுகை மோனை சந்தத்தில் சிக்கி நீர்த்துப் போய்விட்டது. பலருடைய மரபுக் கவிதைகளில் யாப்பமைதி சரியாக இருந்தும் கவித்துவமே இருப்பதில்லை. உள்ளடக்கமும் நிகழ்கால எரியும் பிரச்சினைகளைத் தொடுவதில்லை. அதனால்தான் நாங்கள் புதுக்கவிதைக்குள் புகுந்தோம். வானம்பாடிகளில் பெரும்பாலோர் தமிழாசிரியர்களே. இப்போதுகூட, சில சமயங்களில் யாப்புக்கவிதை எழுதவே செய்கிறோம். அதனால் நீங்கள் தாராளமாக மரபுக்கவிதை தரலாம்” என்றேன்.

அவர் உடனே ஓர் அருமையான கவிதை தந்தார்.

-------------------------

ன்று அவரது வானம்பாடி என்ற கவிதை இதழ்களின் தொகுப்பைக் காணும்போது வியப்பாக இருக்கிறது. எத்தகைய தமிழ் காத்த மேன்மக்கள் எல்லாம் அதில் இடம்பெற்றிருக் கிறார்கள்!

அறிஞர் அண்ணா, டாக்டர் மு.வ. ஆகிய இரு பெருமக்கள் கவிதை எழுதி அனுப்பியிருக்கிறார்கள் என்பது எவ்வளவு வியப்பான அம்சம்! பொன்மொழிகள் எல்லாம் கவிதையில்! நாட்டு நடப்புகள் எல்லாம் கவிதையில்! புத்தக விமர்சனமும் கவிதையில்!

மணிக்கொடி காலம் போல, தமிழிலக் கிய வரலாற்றில் கவிஞர் கோவேந்தனா ரின் வானம்பாடி காலமும், அவர் வரவேற்ற எமது வானம்பாடிப் புதுக்கவிதைக் காலமும் அழியாச்சுவடுகள். இன்னொரு திகைப்பையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன். மூடநம்பிக்கையால் அல்ல என்பதை அழுத்திச் சொல்ல விழைகிறேன்.

1959 மார்ச்சில் கடைசி இதழ் வெளிவந்த பிறகு 13 ஆண்டுகள் கழித்து கவிஞரை நான் சந்தித்தேன். அவர் வெளியிட்ட வானம்பாடி இதழ்கள் 13, எமது வானம்பாடி இதழ்களும் 13.

த.கோவேந்தனின் வானம்பாடி கவிதை இதழ் தொகுப்பு (1957-1959)
பதிப்பாசிரியர்: கோ.எழில்முத்து
கலைஞன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தியாகராய நகர், சென்னை-17
தொடர்புக்கு:044- 2434 5641

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x