Last Updated : 28 Feb, 2015 09:41 AM

 

Published : 28 Feb 2015 09:41 AM
Last Updated : 28 Feb 2015 09:41 AM

களங்கமின்மையைத் தேடி…

‘அதிகம் பயணிக்கும் ஒருவன் / மிகவும் குறைவாகவே தெரிந்துகொள்கிறான்’ என்று ‘தாவோ தே ஜிங்’ நூலில் ஒரு வாக்கியம் வரும். தனக்கு வழங்கப்பட்ட அனுபவ உலகத்தை - அது எத்தனை சிறியதாக இருந்தாலும் - நேர்மையாகவும் தீட்சண்யத்துடனும் சொல்லத் தெரிந்தால் போதும், அவர் பெரிய கலைஞர்தான். “நான் பயணித்த தூரம் குறைவு, பார்த்த இடங்கள் குறைவு” என்று தாழ்ச்சியுடன் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்கிறார் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இயங்கிவரும் வண்ணதாசன்.

வணிக எழுத்துகளைத் தாண்டி, தமிழ் நவீன இலக்கியத்துக்குள் நுழையும் வாசகர்களைப் பூச்சொரிந்து வரவேற்கும் மரமல்லியைப் போன்றது வண்ணதாசனின் படைப்புலகம். லா.ச.ராவை ‘சொல்லின் உபாசகர்’ என்று சொன்னால், வண்ணதாசனை ‘உறவுகளின் உபாசகர்’ என்று சொல்லிவிடலாம். உறவுகளை விடாமல் இயங்கவைக்கும் உயவுப்பொருள் அன்புதானே.

தொலைந்துபோன உயிர்ப்பு

நாம் பார்க்க மறந்துவிட்ட இயற்கை மற்றும் பருவங்களின் நுட்பமான கோலங்கள் மற்றும் மாறுதல்கள், நாம் உற்றுப் பார்க்கத் தவறிவிட்ட நெருக்கமானவர்களின் முகங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகள், நமது அன்றாடத்தில் நாம் காணத் தவறும் தருணங்கள், அசுரவேக வாழ்க்கையின் குரூரத்தின் இடையிலும் பூக்கும் மனிதாபிமானம், நேசம் போன்றவற்றையும் வண்ணதாசன் தனது எழுத்துகள் வழியாகத் தொடர்ந்து கவனிக்க வைக்கிறார்.

கொஞ்சம் முன்பு உயிர்த்திருந்து தொலைந்துபோன ஒரு காலகட்டத்தையும், அப்போது மனிதர்களிடம் நிரம்பியிருந்த சாவகாசத்தையும் உயிர்ப்பையும் வண்ணதாசன் போன்றவர்களின் கதைகள் மட்டுமே ஞாபகத்தில் உறையவைத்திருக்கின்றன. அவரது கதைகள் நாம் மறந்த கள்ளமின்மையையும் மனிதத்தையும் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.

தமிழ் நவீன இலக்கிய மரபில் லா.ச. ராமாமிருதம், தி.ஜானகிராமன் வரிசையில் வருபவர் என்று வண்ணதாசனைச் சொல்ல முடியும். வண்ணதாசனின் பிரதான வெளிப்பாடு சிறுகதைகள்தான். அவர் குறுநாவல் என்ற அளவில் எழுதிய நீண்ட கதை என்றால் அது ‘சின்னு முதல் சின்னு வரை’மட்டுமே. பெண்ணின் அசாதாரணத் தன்மையைக் கிட்டத்தட்ட கடவுள் சொரூபமாக லா.ச.ரா. தனது ‘அபிதா’நாவலில் மாற்றியிருப்பார். வண்ணதாசனோ யதார்த்தத் தளத்திலேயே சின்னு என்ற சீனிவாச லட்சுமி எடுக்கும் ரூபத்தை அருமையான கலை அனுபவமாக மாற்றியிருக்கிறார். வண்ணதாசனின் படைப்புலகம் கொண்ட முழுமை என்றும் ‘சின்னு முதல் சின்னு வரை’குறுநாவலைச் சொல்ல முடியும்.

செல்லும் வழி நினைவுகள்

ஒரு தெருவுக்குள் பத்து வீடுகளுக்கு இடையில் நடக்கும் வாழ்க்கையைத்தான் வண்ணதாசன் கதையாக்கியிருக்கிறார். ‘இந்த தந்தி போஸ்ட் தாண்டி, அந்த முடுக்குக்குள் ஒரு எட்டு எடுத்து வைத்தால்கூடப் போதும்’ என்ற அளவிலான தூரம்தான். ஆனால், ஆண்-பெண் உறவுகள் தொடர்பாக சமூகம் பராமரிக்கும் நியமங்களும் மனத்தடைகளும் சின்னுவைப் பார்க்க விடாமல் கதைசொல்லியை முடக்க முயற்சி செய்கின்றன.

1980-களில் இருந்த தமிழ்நாட்டுச் சிறுநகர வாழ்க்கையைப் பார்த்தவர்கள் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய பொது அம்சங்கள் இந்தக் குறுநாவலில் உண்டு. சிலோன் ரேடியோ வீடுகளுக்கு இடையிலான பந்தத்தை மீட்டிக்கொண்டிருந்த காலத்தில் எழுதப்படுகிறது. கதைசொல்லியும், அவன் மனைவியும், சிறுமகளும் சின்னுவிடம் துக்கம் கேட்க வீட்டிலிருந்து கிளம்பி இளம் மாலையில் தெருவில் நடக்கத் தொடங்குகிறார்கள். பல பத்தாண்டுகளாக மாறாமல் இருக்கும் வாழ்க்கையையும், மாறாமல் இருக்கும் மனிதர்களையும் விசாரித்துக்கொண்டே கடக்கின்றனர். மாலை, கருக்கலை அடைகிறது. அந்த இருட்டு சின்னுவைப் பார்க்க இயலாமல் ஆக்குகிறது.

இந்தச் சிறு சம்பவத்துக்குள் கதைசொல்லியின் மனம் எத்தனையோ ஆண்டுகளைத் தாண்டி ஒளிவேகம் கொள்கிறது. எத்தனையோ நினைவுகளை அசைபோடுகிறது.

நிஜமான இருட்டு மற்றும் நிஜமான வெளிச்சத்தைத் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டதை நம்மிடம் பகிர்கிறது. “நிஜமான வெளிச்சம் என்பதை தினகரியோ அவள் வயதுப் பிள்ளைகளோ அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. விடிகிற, அடைகிற இதுபோன்ற நேரத்தின் வெளிச்சத்தை மிக நிச்சயமாக அறிந்திருக்கவில்லை. காலை என்பது என்ன என்ற கேள்விக்கான பதில்கள் அவர்களிடம் சூரியனைச் சம்பந்தப்படுத்தித் தொடங்குமா என்பதே சந்தேகம். நிறையச் சம்பந்தங்களில் இருந்து அவர்கள் விடைபெற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்.

வண்ணதாசனின் படைப்புகளிலேயே மனித மனதில் உறைந்திருக்கும் வன்முறையையும் அழிவு மூர்க்கத்தையும் பல்வேறு படிமங்களால் விவரிக்கும் படைப்பு ‘சின்னு முதல் சின்னுதான்’. பேரனைக் குளிப்பாட்டி விட்டு, வாய்க்காலில் முங்கி எழுந்து தாமரைப் பூவுடன் கரையேறும் தாத்தாவின் சித்திரமும் இப்படைப்பில் உண்டு. “ஏன் இப்படி வேட்டையாடலும், கோரைப் பல்லும் ரத்த நசநசப்பும், கவ்வி இழுத்தலும் என்றெல்லாம் தோன்றுகிறது” என்கிறார்.

பெண் ஆணுக்கு இச்சைக்குரியவளாக இருக்கிறாள். ஒடுக்குவதற்கு எளிய உயிராகத் தெரிகிறாள். பெண்ணைச் சகியாகப் பாவிப்பவர்களுக்கு மனுஷியாக இருக்கிறாள். பெண்ணை அசாதாரணமாய்ப் பார்ப்பவர்களுக்கு அவள் சக்தி ரூபமாக இருக்கிறாள். சின்னு, சமூகத்தின் கண்களில் எப்படி இருந்தால் என்ன? அவள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தால் என்ன? அவளை சக்திரூபமாக மாற்றியிருக்கிறார் வண்ணதாசன்.

1991-ல் வெளிவந்த இந்தக் குறுநாவல் இப்போது மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 25 ஆண்டுகளில் குன்றா உயிர்ப்புடனே இந்த நூல் துடித்துக் கொண்டிருக்கிறது.

சின்னு முதல் சின்னு வரை
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம், புது எண் 77,
53-வது தெரு, 9-வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை- 600 083.
தொலைபேசி: 044- 24896979
விலை: ரூ.60

ஷங்கர்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x