Published : 07 Feb 2015 10:43 AM
Last Updated : 07 Feb 2015 10:43 AM
ஒரு நோயாளியாக இருந்து டாக்டரைப் பார்த்திருக்கும் நமக்கு டாக்டராக இருந்து நோயாளிகளைப் பார்த்த கோணத்தை நகைச்சுவை யாக, மனம் நோகாமல் சித்தரித்திருக்கிறார் டாக்டர் ராமானுஜம். படிக்கும்போது மட்டுமல்ல தொழில் செய்யும்போதும் டாக்டர்களுக்கு இருக்க வேண்டிய நினைவாற்றல், மருத்துவத்தில் புகுந்து விளையாடும் மர்ஃபியின் விதிகள், டாக்டர்களின் பிரசித்தி பெற்ற கையெழுத்து, எண்களாலும் வேறு குறியீடுகளாலும் நாம் அழைக்கப்படும்போது சுயம் அழிவதையும், தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்குவதில் உள்ள சிக்கல்களையும் நோயாளியைப் பார்க்க வருகிறவர்கள் செய்கிற அலப்பறையையும் அச்சுஅசலாக வடித்திருக்கிறார்.
மூட்டுவலி என்றால் ஸ்டெதாஸ்கோப்பை மூட்டில் வைத்துப் பார்க்காத டாக்டர்களை ஒரு பாட்டி குறைத்து மதிப்பிட்டிருந்தபோது புத்திசாலியான டாக்டர் மூட்டில் வைத்தது அல்லாமல், நல்லா மூச்சை இழுத்து விடுங்க என்று சொல்லி நல்ல பேர் வாங்கியதை ரசனையுடன் பதிவு செய்திருக்கிறார். இப்படி நோயாளிகளின் விருப்பத்தைப் பூர்த்திசெய்வதுதான் சாமர்த்தியம் என்பதைச் சுட்டவே நூலுக்கும் நே(ா)யர் விருப்பம் என்று நாமகரணம் சூட்டியிருக்கிறார்.
டாக்டர்களைப் பொது நிகழ்ச்சிக்கு அழைக்கும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய நேரத்தை வீணடிப்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார். ஆங்கில, தமிழ் சிலேடையும் பிரமாதம். டாக்டர் ராமானுஜம் மருத்துவ நூல்கள் தவிரவும் நிறையப் படிக்கிறார், சினிமா பார்க்கிறார் என்பது ஆங்காங்கே தெரிகிறது. டாக்டர்கள், நோயாளிகள், மருத்துவ உலகம் மூன்றையும் வெவ்வேறு கோணங்களில் யார் மனதும் புண்படாமல் சொல்லி எழுத்துலகுக்குள் நுழைந்திருக்கும் இந்த இளம் டாக்டருக்கு நல்வரவு!
நோயர் விருப்பம்
டாக்டர் ஜி. ராமானுஜம் எம்.டி.,
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18,
தொடர்புக்கு: 044- 24332424 விலை: ரூ.50.
- ரங்கு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT