Published : 21 Feb 2015 12:42 PM
Last Updated : 21 Feb 2015 12:42 PM

இப்போது படிப்பதும் எழுதுவதும் - எழுத்தாளர் வெளி. ரங்கராஜன்

யூமா வாசுகி மொழிபெயர்த்த சார்லி சாப்ளினின் ‘என் கதை’ நூலைப் படித்தேன். என்சிபிஎச் பதிப்பகம் வெளியிட்ட நூல் இது. சார்லி சாப்ளின் என்ற கலை ஆளுமை உருவான பின்னணி அருமையாக இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சாப்ளினின் அம்மா சொல்லும் கதைகளும், தான் அன்றாடம் பார்த்த மனிதர்களைப் பற்றி வீட்டுக்கு வந்து குழந்தைகளிடம் பேசும்போது அவர் காண்பிக்கும் உடல்மொழியும் சைகைகளும்தான் தன்னை நடிகனாக ஆரம்பத்தில் உருவாக்கியது என்கிறார் சாப்ளின்.

17-ம் நூற்றாண்டில் புகழேந்திப் புலவர் எழுதிய அல்லி அரசாணி மாலை நூலை, சமகால நாடகப் பிரதியாக எழுத முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். மகாபாரதத்தில் அல்லிக்கும் அர்ஜுனனுக்கும் வரும் பிணக்குகளை அடிப்படையாகக் கொண்ட நூல் அது. அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் கோழைகளாகப் பார்க்கிறாள் அல்லி. அவளுக்கு முன்னால் காவிய நாயகர்கள் சாதாரணர்களாக மாறிவிடுகிறார்கள். பெண்ணை மையமாகக் கொண்ட ஒரு நிகழ்த்துப் பிரதியாக அதை மாற்றும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன்.

சுண்டல்

திரைப்படங்கள்குறித்து காத்திரமான விமர்சனங்களையும் தொடர்களையும் வெளியிட்ட பத்திரிகைகளில் மிக முக்கியமானது ‘காட்சிப்பிழை’. குறிப்பாக, தமிழில் வெளியான வணிகத் திரைப்படங்கள்குறித்து ஆழமான கட்டுரைகளை வெளியிட்ட இதழ் அது. சிறுபத்திரிகைகளுக்கு நிகழும் விபத்து, ‘காட்சிப்பிழை’க்கும் நேர்ந்திருக்கிறது. ஆம். ‘காட்சிப்பிழை’ நிறுத்தப்படுவதாக, அதன் ஆசிரியர் சுபகுணராஜன் ஃபேஸ்புக்கில் அறிவித்திருக்கிறார். இந்த இதழின் சந்தாதாரர்களுக்கு சந்தா திரும்ப அனுப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ராஜன்குறை, பெருமாள்முருகன், ப. ஜீவசுந்தரி, சுந்தர்காளி, கலாப்ரியா என்று பலரது பங்கேற்பில் பிரகாசித்த ‘காட்சிப்பிழை’ நிறுத்தப்படுவது திரைக்காதலர்களுக்கு அதிர்ச்சிதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x