Published : 22 Feb 2015 03:17 PM
Last Updated : 22 Feb 2015 03:17 PM
பிப்ரவரி 19 - ஜி.நாகராஜன் நினைவு நாள்
சில எழுத்தாளர்கள் தங்கள் ‘பொன்மொழி’களைத் தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் ‘பொன் மொழி’களே இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில ‘பொன் மொழி’களை உதிர்க்கிறேன்.
# உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்.
# மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்று குறையும்.
# தன்மான உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் அளவுக்குத்தான் தேசபக்தியைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது.
# தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்.
# மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன.
# எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டம் இருந்தே தீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்.
# ‘மனிதாபிமான’ உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனிதத் துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தைப் படைக்க வல்லது. இல்லையெனில் ‘மேக்பெத்’ என்ற நாடகமோ ‘கலிவரின் யாத்திரை’ என்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது.
# இயற்கையிலேயே பீறிட்டு வெடிக்கும் சமுதாயப் புரட்சியை வரவேற்க வேண்டிய நாம், கன தனவான்கள் பதவியில் இருந்துகொண்டு ‘புரட்சி’ பேசுவதைச் சகித்துக்கொண்டிருக்கிறோம்.
# தனது கலைப் படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்.
# மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT