Published : 16 Feb 2015 11:51 AM
Last Updated : 16 Feb 2015 11:51 AM

சங்கத்திலும் சிரித்த பூனை

பூனை தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அழகாகச் சிரிக்கவும் செய்யுமாம். லூயி கரோல் எழுதிய ‘ஆலிஸின் அற்புத உலகம்’ (Alice's Adventures in Wonderland) எனும் நாவலில் இவ்வாறு ஒரு குறிப்பு வருகின்றது.

இருக்கையில் அமர்ந்திருந்தார் சீமாட்டி. அவர் ஒரு குழந்தையை உபசரித்துக்கொண்டிருந்தார். சமையல்காரி அண்டா நிறைய இருந்த சூப்பைக் கரண்டியால் கலக்கிக்கொண்டிருந்தாள். “சூப்பில் மிளகு அதிகமாகிவிட்டது” என்று தும்மலை அடக்கிக்கொண்டு தானே சொல்லிக்கொண்டாள் ஆலிஸ். சீமாட்டி அடிக்கடி தும்மிக்கொண்டிருந்தார். குழந்தை விடாமல் அழுதுகொண்டிருந்தது. இதைப் பார்த்த அங்கிருந்த பூனை சிரித்துக்கொண்டிருந்தது.

“மன்னிக்கவும் இந்தப் பூனை ஏன் இப்படி சிரிக்கிறது?” என்று ஆலிஸ் கேட்டாள்.

“செஷ்யர் பூனை. அது அப்படித்தான் சிரிக்கும்” என்றாள் சீமாட்டி.

“அப்படியா! பூனைகள் சிரிக்கும் என்பது எனக்குத் தெரியாது” என்றாள் ஆலிஸ்.

“எல்லாப் பூனைகளும் சிரிக்கும்” என்றார் சீமாட்டி.

“எனக்குத் தெரியாது” என்றாள் ஆலிஸ்.

“நீ சிறிய பெண்தானே. உனக்கு எதுவும் தெரியாது” என்றார் சீமாட்டி.

நாவலில் வரும் ஆலிஸுக்கு மட்டுமல்ல; நம்மில் பலருக்கும் பூனை சிரிக்கும் என்பது வியப்புக்குரியது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது சங்கப் புலவர் ஒருவர் பூனை சிரித்தது பற்றிய குறிப்பொன்றை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். அவர் ஒக்கூர் மாசாத்தியார் எனும் பெண் கவிஞர்.

மாசாத்தியார் ‘காட்டுப் பூனை’ ஒன்று சிரித்தது பற்றிப் பதிவுசெய்திருக்கிறார். குறுந்தொகைப் பாடலில் வரும் பூனை சிரித்தது பற்றிய

அக்குறிப்பு முல்லைப் பூவின் மலர்ச்சியுடன் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. குறுந்தொகையுள் உள்ள அப்பாடல் (குறு. 220)

பழமழைக் கலித்த புதுப்புன வரகின்

இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை

இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,

வெருகு சிரித்தன்ன, பசுவீ மென் பிணிக்

குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்

வண்டுசூழ் மாலையும், வாரார்;

கண்டிசின் தோழி! பொருட் பிரிந்தோரே

பொருளீட்டச் சென்ற கணவர் இல்லம் திரும்புவதாகச் சொல்லிய காலம் வந்தும், அவர் இல்லம் திரும்பாமை கண்டு மனைவியொருத்தி, தோழியிடம் துயரை உரைப்பதாக அமைந்த பாடல் இது.

இப்பாடலின் பொருள்:

‘அன்புத் தோழியே! இளமழையல்லாத, பல நாட்களாகப் பெய்த முதுமழையினால், புதிதாகத் திருத்திய புன்செய் நிலத்தில் விதைக்கப்பட்ட வரகு வளர்ந்து தழைத்தது. ஆண் மான்கள், அவற்றின் கதிர்கள் அரியப்பட்ட, தாள்களில் தழைத்த, இளைய கொழுந்துகளை உண்ணும். வரகின் தாள்களுக்கு இடையே முல்லைக் கொடி பூத்திருக்கும். முல்லையின் செவ்விப் பூவின், மெல்லிய பொதிதலையுடைய சிறிய அரும்புகள், காட்டுப் பூனை சிரித்தாற்போல் காட்சியளிக்கும். அவற்றோடு மணம் பொருந்திய பிற மலர்களும் மலர்ந்துள்ள முல்லை நிலத்தில், வண்டுகள் தேனுண்பதற்காக அம்மலர்களைச் சுற்றி வரும். இத்தகைய மாலைக் காலத்திலும், பொருள் ஈட்டி வருவதற்காகச் சென்ற நம் காதலர் வாராராயினர். இதனைக் காண்பாயாக.’

வரகு விதைத்து அறுவடை செய்த பின்னர், மழை பெய்தால் வரகுத் தாள்கள் மீண்டும் துளிர்விட்டு வளரச் செய்யும். அந்தப் புதிய தாள்களை மான்கள் உண்டுள்ளன. வரகு வயலின் ஓரத்தில் மழையினால் முல்லை மலர்களும் பூத்துக் குலுங்கியுள்ளன. புது மழையினால் பூத்துக் குலுங்கும் அந்த முல்லைப் பூ, காட்டுப் பூனை சிரித்ததுபோல் இருந்துள்ளது. அந்த முல்லைப் பூக்களில் மாலைப் பொழுதில் வண்டுகளும் தேனுண்டு மகிழ்ந்துள்ளன. ‘மழை பெய்தது’ எனும் குறிப்பால் கார்காலமும், ‘முல்லைப் பூத்துக் குலுங்கியது’ என்பதால் மாலைக் காலமும் இப்பாடலில் சுட்டப்படுகின்றன.

வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த இரு படைப்பாளிகள் பூனை சிரித்தது பற்றிய ஒரு குறிப்பைப் பதிவு செய்திருப்பது உவகையூட்டும் செய்தி அல்லவா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x