Published : 08 Jan 2015 11:47 AM
Last Updated : 08 Jan 2015 11:47 AM

வீடில்லாப் புத்தகங்கள் 16 - புகழ் எனும் பிச்சை

புகழ் எனும் பிச்சை

அரசியல்வாதிகளில் சிலர் தேர்ந்த படிப்பாளிகளாக இருப்பதை நான் அறிவேன். அவர்கள் தேடித் தேடி வாசிக்க கூடியவர்கள். தான் படித்த சிறந்த புத்தகங்களை நண்பர்களுக்கு வாசிக்கத் தருபவர்கள். தனது பயணத்தில் எப்போதும் கூடவே சில புத்தகங்களை வைத்திருப்பவர்கள். அப்படியான ஓர் அரிய மனிதர், தமிழக அமைச்சராகவும் சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும் இருந்த, மறைந்த கா.காளிமுத்து.

பயணத்தில் அவர் எடுத்துச் செல்லும் சூட்கேஸில் ஒரேயொரு மாற்றுஉடையும் நாலைந்து புத்தகங்களும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேர்ந்தப் புலமை கொண்டவர். சிறந்த பேச்சாளர். புத்தகங்களை தேடித் தேடி படித்தவர். எனக்கு நிறையப் புத்தகங்களைப் படிக்க தந்திருக்கிறார்.

அவர் ஒருமுறை, ’டெல்லி விமான நிலையத்தில் வாங்கிப் படித்தேன். நீங்கள் அவசியம் படியுங்கள். ஓய்வான நேரத்தில் இதுகுறித்துப் பேசுவோம்’ என ஒரு புத்தகத்தை இரவு 11 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

ஒரு வாரத்துக்கு முன்புதான் வெளியாகியிருந்த ஓர் ஆங்கில நாவல் அது. பல்ப் பிக்ஷன் எனப்படும் ஜனரஞ்சக நாவல் போலிருந்தது. அந்தப் புத்தகத்தை இரண்டு நாளில் படித்து முடித்தபோது வியப்பாக இருந்தது. இப்படி ஒரு நாவலை எழுதுவதற்கு அந்த எழுத்தாளர் எவ்வளவு ஆராய்ச்சி செய்திருப்பார்… என நினைத்துக் கொண்டிருந்தேன்.

வார இறுதியில், ’இரவு உணவு சேர்ந்து சாப்பிடலாம்…’ என அழைத்தார் காளிமுத்து. அன்றிரவு அந்த நாவலில் இடம்பெற்றுள்ள ஓவியம் பற்றியும் இயேசுவின் ’கடைசி விருந்து’ பற்றியும் பைபிள் சார்ந்து எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகள் குறித்தும் நிறைய சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த நாவலின் பாதிப்பில் கூடுதலாக நிறைய தேடிப் படித்திருக்கிறார் என்பது புரிந்தது. சட்டமன்றப் பணிகள், கட்சி சார்ந்த வேலைகள், இடைவிடாத பயணம் இத்தனைக்கும் நடுவில் எப்படி, இவ்வளவு படிக்கிறார்… என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்றிரவு சொன்னார், ’இந்த நாவல் மிகவும் பேசப்படும் என நினைக்கிறேன். இந்த வருஷம் நான் படித்த முக்கிய நாவல் இதுவே’. ஆருடம் போல அவர் சொன்ன புத்தகம் எது தெரியுமா? ’டாம் பிரவுன்’ எழுதிய ’டாவின்சி கோட்’. அந்த நாவல் வெளியான சில தினங்களிலேயே அதை வாசித்துவிட்டு, ’இது பெரும்புகழ் பெறும்’ என அவரால் கணிக்கமுடிந்தது என்றால்… அவரது வாசிப்பின் தரம் எப்படியானது என்று பாருங்கள்.

பின்னாளில் உலகமே ’டாவின்சி கோட்’ நாவலைக் கொண்டாடியது. சர்ச்சைகளும் வாதங்களும் உருவாயின. தேர்ந்த வாசிப்பு உள்ளவர்களின் தனித்திறன் நல்லப் புத்தகங்களை உடனே அடையாளம் கண்டுவிடுவதுதான்!

காளிமுத்து ஒருமுறை தாகூரின் ’வழி மாறிய பறவைகள்’ (Stray Birds) என்ற கவிதை தொகுப்பினைக் கொடுத்து, ‘இது உனக்குப் பிடிக்கும். வாசித்துப் பார்…’ என்று சொன்னார்.

புத்தகத்தின் முகப்பில் 1926-ம் வருஷம் வெளியான பதிப்பு என அச்சிடப்பட்டிருந்தது. ஏதாவது சாலையோர கடையில்தான் அவரும் இதை வாங்கியிருக்கக் கூடும். அந்தப் புத்தகம் தாகூர் எழுதிய ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பாகும்.

புரட்டிப் படிக்கத் தொடங்கியதும் வியந்துபோனேன். அத்தனையும் அபாரமான கவிதைகள்! தாகூரின் நோபல் பரிசுப் பெற்ற கவிதைகளான ’கீதாஞ்சலி’யைப் படித்தபோதுகூட… இவ்வளவு நெருக்கம் உருவாகவில்லை. இவையே தாகூரின் மகத்தான கவிதைகள் எனத் தோன்றியது.

’புகழ்

என்னை அவமானப்படுத்துகிறது

ஏனென்றால் அது ரகசியமாய்…

நான் எடுத்த பிச்சை’

என்ற கவிதை வரியை அந்தப் புத்தகத்தில் படித்தபோது… ’அட, இது தாகூரின் கவிதையா’ என ஆச்சர்யமாக இருந்தது. காரணம், இதை எனது கல்லூரி நாட்களில் ஒரு மேடைப்பேச்சின்போது கேட்டிருக்கிறேன். அப்போது இந்த வரியை எழுதியவர் ’மகாகவி தாகூர்’ என்று தெரியாது. பேச்சாளர் அதை தன்னுடைய சொந்தக் கவிதையைப் போல சொல்லி கைதட்டு வாங்கினார்.

தாகூரின், ’வழி மாறிய பறவைகள்’ ஜப்பானிய ஹைக்கூ மரபில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. 1916-ம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. இதில் உள்ள சில கவிதைகள் தாகூரால் நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன.

1916-ம் ஆண்டு தாகூர் ஜப்பானுக்குச் சென்று உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். தனது ஜப்பானிய பயண அனுபவங்கள் குறித்து தாகூர் விரிவான கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

’ஹைக்கூ’ ஜப்பானின் மிகப் புகழ் பெற்ற கவிதை வடிவம். மூன்று வரிகளில் 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் மரபான கவிதை வடிவம் அது. இதனை சொற்களால் வரையப்படும் ஓவியம் என்றும் கூறுகிறார்கள், மிகக் குறைந்த சொற்களைக் கொண்டு பல்வேறு அர்த்த நிலைகளை உருவாக்கிக் காட்டுவதே இந்தக் கவிதைகளின் சிறப்பு.

தமிழில் இன்று சிறப்பாக ’ஹைக்கூ’ கவிதைகள் பலராலும் எழுதப்படுகின்றன. ’ஹைக்கூ’ கவிதைகள் குறித்து மகாகவி பாரதி வியந்து எழுதியிருக்கிறார். 1916-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி வெளியான ’சுதேசிமித்ரன்’ நாளேட்டில் ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் பாரதி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.

1914-ல் நோபல் பரிசுப் பெற்ற தாகூர் 1916-ம் ஆண்டு தனது அமெரிக்கப் பயணத்தின் இடையில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக ஜப்பான் சென்றார். ’பவுத்த ஞானத்தையும் கலைகளையும் உள்வாங்கிக் கொண்ட ஜப்பானிய மரபு, இந்திய கலைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது’ என தனது உரையில் தாகூர் குறிப்பிடுகிறார்.

’ஜென்’ கவிதைகளின் முன்னோடியான பாஷோவின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தாகூர், முக்கியமான கவிதைகளை தானே வங்காளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இயற்கையின் பேரமைதியை, அழகை வியந்து பாடும் ஜப்பானிய ஹைக்கூவின் பாதிப்பில் தாகூர் எழுதிய குறுங்கவிதைகள் அற்புதமான அனுபவத்தை தருகின்றன.

’குளத்தைப் பார்த்து சொன்னது

பனித் துளி

நான் இலைமீதிருக்கும் சிறுதுளி.

நீ தாமரை இலையின் அடியில் இருக்கும்

பெரிய துளி’

••

’கனியே…

இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறாய்

என்றது பூ.

உன் இதயத்தில்தான் ஒளிந்திருக்கிறேன்… பூவே

என்றது கனி’

••

மரபையும் நவீனத்தையும் சரியாக உள்வாங்கிக் கொண்டு வளர்ந்து வரும் ஜப்பானே, இந்தியா செல்லவேண்டிய திசையாகும் என்பதை தாகூர் முழுமையாக உணர்ந்திருக்கிறார். அந்தப் பாதிப்பில் உருவானவையே இக்கவிதைகள் என புகழாரம் சூட்டுகிறார் நோபல் பரிசுப் பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்.

தாகூரின் ’ஹைக்கூ’ கவிதைகள் சீன மொழியில் 1920-களிலே மொழியாக்கம் செய்யப்பட்டன. இன்றும் சீனாவின் இளம்கவிஞர்களுக்கு தாகூரின் கவிதைகளே வழிகாட்டுபவையாக இருக்கின்றன என்கிறார்கள். தாகூரின் ’ஹைக்கூ’ கவிதைகளில் நாற்பதுக்கும் மேற்பட்டவை ’செம்மலர்’ ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

மீதமிருக்கும் கவிதைகளையும் அவர் மொழிபெயர்த்து தனிநூலாக வெளியிட்டால் தமிழ் இலக்கியத்துக்கு சிறந்த பங்களிப்பாக இருக்கும்.

இன்னும் வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x