Last Updated : 11 Jan, 2015 05:46 PM

 

Published : 11 Jan 2015 05:46 PM
Last Updated : 11 Jan 2015 05:46 PM

ஜெருசலேம் - ஒரு நகரத்தின் நான்காயிரமாண்டு வரலாறு

ஜெருசலேம் : உலகத்தின் வரலாறு’ என்னும் இந்தப் புத்தகத்தின் நவீன ஜெருசலேம் நகரத்தின் வரலாற்றைச் சொல்லும் புத்தகம். இது கிறித்துவத்தையோ யூதத்தையோ இஸ்லாத்தையோ சித்திரிப்பது அல்ல. மாறாக நவீனக் காலகட்டத்தின் ஜெருசலேத்தின் வரலாற்றை மட்டும் சொல்கிறது.

பிரிட்டிஷ் பத்திரிகையாளர் சைமன் சிபாக் மாண்டிஃபையர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். 2011-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் புத்தகம் இப்போது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டித் தமிழில் சந்தியா வெளியீடாக வரவுள்ளது. அதன் முன்னுரையில் இருந்து ஒரு பகுதி...

தேவாலயம் கட்டுவதற்குத் தோண்டும் இடத்தில் குளங்குளமாக எலும்புகள். தளபதிகளும் பணியாட்களும் தம் ராஜ விசுவாசத்தை அரசருக்கு நிரூபிக்க விரல்களை வெட்டிப் பரிசளிக்க வேண்டும். அவருக்குக் கோபம் வந்தால் மூக்கறுத்தல், காதறுத்தல், கையை, புஜத்தைத் தரித்து எறிதல் என்பது வேந்தரின் பொழுதுபோக்கு. அந்த அரண்மனையில் அங்கம் சிதைவுபடாமல் முழு உடலுடன் இருப்பவர் அரசனைத் தவிர வேறு யாரும் இல்லை என்கிறார் அந்த அரசவைக்குச் சென்றுவந்த தூதுவர்.

கலிகுலா தன் சகோதரியையே மணந்து அவளது கருப்பையிலிருந்த குழந்தையைப் பிடுங்கி எடுத்தான் என்றும் கூறப்படுகிறது. தனது ஆசைநாயகிகளின் கழுத்தில் முத்த மிட்டுக்கொண்டே ‘இந்த அழகான கழுத்து நான் விரும்பும் நேரத்தில் வெட்டப்படும்’ என்று கூறுவது போலவே தன் ஆலோசகர்களிடம் “என் கண்ஜாடையில் ஒற்றைத் தலையசைப்பின் மூலம் இந்த இடத்திலேயே உங்கள் கழுத்து அறுபடும்” என்று கூறுவது வழக்கம்.

அவர் அடிக்கடி விரும்பி உச்சரிக்கும் வாசகம் “ரோமுக்கு ஒரே ஒரு கழுத்து மட்டும் இருந்திருந்தால்” என்பதுதான். கி.பி 30களின் இறுதியில் இப்படிச் சொன்ன ரோமானியப் பேரரசன் கலிகுலா... தானும் சொந்த மெய்க்காவலர்களின் வாளுக்கு இரையாகித்தான் செத்தானென்று அந்தக் கதையின் சுற்றை முழுமை செய்து தன் எழுத்தில் ஒரு தனித்துவமான இடத்தை அடைகிறார் மாண்ட்டிஃபையர்.

யாரையும் விதந்தோதுவதற்காகவோ, எதையும் கீழ்மைப்படுத்தவோ எழுதப்பட்டதாக இல்லாமல் ஜெருசலேம் நகரம் ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் எப்படியிருந்தது; அதன் அரண்மதிலை யார் கட்டினார்கள்; எந்தக் காலத்தில் யாரால் அப்பகுதி சிதைக்கப்பட்டது; முந்நொடி வரை தங்களுக்கு இன்னது நடக்கும் என்று அறியாத நிலையிலேயே மக்கள் வெட்டிச் சின்னாபின்னமாக்கப்படுவது; வீடுகள் தீக்கிரையாவது; மதிலுக்கு அப்பால் தூக்கி வீசப்படுவது; கையில் எந்த உடைமையும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மைல்கள் தூரம் வேற்று நிலத்துக்கு நடத்தி அழைத்துச் செல்லப்படுவது; வேற்று நிலத்தில் இருந்தபடியே பூர்வ நிலத்தின் திசைநோக்கி மௌனமாக அழுவது; அவர்களது துயரப் பாடலைக் கேட்டு மொழிபுரியாத மக்களும் துக்கத்தின் பாரத்தைப் பகிர்ந்துகொள்வது என அடுத்தடுத்து காவியக் காட்சிகளாகவே பதிகிறார் மாண்ட்டிஃபையர்.

சாமான்ய மக்களின் துயரங்களுக்குக் காவிய அழுத்தம் தரும் இதே மாண்ட்டிஃபையர் ஜெருசலேமுடன் நெருங்கிய தொடர்புடைய காவிய நாயகர்களாகிய ஏசுவையும் முகமது நபியையும் சாமான்ய ஜீவிகளாக நம்முடன் உலாவச் செய்கிறார்.

தன் பிரச்சாரத்தின் மூலம் பிரபலமடைந்துவரும் ஏசுவைக் கண்டு மிரண்டு அவரைக் கைதுசெய்து, ஏரோது ஆன்டிபஸிடம் அனுப்பிவைக்கிறான் பிலாத்து. ஏசுவுக்கு ஒரு அரசனுக்குரிய அங்கி அணிவித்து ‘நீர் யூதர்களின் அரசரோ’ என்று கேலியாகச் சீண்டிப் பார்க்கிறான் ஏரோது. அவரை ஏதேனும் வித்தைகள் செய்து காட்டுமாறு கேட்கிறான். ஏற்கனவே அந்த நரிமீது எரிச்சலுற்றிருந்த ஏசு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

ஏசுவைச் சாதாரண ஒருவராகவே மதித்து திருடர்கள் இருவருடன் சேர்த்தே விசாரித்துள்ளான். பிலாத்து இனம்புரியாத அச்ச மனதுடன் இருந்தான்.

ஏசு சிலுவையில் அறையப்படுவார் என்று தீர்ப்பளிக்கப்பட்டதும் பிலாத்து, நீரைக் கையில் அள்ளி மக்கள் கூட்டத்தினரிடையே கையைக் கழுவிக்கொண்டே ‘நான் இந்த நியாயவானின் ரத்தக்கறை படியாதவன், குற்றமற்றவன்’ என்று கூறினான்.

அங்கு கூடியிருந்தோர் ‘அவரது ரத்தம் எங்கள் மீதும், எங்களின் பிள்ளைகள் மீதும் படியட்டும்’ என்று கூவினர்.

நிசான் மாதம் 14-ம் நாள் காலை அல்லது 33-ம் ஆண்டு வெள்ளிக்கிழமை மூன்றாம் நாள் கசையால் அடித்து, ரத்தம் சிந்தியபடியே அழைத்து வரப்பட்டார் ஏசு.

மரணதண்டனை நிறைவேற்றத்துக் குரிய, லத்தீனில் ‘பட்டி புலம்’ என்றழைக்கப்படும் சிலுவையைச் சுமக்கச் செய்து மற்றுமிரு பலியாட்களுடன் ஏசு கோட்டைச் சிறைக்கு வெளியிலிருந்து மேல்நகரத்தின் வீதிகள் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது நிலையைக் கண்ட பெண்கள் அழுது புலம்பினர். சிலுவையைச் சுமந்து செல்ல உதவுமாறு சிரீனைச் சேர்ந்த சைரன் என்பவரிடம் கூறினர். அதற்கு ஏசு, “ஜெருசலேமின் புதல்வியரே... நீங்கள் எனக்காகக் கண்ணீர் சிந்தாதீர்கள். அழுவதானால் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். ஏனெனில் ஊழி இறுதிநாள் நெருங்கிவிட்டது. அந்த நாட்கள் இதோ வந்து விட்டன” என்று கூறினார். மிகுபுனைவற்ற யதார்த்தமான பதிவு இது.

ஏசுவுக்கு முன்னும் பின்னும் எத்தனையோ சிலுவையேற்றங்கள் நடந்திருக்கின்றன. ஸ்பார்டகஸ் எழுச்சியின் போது 6000 பேரைச் சிலுவையில் ஏற்றிக் கொன்றனர் ஆட்சியாளர்கள்.

ஆனால் ஏசு மட்டுமே சகல தரப்பினர் மத்தியிலும் தனக்கு ஆதரவாளர்களைப் பெற்றிருந்தார். அவர் யூத மதத்துக்குள்ளேயே சில சீர்திருத்தங்களைத்தான் கொண்டுவர முனைந்தார். அவரது நடவடிக்கையில் தீவிரம் இல்லையென்றோ, பணத்துக்கு ஆசைப்பட்டோதான் காட்டிக் கொடுக்கப்பட்டார்.

ஏசுவின் பற்றாளர்கள்தான் யூத மதத்துக்கு மாற்றாகக் கிறித்துவத்தை மதநிறுவனமாக அல்லாமல் கோட்பாடாக நிறுவியுள்ளனர். பிற்காலத்தில் அக்கோட்பாடு ரோமானியப் பேரரசால் அரசியல் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்டதால் காலப்போக்கில் மதமாக மாற்றப்பட்டது. சுன்னத் செய்தல் தவிர்த்த மற்ற பல பழக்க வழக்கங்களிலும், பண்டிகைக் கொண்டாட்ட முறைகளிலும் யூத மதத்தின் கூறுகள் கிறித்துவத்திலும் பின்பற்றப்படுகின்றன என்ற உண்மை, இப்பிரதியை நுணுகி வாசிக்கையில் நமக்குப் புலனாகும்.

ஜெருசலேம்- உலகத்தின் வரலாறு

சைமன் சிபாக் மாண்டிஃபையர்

தமிழில்: ச. சரணவன், அனுராதா ரமேஷ், சந்தியா நடராஜன்

வெளியீடு: சந்தியா பதிப்பகம்.

தொடர்புக்கு: 044- 24896979

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x